பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ராணி மங்கம்மாள்

"சேதுபதி நம்மைத் தமது எதிரியாகக்கூட அங்கீகரிக்க மாட்டார் போலிருக்கிறதே?" என்று கண்களில் சிவப்பேறிச் சினம் ஜொலிக்கத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன்.

கடுமையான மல்யுத்தத்தில் அந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் புரியாதபடி அடித்தவனுக்கும் அடி வாங்கியவனுக்கும் மட்டுமே புரியக்கூடிய மர்மமான அடியைப் பட்டுக் கொண்டு விட்டாற் போன்று அந்தரங்க வலியோடு அந்தக் கணத்தில் தனக்குள் நொந்து தவித்தான் ரங்க கிருஷ்ணன்.


7. வஞ்சப் புகழ்ச்சி வலை

குநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக்கொண்டு ரங்க கிருஷ்ணன் இராமநாதபுரத்துக்குத் தூது அனுப்பியும் பயனில்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல் மேல் விவரம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாமல் திரும்பியிருக்கிறான். அவன் போனதாலும் பயனில்லை. திரும்பி வந்தும் பயனில்லை.

ஒரு படையெடுப்பைப் பொருட்படுத்தி எதிர்ப்பதற்கு முன் வராத எதிரியின் நாட்டையோ, ஊர்களையோ, பொது மக்களையோ வலிந்து தாக்கினால் வீணாகத் தன் பெயரும் தாயின் பெயரும்தான் கெடும் என்பது ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்தது. மறவர் சீமையையே தாய் நிலமாகக் கொண்ட தன் படை வீரர்களிலே எவ்வளவு பேர் அந்தத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதையும் அவனால் சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தது. மதில்மேல் பூனை நிலையிலிருந்தான் அவன்.