26 காலந்தோறும் பெண்
சில பகுதிகளில் பெண்கள் கணவன் வீட்டுக்குச் சென்று அவர்கள் ஆதிக்கத்தில் அல்லலுறும் வழக்குக்கு எதிராகத் திருமண மறுப்புச் சங்கங்களைத் தோற்றுவித்த செய்திகளும் தெரிய வருகின்றன. இச்சங்கம் சார்ந்த பெண்கள், மணம் புரிந்துகொள்ளும் கணவன்மார், தங்கள் வீடுகளில் வந்து தங்க வேண்டும் என்ற நிபந்தனைமீதே திருமணத்துக்கு உடன்பட்டனர்.
சீனத்துத் திருமண முறையே, சீன சமுதாய நாகரீகத்தின் தந்தையாக மதிக்கப்பெறும் (Fuhi) ஃப்யூஹி என்ற நாயகரால் நிலையுறுத்தப் பெற்றதாகக் கருதப்படுகிறது. அவரே தம் தந்தையை அறியாதவர். எனவே அதுவரையிலும் தாய்வழிச் சமுதாயமே வழக்கில் இருந்திருக்கிறது.
பல அரசிகளின் ஆட்சி வரலாறுகள் தெரிகின்றன. அரச குடும்பங்களில் பதினெட்டு வயசுக்கு வராத சிறுவன் ஆட்சி உரிமை பெறுபவனாக இருந்தால் தாயே ஆட்சி புரிந்தாள்.
ஜப்பான் நாட்டில் தந்தை வழி நடைமுறை, பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது எனலாம். அதற்கு முந்தையை காலத்தில் கணவன், மனைவி வீட்டுக்கு வந்து போவான். குடும்பம் தாயின் பெயராலேயே துலங்கியது.
இதேபோல் பண்டைய யூதர்களிடையேயும், அரேபியாவிலும், தொன்மையாகக் கிடைக்கக்கூடிய சான்றுகள் பெண்ணின் முதன்மையையே தெளிவாக்குகின்றன. மிகத் தொன்மையான ஹீப்ரு மொழி இலக்கியம் ஹீப்ரு இனத்தாரை, ஒரு பெண்ணே தலைமை தாங்கி நடத்திச் சென்றதாகச் செப்புகிறது. அரேபியா நாட்டில் நீதி வழங்குவோரும் அரசோச்சுபவரும் பெண்களாக இருந்திருக்கின்றனர். ஷீபா மகாராணியைக் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? பண்டைய அரேபியர்களிடையே பெண்ணே சொத்துரிமை பெற்றிருந்தாள்.