பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 மாணிக்கவாசகர்



(26.29); சாத்திர ஞானத்தைக் கருவியாகக் கொண்டு காண முயல்பவர்கட்கும் நீ அகப்படாய் (130); ஏதாவது ஓர் உபாயத்தைக் கொண்டு நின்னைக்கண்டு விடலாம் என்று முயல்பவர்கட்கு அந்த உபாயத்திலேயே நீ மறைந்திருந்து காட்சிக்கு எட்டாதவனாகின்றாய் (131-132); பேரூக்கத் துடன் உன்னை நன்றாய்ப் பற்றிப்பிடித்து ஆராய்பவர்கட்கு நீ ஆணாக விளங்குகின்றாய்; அலியாகவும் விளங்குகின்றாய்; பண்பாடு அடைந்துள்ள மங்கையாகவும் பரிணமிக்கின்றாய்; பின்பு இவை யாவும் கடந்தும் உள்ளாய்(133-135); ஐம்பொறிகளை அடக்கி மலைகளிடையே சென்று உணவை அறவே துறந்து கடுந்தவம் புரிபவர்களின் அறிவுக்கும் எட்டாதவ னாக உள்ளாய் (136-138); அனைத்துக்கும் ஆதாரமாய் முழு முதற் பொருள் ஒருவன் உளன் என்று ஒர்ந்துகொள்ள இயலாத சிற்றறிவுக்கும் எட்டாதவனாய் உள்ளாய் (139); பண்டைய நூல்களிலும் பின்பு தோன்றிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ள வழிகளைக் கையாண்டு முயன்றாலும் “ஒளிக்கும் சோரனாகத் திகழ்கின்றாய்' என்கின்றார். இங்ஙனம் அழுதழுது ஒவ்வொரு தலங்களிலும் வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளலைத்தேடி வருகின்றார் சிதம்பரத்தை நோக்கி. வேதம் வளர்த்த வேத கிரியைக் கண்ணுற்றதும் அந்தத் திசையில் செல்லுகின்றார். ஆம், கணக்கிலாத் திருக்கோலம் காட்டும் கழுக்குன்றுக்குத் தான் வருகின்றார். கழுக்குன்றத் தமர்ந்தானை அப்பர் பெருமான் 'கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே' (692:1) என்கிறார்: சம்பந்தரும் போற்றியுள்ளார். சுந்தரர் படுகாடு கிடந்து வேதகிரியானிடம் பொன் பெறுகின்றார். "அழுதால் உன்னைப் பெறலாமே" என்ற வழியைக் கண்ட மணிவாசகர் சும்மா திரும்பிப் போவாரா? குன்றக்கல்லும் உருகும் வண்ணம் கதறுகின்றனர்.