உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 காலந்தோறும் பெண்

உஷையும் ராத்ரியும், வானும் மண்ணும் மகிழ்ந்து குலாவும் தெய்வீகக் கன்னியர். வெவ்வேறு வண்ணங்களுடைய இவ்விரு சோதரியரும் மாறிமாறி வந்து உலகை வாழ வைக்கின்றனர். இருவருக்கும் ஒரே நோக்கம், ஒரே இலட்சியம், இவர்கள் ஒருபோதும் மோதிக்கொள்வதுமில்லை. நின்று விடுவதுமில்லை. இவர்கள் ஒரே குழந்தையைப் பேணிக் காக்கும் அன்னையராகவும் குறிப்பிடப்படுகின்றனர்.

சகோதரிச் சண்டை மட்டுமின்றி பெண்ணுக்குப் பெண் உறவுகளிலேயே வேற்றுமையும் விரோதமும் புகுத்தப்பட்டு காலம்காலமாக நெறிப்படுத்தப்பட்டு, இந்நாள் பெண்ணுக்குப்பெண்ணே யமனாக நிற்கும் நடைமுறையில் வாழும் நம்மை வேதம் படிக்க அருகதை இல்லை என்று எதற்காகக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று புரிகிறதல்லவா?

இது ஒரு ஈர்க்கு நுழையும் வெளிச்சம்தான். இன்னும் மேலே பார்க்கலாம்.


6. பட்டைக் கண்ணாடியும் பட்டுக்
கறுப்பும்

விடியற்காலையில் மூன்று மணிக்கே எழுந்து, லட்சுமி பூசைக்கு உரிய பணிகளில் ஈடுபட்டுவிட்டாள் கௌரி. இத்தகைய லட்சுமி பூசை, கௌரி பூசை என்றால் பெண்களுக்கு எத்தனை பொறுப்பு? வீட்டுப் பொருள்கள் பாத்திரம் பண்டம் சுத்தமாக்கி, வீடு பெருக்கி, மெழுகிக் கோலமிட்டு மாவிலை வாழைத் தோரணங்கள் கட்டி, மலர் சேகரித்து வைத்து, பூசைக்கு முதல் நாளிலிருந்தே உழைக்க வேண்டும். பூசைக்கு முக்கியமான அடுத்த தேவைகள், நிவேதனமாகப் போகிற பலகாரங்கள். அன்றே அரிசி ஊற வைத்து மாவிடித்து தேங்காய் துருவி அரைத்து மாங்குமாங்கென்று பலகாரங்கள் அனைத்தும் செய்தாக வேண்டும்.