பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

237

நாயனா'ராகி வந்துபோக, ரூபாய் நூறு தீர்ந்து, பாக்கி ரூபாய் நூறு இருந்த காலை, அவர் ஒரு நாள் மாலை தலைவிரி கோலமாக 'இன்பசாகர'த்துக்கு ஓடிவந்து, 'போய்விட்டாள்; என் மனைவி போதிய வைத்திய வசதியில்லாமல் போயே போய்விட்டாள்!' என்று அலற. ‘இதென்னடா வம்பு?' என்று இவர் துணிந்து நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து அவரிடம் நீட்ட, ‘ஆ! ரூபாய் நூறா? எனக்கா! ஒரே தடவையிலா?’ என்று அவர் தம் வாயை நிஜமாகவே பிளந்து வைப்பாராயினர்.

அதைக் கண்டு பயந்துபோன இவர், ‘செத்தவன் வேறு எங்கேயாவது போய்ச் செத்திருக்கக் கூடாதா? இங்கே வந்துதானா செத்துத் தொலைய வேண்டும்?’ என்று மருண்டு, மிரண்டு, 'அப்பா, பாதாளம்! போலீசாரின் தொல்லையிலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!' என்று என்னைக் கெஞ்ச, 'உங்களை என்னால் எப்படிக் காப்பாற்ற முடியும்?’ என்று நான் கேட்க, ‘இவனைத் தூக்கி நம் டாக்சியில் போட்டுக்கொண்டு போய் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நில். ‘என்ன?’ என்று போலீசார் கேட்டால், ‘யாரோ ஒரு பிரயாணி; வழியில், ‘மார்பை அடைக்கிறது; சோடா வாங்கி வருகிறாயா?' என்றார். ‘சரி' என்று நான் வண்டியை நிறுத்தி விட்டு ஓடினேன்; திரும்பி வந்து பார்த்தால் பிளந்த வாயோடு வண்டியில் கிடந்தார்!’ என்று சொல்லிவிடு. அதற்கு மேல் அவர்கள் பாடு, அவன் பாடு! நம்மைப் பிடித்த தலைவலி விட்டுப் போகும்!' என்று இவர் சொல்ல, நான் அன்றிருந்த நிலையில் அதைத் தட்ட முடியாமல் அப்படியே செய்ய, அது ‘இயற்கை மரணம்’ என்று தெரியும் வரை நான் போலீசார் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்து விட்டு, அதற்குப் பின் இவருடைய வேலைக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, ஊரிலிருந்த நிலத்தை விற்றுச் சொந்தமாக ஒரு டாக்சி வாங்கி ஓட்டலானேன். என் கதை