பக்கம்:நித்திலவல்லி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

193

அவன் மற்றொரு போருக்குக் கிளர்ந்தெழும் நிலைமை உருவாகி விடும் அபாயமும் ஏற்படலாம். அழகன் பெருமாளைவிட இரத்தினமாலை இந்த அபாயத்தை மிக நன்றாக உணர்ந்திருந்தாள். பெண் தன்னை வென்றவனுக்கு அடிமையாகிறாள் என்றால், அறிந்தோ அறியாமலோதனக்குத் தோற்றவனுக்குக் கொத்தடிமையாகவே ஆகிறாள். ஆனால் தோற்றிருப்பவனுக்கு அவன் தோற்றிருக்கிறான் என்பது தோன்றவே விடாமல் பார்த்துக்கொள்ள அவள் எவ்வளவிற்குத் தேர்ந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த வெற்றியின் முடிவான பயன்களை அவள் அடைய முடியும். அவன் அந்த மாளிகைக்குள் வந்த முதல் நாளன்று அவனுடைய திரண்ட தோள்களையும், பரந்த மார்பையும் கண்டு மனம் தோற்ற கணத்தில், அவள் அவனுக்கு அடிமை யாவதற்கு மட்டுமே ஆசைப்பட்டாள். இன்றோ அவனுக்குக் கொத்தடிமையாவதற்கே ஆசைப்பட்டாள். மெல்லியபட்டு நூலிழை போன்ற இந்த வெற்றிப் பிணைப்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் அழகன் பெருமாளைவிட விழிப்பாயிருந்தாள் இரத்தினமாலை. ஒருமுறை ஏற்கெனவே இந்த விழிப்பு உணர்ச்சி இல்லாத காரணத்தால் தவறு செய்திருந்தாள் அவள். எனவே மறுமுறையும் அப்படித் தவறு நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அவள் மிகமிகக் கவனமாயிருந்தாள். அரண்மனை அந்தப்புரத்துக்குத் தான் சென்று திரும்பியிருந்த தினத்தன்று அழகன் பெருமாளுக்கும், இளைய நம்பிக்கும், தனக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடலின் போது, ‘பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் இங்கே ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் பரிதாபம்’ என்று இளையநம்பி சினங் கொண்டு கூறியவுடன், ‘ஆண்கள் செய்யமுடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது'- என்று தான் சுடச்சுட மறுமொழி கூறியதன் மூலம் அவன் கோபித்துக் கொண்டு வெளியேறி விட இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதும் அப்படி நேர்ந்து விடாமல் கவனமாக இருந்தாள் இரத்தினமாலை.

நி.வ - 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/194&oldid=715379" இலிருந்து மீள்விக்கப்பட்டது