பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

69

திணற வேண்டியிருந்தது. ‘வைகறை ஏடு’– எனப் பெயர் சூட்டுதலே ‘சாலச்சிறப்புடையது’–என்று புலவர் வெண்ணெய்க்கண்ணனார் வந்து கூறியதைக் கமலக்கண்ணனின் வியாபார நண்பர்கள் ஒப்புக்கொள்ளாததோடு கணிசமாகக் கேலியும் செய்து அனுப்பிவிட்டார்கள்.

இந்த நிலையில் ஒருநாள் காலை, நிருபர் கலைச்செழியனிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஃபோன் வந்தது.

“சார்! நம்ப பேப்பர்லே ‘பிரமுகர் பக்கம்’னு ஒண்னு வருதே; அதிலே வாரம்வாரம் ஞாயித்திக்கிழமையன்னிக்கி ஸப்ளிமெண்ட்லே ஒருத்தரை இண்டர்வ்யூ பண்ணிப் போடறோம். அடுத்த வாரம் வெளிவர வேண்டிய இண்டர்வ்யூவுக்காக இன்னிக்கி நானும் ஒரு நண்பரும் உங்களைப் பார்க்க வரோம்! சாயங்காலம் நாலு மணிக்குச் சவுகரியப்படுமில்லையா?”

“அதுக்கென்ன வாங்க கூட யாரோ வர்றதாச் சொல்றீங்களே...யாரது?”

“யாருமில்லே சார்? நமக்கு ரொம்ப வேண்டியவர்... ‘பிரகாஷ் பப்ளிசிட்டீஸ்’னு புதுசா ஒரு விளம்பர ஏஜன்ஸி ஸ்டார்ட் பண்ணியிருக்கார்...”

“எங்கிட்ட எதுக்காக...?”

“அதான் வரோமே! நேரே பேசிக்கலாம் சார்!”

“சரி வரட்டும்...நாலு மணிக்குப் பார்க்கலாம்” என்று ஃபோனை வைத்தார் கமலக்கண்ணன்.

கூட வருகிறவனை வரவேண்டாம் என்று சொன்னால் எங்கே கலைச்செழியனே தன்னைப் பேட்டி காண வராமல் இருந்துவிடுவானோ என்ற தயக்கத்தினால் அதற்கும் ஒப்புக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன்.

ஒவ்வொரு நாள் காலையிலும் தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகத்தில் விழிக்கும்போதெல்லாம் – தமது தினசரிப் பத்திரிகையும் அதேபோல் வெளியாகி வீடு வீடாகப்போய் விழும் காலம் அருகிலிருப்பதைத் தவிர்க்க முடியாமல் கற்பனை செய்யும் அவருடைய மனம்.

நெ.–5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/71&oldid=1047550" இலிருந்து மீள்விக்கப்பட்டது