பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

ராணி மங்கம்மாள்

மகிழ்ச்சிகரமான திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தான் படைத்தலைவன். ரவிவர்மன் தன் திட்டத்தை விளக்கமாகக் கூறலானான்:

"கோட்டையை உங்கள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுப் போகிறாற் போல நான் ஒதுங்கிப் போய்க்கொண்டு எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தந்திரமாக உள்ளே வரச் செய்கிறேன். அவர்களை உள்ளே வரவழைப்பதற்கு ஒரு கவர்ச்சியாக ஆட்சியையும், கோட்டையையும் அவர்கள் பாதுகாப்பில் விட்டு விடுவதுபோல் பாவனை காண்பித்து ஏமாற்றப் போகிறேன். அவர்கள் அதை நம்பி உள்ளே வந்ததும் மறைந்திருக்கிற நீங்களும் உங்கள் படைகளும் அவர்களைத் திடீரென்று தாக்கிக் கொன்று தீர்த்துவிடலாம்."

"அதெல்லாம் சரி அவர்கள் உங்களை நம்பிக் கோட்டைக்குள் வருவார்களா?"

"பதவியும் ராஜ்யமும், கோட்டைப் பொறுப்பும் கிடைக்கிறதென்றால் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே வரத் தயங்க மாட்டார்கள்"

"நாங்கள் திறைப் பணத்தைப் பெற்று முடித்துக் கொண்டு படைகளுடன் இரவோடிரவாக மதுரைக்குத் திரும்பிவிட்டதாக எட்டு வீட்டுப் பிள்ளைமார்களிடம் முதலில் அவர்கள் நம்பும்படியாக ஒரு பொய்யை நீங்கள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எங்களை நினைத்துப் பயந்து அவர்கள் கோட்டைக்குள் வரத் தயங்கிவிடக் கூடும். ஜாக்கிரதை!"

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைக் கூண்டோடு கோட்டைக்குள் அனுப்ப வேண்டியது என் பொறுப்பு அவர்கள் மறுபடி கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே உயிரோடு வராமல் கூண்டோடு அழித்துவிட வேண்டியது உங்கள் பொறுப்பு" என்றான் ரவிவர்மன். மதுரைப் படைத்தலைவன் சம்மதித்தான்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தன. இருளில் எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் கல்குளம் அரண்மனையைக் கைப்பற்றி ஆளும்