பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

165

கொள்ளிடத்தில் நீர்ப்பெருக்குக் குறைவாக இருந்த சமயத்தில் ஆழம் குறைவாக இருந்த இடம் பார்த்துப் படைகளுடன் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றிருந்தார் அவர்.

தளபதி நரசப்பய்யாவின் படைகள் தஞ்சை செல்வதை அறியாத தஞ்சைப் படைவீரர்கள் திரிசிரபுரத்தின் கரையோரக் கிராமங்களில் கொள்ளையடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள்.

நரசப்பய்யாவின் தலைமையில் சென்றிருக்கும் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சைப்பகுதியில் சூறையாடுகின்றனர் என்று தஞ்சை வீரர்களுக்குத் தகவல் எட்டியபோது, பதறிப் போனார்கள். பதற்றத்தில் ஊரைக் காக்க விரையும் எண்ணத்தோடு கொள்ளிடத்தில் மிகவும் ஆழமான இடத்திலே இறங்கி ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்கள்.

கெடுவான்-கேடு நினைப்பான் என்பதுபோல் அவர்கள் ஆற்றைக் கடக்கிற நேரத்தில் மேற்கே எங்கோ பெருமழை பெய்திருந்த காரணத்தினால் கொள்ளிடத்தில் வெள்ளம் வேறு வந்துவிட்டது. பெரிய பெரிய மரங்களை எல்லாம் வேருடன் அடித்துக் கொண்டு வருகிற அளவு வெள்ளம் பயங்கரமாயிருந்தது. நட்டாற்றில் சிக்கிக் கொண்ட தஞ்சை வீரர்கள் வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பட்டுவிட்டார்கள்.

படைகளும், குதிரைகளும், ஆயுதங்களும் திரிசிரபுரத்துக் கரையோரப் பகுதிகளில் கொள்ளையிட்ட பொருள்களும் ஆற்றோடு போய்விட்டன. மிகக்குறைந்த எண்ணிக்கையுள்ள தஞ்சைப் படை வீரர்களே உயிர் பிழைத்துக் கரையேறினர். அவர்களும் அப்போதிருந்த நிலையில் எவரையும் எதிர்த்துப் போரிடுகிற வலிமையோடில்லை.

கரையேறிய தஞ்சைப் படைவீரர்களைத் தளபதி நரசப்பய்யா நிர்மூலமாக்கி விட்டார். எதிர்ப்பே இல்லாமல் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சையையும் சுற்றுப்புறத்து ஊர்களையும் சூறையாடத் தொடங்கினார்கள். ஏறக்குறைய தஞ்சை நாடு ஸ்தம்பித்துப் போய்விட்டது.