பாரதியாரின் தேசிய கீதங்கள்/22. தமிழ்
Appearance
22. தமிழ்
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
- இனிதாவது எங்கும் காணோம்,
- பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
- இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
- நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
- வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
- தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
- பரவும்வகை செய்தல் வேண்டும்.
- யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
- வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
- பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
- உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
- ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
- வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
- சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
- தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
- பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
- தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
- இறவாத புகழுடைய புதுநூல்கள்
- தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
- மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
- சொல்வதிலோர் மகிமை இல்லை
- திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
- அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
- உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
- வாக்கினிலே ஒளி யுண்டாகும்
- வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
- கவிப்பெருக்கும் மேவு மாயின்
- பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
- விழிபெற்றுப் பதவி கொள்வார்,
- தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
- இங்கமரர் சிறப்புக் கண்டார்.