உள்ளடக்கத்துக்குச் செல்

சுழலில் மிதக்கும் தீபங்கள்/4

விக்கிமூலம் இலிருந்து

4

இன்றும் மாயா குழந்தைக்கு உடல் நலமில்லை என்று துணி துவைத்து உலர்த்தாமல் போய் விட்டாள். கிரிஜா முற்றத்துத் துணிகளை எடுத்து மடித்து வைக்கையில் ரோஜா மாமி வந்திருக்கும் குரல் கேட்கிறது.

“கேட்கவே சங்கடமாயிருக்கே! நீங்க என்ன, பஞ்சபட்சம் பரமான்னமா கேட்கறேள்? ஏதோ இத்தனை உப்புப் பண்டம், சுத்தபத்தமா இருக்கணும்னு பழகியிருக்கேள். அதுக்காக பட்டினி கிடக்கும்படி விடுவாளா? மாமி, உங்ககளுக்குச் செஞ்சு நான் குறைஞ்சு போயிடமாட்டேன். நீங்க தாயாரைப் போல. சாயங்காலம், நான் ஒரு நடை வந்து, ஏதோ பத்தில்லாத பலகாரமா, பூரியோ, கேசரியோ, அவல் கஞ்சியோ கொண்டு குடுத்திட்டுப் போவனே...?”

கிரிஜாவுக்குத் திக்கென்று நெஞ்சில் இடிக்கிறது. ரத்னா யுனிவர்சிடிக்குப் போய்விட்டாள். குழந்தைகளும் இல்லை. இப்படி ஒரு திருப்பமா முந்தையநாள் நிகழ்ச்சிக்கு?

“அவ என்ன செய்வா, ரோஜா? அந்தத் தறுதலை, ஏதோ கெடுதலுக்கு வந்து சேர்ந்திருக்கு. கிரி இல்லாட்டா இத்தனை வருஷத்தில, இப்படி, ஒண்ணும் ஆகாரமில்லாத படுத்துக்க விட்டதில்ல. சந்தேகமா இருந்தா, குளிச்சிட்டு வந்து பண்ணிக்குடுப்ப. இப்ப இது என்ன காலத்துக்கு வந்திருக்கோ தெரியலே...கவிதாவும் சாருவும் எட்டிப்பார்க்காதுகள். அதுங்க டிரஸ்ஸும் கண்ராவியும்! குதிராட்டம் வளர்ந்து, கவுனப் போட்டுண்டு கடத்தெருவெல்லாம் சுத்தறதுக. நேத்து, நான் பட்டினி. அவாள்ளாம் கடையில போயி என்னத்தையோ வாங்கி வச்சிண்டு, அதென்ன சிரிப்பு, கத்தல், கும்மாளம்? இப்படி கிரி கிரிசை கெட்டுப் போவான்னு நான் நினைக்கல. இன்னும் என்ன வெல்லாம் பார்த்துண்டு நான் உக்காந்திருக்க்ப் போறேனோ...?”

'த்ஸொ...த்ஸொ...பாவம், நீங்க கண்கலங்கினா எனக்கு மனசே எப்படியோ வேதனை பண்றது! என்னமோ சொல்வா, அந்தக்காலத்திலே, புருஷன் இல்லாத புக்ககக் கொடுமைன்னு’ இது பிள்ளை இல்லாத மாட்டுப் பெண் கொடுமையா? வயசாணவாளப் பட்டினி போட்டுட்டு, எப்படி மனசு வந்தது? நான் கூப்பிட்டுக் கேக்கறேனே...?”

"ஐயோ, வேண்டாம்மா, ரோஜா, அவன் ஊரிலேந்து வந்தா இப்படி இவ்வளவுக்கு இருக்க மாட்டா. அந்தச் சனியன முதல்ல அடிச்சி வெளில துரத்தச் சொல்றேன்...”

இதற்கு மேல் கிரிஜாவினால் பொறுக்க முடியவில்லை.

“என்ன மாமி, நானே வந்துட்டேன். கேளுங்க என்னன்னு?” ரோஜாமாமி, பளிச்சென்று ஒரு சிரிப்பை மலர விடுகிறாள். “ஏம்மா, மாயா வரலியா? நீயே துணி மடிக்கிற?” சுருதியே மாறிவிட்டது. பளிர் குங்குமம், போலிச் சிரிப்பு. சதை சுருங்கிப் பழுத்த முகத்தில் என்ன மேக்கப்? கூந்தல் சாயம், இயற்கைப் புருவங்களை அழித்து பென்சிலால் வளைத்துக் கொண்டு, கிழக்குரங்கு, வேடம் போட்டுக் கொண்டு, போலியாகச் சிரிக்கிறாள். கிரிக்கு எரிச்சல் கிளர்ந் தெழுகிறது. “ஏன், மாயா வரலியா?”

“...நேத்து, பூரியும் பாலும் பண்ணிக் கொண்டு வந்தா வேண்டாம்னு சொல்லிட்டு உங்ககிட்ட இப்ப பட்டினி போட் டான்னு சொல்றார்... நீங்க, நிசம்னு நினைப்பீங்க...”

ரோசமும், துயரமும் துருத்திக் கொண்டு வந்து குரலை நெகிழச் செய்கின்றன, கிரிஜாவுக்கு. அவளைப் போல் வாழைப்பழ ஊசியாகப் பேசத் தெரியவில்லை.

