297
வைத்திருக்கிறேன். அதை என்னிடமிருந்து யாரும் அபகரித்துக் கொள்ளாமல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டானாம். 'கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் வா!’ என்றாராம் கடவுள். அவன் பரம திருப்தியுடன வீட்டுக்கு வந்து, அன்றிரவு நிம்மதியாகத் தூக்கமும் போட்டானாம். அடுத்தாற்போல் ஒரு திருடன் கடவுளைத் தேடி வந்து, ‘கடவுளே, கடவுளே! இன்றிரவு நான் தனகோடி வீட்டில் திருடப் போகிறேன். நீதான் யாரிடமும் என்னைச் சிக்க வைக்காமல் காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டானாம். கடவுள் என்ன செய்வார், பாவம்! 'கவலைப்படாதே, நான் கவனித்துக் கொள்கிறேன்!' என்று சொல்ல முடியுமா! இல்லை, ‘மாட்டேன்; நான் உனக்குத் துணையாக இருக்கமாட்டேன்!' என்றுதான் கையை விரிக்க முடியுமா? விரித்தால் அவரை எல்லோருக்கும் பொதுவானவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? எல்லோரையும் ரட்சிக்கக் கூடியவர் என்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே, 'இந்த மனித சகவாசமே இனி நமக்கு வேண்டாம்!' என்று அவர் உடனே கல்லாகிவிட்டாராம்!'
விக்கிரமாதித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘இப்பொழுதாவது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?' என்று வந்தவரைக் கேட்க, 'தீர்ந்தது சுவாமி, தீர்ந்தது' என்று வந்தவர் தலையை ஆட்டிக்கொண்டே வந்த வழியைப் பார்த்து நடப்பாராயினர்.”
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான மனோரஞ்சிதம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘'நாளைக்கு வாருங்கள்; இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதி தேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க......