பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162



புனிதப் பயணத்துக்காகப் பெருமானார் அவர்கள் மக்காவுக்கு புறப்பட எண்ணினார்கள்.

முஹாஜிர்களுக்கும் தங்கள் பிறப்பிடமான மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்து, ஆறாண்டுகள் ஆகி விட்டமையால், மக்காவைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியாயிற்று. மேலும், அவர்களில் பலருடைய மனைவி, மக்கள் மக்காவிலேயே இருந்தனர். அவர்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.

மக்காவில் இருந்த போது, அளவற்ற துன்பங்களுக்கு ஆளான பிலால் அவர்கள், மக்காவின் நினைவு எழுந்த போது கண்கலங்கி, “அந்தோ! நான் மக்காவில் ஓர் இரவாயினும் தங்கி மகிழும் நாள் எப்போது வருமோ? அங்கே உள்ள நறுமணப் பொருட்கள் எனக்குக் கிட்டுமோ? ஊற்றுகளில் இறங்கி மகிழவும், பேரீச்ச மரங்களைக் காணும் வாய்ப்பும் எப்போது வருமோ?” என்னும் கருத்துள்ள அரபிக் கவிதையைப் பாடிக் கொண்டிருப்பார்.

இப்ராஹீம் நபி அவர்கள் புனர் நிர்மாணமாகத் திகழும் கஃபாவை யாத்திரைக் காலத்தில் அரேபியர்கள் அனைவரும் வந்து தரிசிப்பார்கள்.

குறிப்பிட்ட அந்த நான்கு மாதங்களில் சண்டைச் சச்சரவுகளை விடுவித்துச் சகோதரரைப் போலக் கூடுவார்கள்.

பெருமானார் அவர்களும் மக்காவுக்குள் யாத்திரை சென்று, கஃபாவைச் சுற்று வந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டார்கள். அவ்வாறே மக்காவுக்குப் புறப்படத் தீர்மானித்தார்கள்.


122. வருகையும் எதிர்ப்பும்

புனிதத் தலத்தை வழிபடச் செல்லும்போது பகைமை உணர்வுகள் தோன்றாமல் இருப்பதற்காகவும், தங்களிடம் குறைஷிகள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும் ஆயுதங்களை வெளியில் எடுக்காமல் முஸ்லிம்கள் புறப்பட்டார்கள்.

வாள்களை உறையில் போட்டு வைத்துக் கொள்ளுமாறு பெருமானார் அவர்கள் சொல்லியிருந்தார்கள்.