பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வேங்கடம் முதல் குமரி வரை

சுதையில் உருவாகியிருக்கிறார்கள். இவற்றைப் பார்த்துக் கொண்டே வடக்குப் பிராகாரத்துக்கு வந்தால் அங்கு ஒரு கிணறு. அதனையே சூல தீர்த்தம் என்கின்றனர். தருமசேனரின் சூலைநோய் தீர்த்து அவரை நாவுக் கரசராக்கிய தீர்த்தம் அல்லவா?

இப்படிக் கோயிலை வலம் வந்து, தென் பக்கமாக உள்ள படிகளில் ஏறிக் கோயிலுள் சென்றதும், நம்முன் நிற்பவர் திரிபுராந்தகரும் திரிபுர சுந்தரியுமே. அம்பிகை வடிவமும் அழகானதாக இல்லை. செப்பு வடிவில் சோழ நாட்டுக் கோயில்களில் வடித்து வைத்திருக்கும் திரிபுராந்தகர்களோடு ஒப்பிட இயலாது. வில் அளவுக்கு மிஞ்சிய காத்திரம். இந்தத் திரிபுராந்தகரை வணங்கிவிட்டு, கர்ப்பக் கிருஹம் நோக்கிச் சென்றால் அங்கே மூலவரைத் தரிசிக்கலாம். இவரே வீரட்டானர். சோடசலிங்கம். பதினாறு பட்டைகள் தீட்டிப் பளபளவென்றிருக்கிறார். இவருக்குப் பின்னாலே கர்ப்பக் கிருஹச் சுவரிலே உமையுடன் கூடிய இறைவன்; மணக்கோலம் என்பார்கள். பல்லவர் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தமாகவே இருக்கலாம். கந்தர் தெரியவில்லை. லிங்கத் திருவுரு மறைத்துக் கொண்டிருக்கிறது அந்தப் பகுதியை, இந்த வீரட்டானரை வணங்கிவிட்டு, வெளியே வரலாம்.

இன்னும் இத்தலத்தை ஒட்டிப் பார்க்க வேண்டியவை இரண்டு உண்டு. ஒன்று குணதரவீச்சுரம் மற்றொன்று வேகாக்கொல்லை. குணதரவீச்சுரம் வீரட்டானர் கோயிலுக்குப் பக்கத்திலே இருக்கிறது. சமணனாக இருந்த மகேந்திர வர்மன் நாவுக்கரசரால் சைவனாகிய ஆர்வத்தில் சமணப் பள்ளிப் பாழிகளை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு கட்டியது குணதரவீச்சுரம்.

வேகாக்கொல்லை திருவதிகைக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவில் இருக்கிறது, திரிபுர தகன காலத்தில்