பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 பிணிமுகம் என்ற யானையிலேறி முருகக் கடவுள் தோன்றியது போல உதயணன் அப்போது விளங்கினான். ஏறக்குறைய இதே சமயத்தில் யூகியின் திட்டம் நடைபெற வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. விழா ஆரவாரம் அதற்கு ஏற்ற வாய்ப்பாயிற்று.

பத்திராபதியின்மேல் அமர்ந்திருந்த உதயணன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தான். அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் சிறு பொறாமைக் கனல் தெறித்து விழுந்தது. காரணம் வேறொன்றும் இல்லை. அந் நிகழ்ச்சிகள் யாவும் மாற்றவனாகிய பிரச்சோதனனுடைய செல்வப் பெருக்கத்தைக் காட்டுவன வாயிருந்தமைதான் மெய்க்காரணமாம். தன்னை அவன் செய்த இழிவும் அப்போது அவன் நினைவில் தோன்றி மறைந்தது. நிறைய நன்மை செய்திருந்தாலும் பிரச்சோதனன் செய்த சிறு இழிவே அவன் மனத்தில் கனலாக உறைத்தது. கனல் சற்றே மனத்தில் பரவியது. அதை அவிக்க வேண்டுமானால் பிரச்சோதனன் செய்கைக்குச் சரியான பழிவாங்குவதுதான் வழி. அதை அவிக்கும் தண்ணீர்கூட அதுவாகத்தான் அமையும்.

பாம்பின்மேல் சட்டை சூழ்ந்தாற் போலத் தன்னைச் சுற்றி வெளியே பிறரறியப் புலப்படாமல் சூழ்ந்திருக்கும் படையுடன் காத்திருந்த உதயணன் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் பண்பட்ட மனோ பாவமுடைய மன்னன் என்பதை உதயணன் பின்னால் பலவாறு அறிந்திருந்தும்கூட, அவன் தன் பகைவன் என்ற உணர்ச்சி மனத்தில் ஒரு மூலையில் நிரந்தரமாக இருந்தே வந்தது. அந்தப் பழிவாங்கும் எண்ணத்திற்கு யூகி திட்டம் தீட்டிக் கொடுத்திருந்தான். காலம் அதற்கு வாய்ப்பை வரவேற்றுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மனத்தில் பொறாமைக் கனல் மூளவேண்டிய அவசியம் நேர்வது இயற்கைதானே. கத்திமுனையில் பழிவாங்க விரும்பவில்லையாயினும் தான் அவமானப் படுத்தப்பட்டது போல் பகைவனையும் அவமானப்படுத்திவிட வேண்டு