“இதபாரு, கிரி. மனசில எதையும் வச்சுக்காம சொல்லிடறது நல்லது. இவ யாரு இந்த வீட்டு விஷயத்தில் தலையிடன்னு நீ நினைக்கலாம். நீ இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்ன நான் இங்க பெண்ணாய்ப் பழகினவள். உன் மாமனார் என்னை மூத்த பொண்ணுன்னுதான் சொல்வார். ஏன், இந்த டில்லியில், எங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடறப்ப, இவ வீட்டில்தான் கொண்டு விட்டா, அப்புறம்தான் நான் தனிக்குடித்தனமே போனேன். அப்ப ராமகிருஷ்ணபுரமே கட்டியாகல. இந்த இடமெல்லாம் காடு. தை மாசம் எங்கப்பா என்னைக் கூட்டிண்டு வரச்சே, குளிர் நடுக்கிறது.மாமி அன்னிக்கு ஒரு அவியல் வச்சு தேங்காய்பால் பாயசமும் வச்சிருந்தா, பாரு, இன்னிக்கும் நாக்கை விட்டு அந்த ருசி பிரியலே. நவராத்திரி ஒம்பது நாளும் இங்கத்தான் இருப்பேன். இவாளுக்குப் பெரிய குவார்ட்டர்ஸ், கர்ஸான் ரோடில. அவர் ஸ்கூர்ட்டர்ல கொண்டு விட்டுட்டு ராத்திரி வந்து கூட்டிண்டு போவார். அவர் முதமுதல்லே மூணுமாசம் ஜப்பானுக்குப் போனப்ப, நான் இவகூடத்தான் இருந்தேன். சாமு ஸ்கூலுக்குப் போகு முன்ன சாப்பிடமாட்டான், படுத்துவான். ரொட்டியத் தட்டி ஊறுகாயத் தடவி டப்பில வச்சுக்குடுப்பேன்.”

இந்த உறவுத் தொடர்பு சலுகைகளை வெளியே வீசி, ‘உனது உரிமைக்குமேல் எனக்குச் சலுகை’ என்று நிலை நாட்ட முயலுகிறாள் ரோஜாமாமி!

“அந்த நாளிலும் மாமி மடிதான். இந்தக் குளிரில் மாமா எழுந்து தனுர்மாச பூசை பண்ணுவார். மாமி பொங்கல் பண்ணுவாள். விடியரப்ப காம்பவுண்டில கோலம் பிரமாதமா இருக்கும்...”

“இதெல்லாம் இப்ப எதுக்கடீ, ரோஜா? அப்ப வாழ்ந்தது பொய்யும், இப்ப வாழுவது மெய்யுமாப் போச்சு...! ஆச்சு, அவர் போயி இருபது வருஷம் ஆகப்போறது.”

“சரயு கல்யாணத்துக்கு இருந்தா, சாமு எம். ஏ. சேர்த்திருந்தானா, படிச்சு முடிச்சிட்டானா?”

“அவன்தான் மெட்றாசில ஸி.ஏ. பண்ணிட்டிருந்தானே...? ஒரே நாழி அஸ்தமனம் ஆயிட்டது. கிடந்தாரா, கொண்டாரா?...”

கிழவி இதைப் பலமுறைகள் சொல்லிக் கேட்டாலும், அதன் சோகம் இப்போதும் கிரிஜாவுக்குப் புதிதாகக் கேட்பது போல் நெஞ்சைத் தொடுகிறது!

“மஞ்சளும் குங்குமுமா முன்னாடி போகக் குடுத்து வைக்கல. இப்படி ஒரு பாழும் ஜன்மம்...!” அளிந்த பழமான கண்களில் நீர் தளும்புகிறது.

புடவைத் துண்டத்தினால் கண்களைத் துடைத்து கொள்கிறாள்.

“அவள் சிறிசு. வருத்தணும்னு எனக்கு ஆசையா? இப்பல்லாம் தலை வச்சிண்டு, ரவிக்கையும் செருப்பும் போட்டுண்டு, எங்கவாண்ணாலும் எப்பவாண்ணாலும் சாப்பிட்டுண்டு எல்லாரும் இருக்கா. எனக்குக்கூடத்தான் சரயு கல்யாணம் ஆகறதுக்கு முன்னே இந்தக் கோலம் வாண்டாம்னு எல்லாரும் சொன்னா, இருந்தேன், சபையில வர முடியுமோ? அது அப்பவே போயாச்சு. முள்ளுமேல இருக்காப்பல இருந்தது, இந்த முடி ஈரம்-ஒரு துளி நீர் பூமில தெறிச்சால், அவர் பதினாலாயிரம் வருஷம் ரெளரவாதி நரகத்தில் தவிப்பாளாம். அந்தப் பாவத்தை நான் சுமக்கணு மோடி அம்மா? பொண்ணாப் பிறந்த ஜன்மாவில வேற என்ன இருக்குன்னு ராமேசுவரம் போய்த் தொலைச்சிண்டு வந்து, பெரியவாகிட்டத் தீர்த்தம் வாங்கிண்டேன்...? அவளக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கு. இன்னும் பிள்ளைப்பேறு வயசு மாறல. ஸ்நானம் பண்ணாத்தான் மடி. ரோஜாக்குன்னா அதெல்லாம் தாண்டியாச்சி...”

இனி மேல் இல்லை, இல்லை-என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, கிரிஜாவின் பகுத்துணர்வு மங்கி: அறிவு குழம்ப, நெகிழ்ந்து போகிறாள்.