பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

165

அப்பரையும், மலையான் மடந்தையையும் தொழுது வணங்கக் கோயிலுள் நுழையலாம். நான் போனபோது அர்ச்சகர் அருமையாக என்னை அர்த்த மண்டபத்துக்கே அழைத்தார். நானோ மிக்க பணிவுடனே, மகா மண்டபத்திலேயே நின்று கொண்டு தரிசித்தேன். இந்தப் பணிவுக்குக் காரணம் 'என்றும் பணியுமாம் பெருமை' என்பதனால் அல்ல. அர்த்த மண்டபத்தின் முன் வாயில் நிலையில் மேல் தளத்துக்கல் இரண்டாகப் பிளந்து எப்போது கீழே விழுவோம் என்று காத்துக் கொண்டிருந்ததை நான் கண்டுவிட்ட காரணமே. அர்ச்சகருக்கு இருந்த மனத் துணிச்சல் எனக்கு இல்லை. ஆதலால் வெளியே நின்றே தரிசித்தேன். இந்தக் கோயிலில் சில செப்புப் படிவங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளில் ஒன்று மயிலேறி விளையாடும் மாமுருகன் திருஉரு. இந்த முருகனுக்குப் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோள்களும் இருக்கின்றன. ஆனால் அச்சம் அகற்றும் அயில் வேலைக் காணோம். அதோடு ஏதோ கண்ணை மூடித் தியானத்தில் இருப்பவன்போல் இருக்கிறான். 'கருணைத் திருஉருவாய் காசினியில் தோன்றிய குருபரன்' இவன் என்றே கூறத் தோன்றுகிறது எனக்கு. நல்ல அழகு வாய்ந்த செப்புப் படிமம்.

இனி கோயிலை விட்டு வெளியே வரலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் நற்றுணை அப்பரை, நனிபள்ளி அடிகளை அப்பர் பாடியிருக்கிறார்; சுந்தரர் பாடியிருக்கிறார். சமணராய் இருந்து மாறிய அப்பர் அடிகளை, சமணர் அரசனான பல்லவ மகேந்திரவர்மன் நஞ்சு கொடுத்துக் கொல்ல ஏற்பாடு பண்ணியிருக்கிறான். ஆனால் அந்த நஞ்சும் இறைவன் அருளால் அப்பருக்கு அமுதமாகவே மாறியிருக்கிறது. இதைக் கூறுகிறார், அப்பர் இந்தத் தலத்துக்குரிய பதிகத்தில்.

துஞ்சு இருள் காலை மாலை
தொடர்ச்சியை மறந்து இராதே,