31
செயற் கடமையினின்றும் வழுவாமல், (தாய்க்குடி, தந்தைக்குடி என்னும்) இருவர் குடியையும் சுட்டிச் சொல்லத்தக்க பல்வேறு பழங்குடிகளில் பிறந்த— (அறுநான்கு இரட்டி= 6x 4 x 2=48) நாற்பத்தெட்டு நல்ல இளமை மிக்க ஆண்டுகளே நல்வழியில் கழித்த—அறங்கூறும் கொள்கை கொண்ட—(நாற்சதுரம், முச்சதுரம், வில்வடிவம் என்னும்) மூன்று வடிவாய் அமைத்துக் காக்கும் மூவகைத் தீயாகிய செல்வத்தை உடைய அந்தணர்கள் உரிய காலம் அறிந்து போற்றியுரைக்கும் வகையில், ஒரு புரிக்கு மூன்று நூல் வீதம் ஒன்பது நூல்களால் முறுக்கிய மூன்று புரிகள் கொண்ட நுண்ணிய பூணூலுடன், தோய்த்து உலராத உடையினை உடம்பிலேயே உலரும்படி உடுத்துக்கொண்டு, தலைமேலே குவித்த கைகளை உடையவராய், முருகனாகிய தன்னைப் போற்றிப் புகழ்ந்து, ஆறு எழுத்துக்களை (ஷடாட்சரம்) உள்ளடக்கிய அரிய மந்திர மறையை நாக்கு இயலும் அளவில் பயின்று பலமுறை ஓதி, மணம் மிக்க நல்ல மலர்களை ஏந்தித் தூவி வழிபட, அவ்வழிபாட்டிற்குப் பெரிதும் மகிழ்ந்து (சுவாமிமலை என்று கருதப்படுகின்ற) திரு ஏரகம் என்னும் திருப்பதியில் உறை தலையும் முருகன் உரிமையாகக் கொண்டவன். அந்தத் திரு வேரகம் அல்லாமலும்,-
வேலன் வெறியாட்டு
( 190-197) (முருகனைப்போல் கோலம் புனைந்து முருகனாகவே தோன்றும்) வேலன் எனப்படுபவன், பசுமையான கொடியாலே மணமுள்ள பலவகைக் காய்களை இடையிடையே இட்டும் அழகு பொருந்திய தக்கோலக் காயைக் கலந்தும் காட்டு மல்லிகையுடன் வெண்டாளி மலரையும் சேர்த்துக் கட்டின மாலையை அணிந்தவனாய், மணமிக்க சந்தனம் பூசிய நல்ல நிறம் விளங்கும் மார்பினோடு, கொடுஞ் செயலுடைய வலிய வில்லால் கொலைத் தொழில் புரிகிற காட்டுக் குறவர்கள்