43
பண்பட்ட இரவலன் இரங்கத்தக்கவன் தான்; பெருமானே, நினது வளவிய புகழுக்குரிய அருளை விரும்பி நின்பால் வந்துள்ளான்’ என்று அறிமுகம் செய்து, இனியவையும் நல்லவையுமாக மிகப் பல கூறி ஏத்தி நிற்க,
(287-295) தெய்வத் தன்மை நிறைந்த ஆற்றல் மிக்க உருவத்துடனும் வானம் தோய்ந்த வளவிய தோற்றத்துடனும் தான் (முருகன்) உன் முன்னர்த் தோன்றி, அஞ்சுதற்கு (பயபக்திக்கு) உரிய தனது உயர்ந்த நிலையைத் தன்னுள் மேற்கொண்டு, தனது தொன்மையான மணம் கமழும் தெய்வத் தன்மையோடு கூடிய இளைய வடிவழகைக் காணச் செய்து, ‘அன்பனே அஞ்சாதே, நம்பி நில், நினது வருகையை யான் அறிவேன்’ என்று அன்பு கனிந்த நல்லுரை நல்கி, அழிவு இல்லாதபடி, இருள் நிறமான கருங்கடல் சூழ்ந்த இவ்வுலகிலே, (முருகன் அருள் பெற்றவர்களுள்) நீயே ஒப்பற்ற ஒருவன் என்னும் பேறுடன் திகழும்படி, சிறந்த பெறுதற்கரிய (திருவடிப்பேறு ஆகிய) பரிசிலை வழங்கியருள்வான்.
[மலையருவியின் செயல்]
(295-306)—(இத்தகைய முருகப் பெருமான் இன்னும் எழுந்தருளியிருக்கும் இடம் ஒன்று வருமாது:-)
பல விதமாக வேறுபட்ட பல துணிக்கொடிகளைப் போல அசைந்து அசைந்து (அருவிகள்) ஓடிவந்து, அகில் மரத்தைப் பெயர்த்துச் சுமந்து கொண்டு, சந்தன மரத்தை முழு அடி மரத்தோடு உருட்டித் தள்ளி, மூங்கிலின் பூவோடு கூடிய அசையும் கிளைகள் தனித்துப் போக வேரைப் பிளந்து,