உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ராணி மங்கம்மாள்

வளர்த்துக் காப்பாற்றுவது மிகுந்த சிரமமாயிற்றே என்று தனக்குள் சிந்தித்து ஒரு முடிவும் புலப்படாமல் தவித்தாள் ராணி மங்கம்மாள்.

எதிர்பாராமல் நேர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி விட்ட ரங்ககிருஷ்ணனின் மரணத்தால் மூத்தவர்களின் விசும்பல்களும் கண்ணீரும் அழுகுரல்களுமே நிரம்பிவிட்ட அரண்மனையில் அதன்பின் தொடர்ந்து நீடித்து துயர மெளனத்தின் கனத்தையும் இறுக்கத்தையும் கரைப்பதுபோல் இப்போதுதான் ஓர் இளம் குழந்தையின் இனிய அழுகுரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

ஆனால் எல்லாருடைய சோகத்தையும் போக்கிய அந்த மங்கலமான இளம் அழுகுரல் அந்தக் குரலுக்குரியவனைப் பெற்றெடுத்தவளின் சோகத்தை மட்டும் போக்க முடியவில்லை.

சின்னமுத்தம்மாள் மகன் பிறந்த பின்பும் சித்தப்பிரமை பிடித்தவள்போல் அர்த்தமின்றிப் பார்த்த திசையிலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவளது கவனத்தைத் திருப்புவதற்காகப் பணிப்பெண்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிரிப்பதற்கும், முகம் மலர்வதற்கும் முடியாதவளாகி விட்டாளோ என நினைக்கும் அளவுக்குப் பரிதாபமாயிருந்தது அவள் நிலைமை. சின்ன முத்தம்மாளின் இந்தத் துயரத்தைப் போக்க முடியாமலும் மாற்ற முடியாமலும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக் கலங்கினாள் ராணி மங்கம்மாள்.

சிரிப்பூட்டுவதிலும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பதிலும் கெட்டிக்காரிகளான இளம் பெண்களைச் சதாகாலமும் சின்ன முத்தம்மாளின் அருகே சூழ்ந்திருக்கச் செய்து பார்த்தாள். அவளுக்குப் பிறந்திருக்கும் ஆண்குழந்தையைப் பற்றி அவளிடமே நிறையப் பேசச்செய்து கலகலப்பூட்ட முயன்றாள். எதுவுமே எதிர்பார்த்த நல்ல விளைவுகளை உண்டாக்கவில்லை.

நாயக்க வம்சத்தை ஆள்வதற்குப் பேரன் பிறந்த மகிழ்ச்சியும் கோலாகலமும் குறையாமல் வந்தவர்களுக்கெல்லாம் பரிசில்களும் தான தர்மங்களும் வழங்கப்பட்டன. அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்.