பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

பாடுவதிலும் இணையற்றவர். 'வசை பாடக் காளமேகம்' எனும் தொடர் இதனை விளக்கும். இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு.

அருணகிரிநாதர்

இவர் திருவண்ணாமலையில் பிறந்தார்; தலங்கள் தோறும் சென்று இறைவன் புகழ்பாடி வழிபட்டார். இவர் முருகன் மீது பாடிய பாடல்களே திருப்புகழ் என வழங்குகிறது. திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல்விருத்தம், மயில் விருத்தம் முதலியன இவர் பாடிய பிற நூல்களாகும். இவர் பாடல்கள் சந்த இன்பம் மிக்கனவாகும். இவர் காலம் கி. பி. 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

பரஞ்சோதி முனிவர்

இவர் சோழ நாட்டுத் திருமறைக்காட்டில் பிறந்தார்; இவர் பாடிய நூல் திருவிளையாடற் புராணமாகும். இது மதுரை சொக்க நாதரின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் அழகுபெற எடுத்தியம்புகிறது. மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் நடை எளிமையும். இனிமையும் பெற்று விளங்குகிறது. இவரது காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

அருணாசலக் கவிராயர்

இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தார்; இராம நாடகம், அசோமுகி நாடகம், சீர்காழித் தல புராணம், சீர்காழிக் கோவை, அனுமார் பிள்ளைத் தமிழ் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இராம நாடகம் கம்பராமாயண்த்தைப் பின்பற்றியதாகும். எளிய சொற்களால் இயன்று பாமர மக்களையும் கவர்வதாக இதன் பாடல்கள் அமைந்துள்ளன. இவர் காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.