திரும்பி வந்த மான் குட்டி/குப்புவின் குல்லாய்
குப்புவின் குல்லாய்
பல சரக்குக் கடைப் பழனிச்சாமிக்கு ஒரே ஒரு பையன். அவன் பெயர் குப்புசாமி. ‘குப்பு’ என்றே அவனுடைய நண்பர்கள் அழைப்பார்கள்.
குப்பு சென்ற மாதம் திருப்பதிக்குப் போய் வந்தான். திருப்பதிக்குப் போனபோது அவன் தலையிலே கருகரு என்று அடர்த்தியாக முடி இருந்தது. திரும்பி வரும்போது...? ஒலையிலே செய்த குல்லாதான் அவன் தலைமேலே உட்கார்ந்திருந்தது.
குப்புவின் தலைமுடிக்கு என்ன ஆயிற்று?
சென்ற வருடம் அவனுக்கு விஷ சுரம் வந்தது. உடனே அவன் பாட்டி, “திருப்பதி வெங்கடாசலபதியே, என் பேரனைக் காப்பாத்து. அவனுக்கு முடி வளர்த்து, உன் சன்னதியிலே கொண்டு வந்து இறக்குகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். சொன்னபடி செய்தாயிற்று. இப்பொழுது, அவன் தலை மொட்டை! மொட்டைத் தலைமேலே ஓலைக்குல்லா!
குப்பு எட்டாவது படிக்கிறான். அவன் வகுப்பில் மொத்தம் நாற்பத்தி இரண்டு மாணவர்கள். குப்பு படிப்பிலே ரொம்ப சுமார். ரொம்ப ரொம்ப சுமார்! 40-வது ராங்க்! அப்படியென்றால், எவ்வளவு புத்தி சாலியாக இருக்க வேண்டும்?
குப்பு எப்போதும் கடைசி பெஞ்சியிலேதான் உட் காருவான். அவனுக்கு இடப் பக்கம் கோபு, கோவிந்து, வலப்பக்கம் சரவணன், சங்கர் உட்காருவார்கள். அவர்களும் குப்பு மாதிரிதான் படிப்பிலே!
குப்பு திருப்பதிக்குப் போய் வருவதற்கு முன்பு, அப்பாவின் கட்டளைப்படி தினமும் காலை 8 மணிக்கு அவர்களுடைய பலசரக்குக் கடைக்குச் செல்வான். 9 மணிவரை கடையில் இருந்து விட்டுப் பிறகுதான் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். கடை வேலைகளை அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது, அவனுடைய அப்பாவின் ஆசை. ஆனால் அவன் கடையிலே செய்யும் வேலை அவன் அப்பாவுக்குத் தெரியாது.
கடையில் இருக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்குள், அப்பாவுக்குத் தெரியாமல் கற்கண்டு, வெல்லக்கட்டி, முந்திரிப் பருப்பு. இப்படிச் சில பண்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்வான். பள்ளிக்கூடம் வந்ததும், தன் கடைசிப் பெஞ்சு நண்பர்களுக்குக் கொடுத்துத் தானும் தின்பான், பாடத்தைக் கவனிக்காமல். இந்தப் பண்டங்களைத் தின்பதிலே அவர்கள் பொழுதைப் போக்குவார்கள்.
இப்போது திருப்பதிக்குப் போய் வந்த பிறகு, குப்பு தினமும் நிறைய நிறையக் கற்கண்டுக் கட்டிகளையும், வெல்ல அச்சுக்களையும், முந்திரிப் பருப்புகளையும் கொண்டுவர ஆரம்பித்துவிட்டான். முன்பெல்லாம் மடியிலும், சட்டைப் பையிலும் அவைகளைப் போட்டுக்கொண்டு போவான். இப்போது, அப்பா பார்க்காதபோது அவற்றைக் குல்லாக்குள்ளே ஒளித்து ஒளித்து வைத்துக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டான். அவனுடைய நண்பர்களுக்கு ஏக குஷி!
அன்றைக்கும் வழக்கம்போல் இந்தப் பண்டங்களைக் குல்லாய்க்குள்ளே வைத்து எடுத்துக் கொண்டு போனான். கடையை விட்டுக் கால் கிலோமீட்டர் தூரம்கூடப் போயிருக்கமாட்டான்.
அப்போது மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த இரண்டு காக்கைகள் மேலேயிருந்தபடி குப்புவின் தலைமேலிருந்த ஒலைக் குல்லாவைப் பார்த்து விட்டன.
உடனே, ஒரு காக்கை மற்றொரு காக்கையைப் பார்த்து, “அதோ கீழே பாரு, ஒரு ஒலை மூடி தெரியுது. எதையோ வச்சு மூடி ஒரு ஆள் எடுத்து போறான். நிச்சயம் அந்த மூடிக்குக் கீழே ஒரு பாத்திரம் இருக்கும். அந்தப் பாத்திரத்திலே நமக் குப்பிடிச்ச நல்ல நல்ல பண்டமெல்லாம் இருக்கும். நமக்கு அது கிடைக்கணும்னா, நான் சொல்றபடி செய்யனும்” என்றது.
குப்புவுடைய குல்லாதான் அது என்று அந்தக் காக்கைக்குத் தெரியவில்லை!
உடனே இன்னொரு காக்கை “ஓ! நீ சொல்றபடி நான் செய்கிறேன். என்ன செய்யணும்?” என்று கேட்டது.
“நீ மெதுவாக் கீழே போ. விருட்டுனு அந்த ஒலை மூடியைத் தூக்கிக்கிட்டுப் பறந்து போய், அதோ தெரியுதே, அந்தத் தென்னை மரத்திலே உட்கார்ந்திரு. நான் அந்தப் பாத்திரத்திலேயிருக்கிற பண்டத்திலே பெரிசாப் பார்த்து ஒண்ணு எடுத்து வர்றேன். ரெண்டு பேரும் பங்கு போட்டுத் தின்னலாம்” என்றது முதல் காக்கை. “நல்ல யோசனை. நீ சொன்னபடியே நான் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தக் காக்கை மெதுவாகக் கீழ் நோக்கிச் சென்று, விருட்டென்று ஒலைக் குல்லாயைக் கொத்திக் கொண்டு பறந்து போய்த் தென்னைமரத்தில் உட்கார்ந்து கொண்டது.
மறுவிநாடியே குப்புவின் தலையிலிருந்த கற்கண்டு, வெல்லம், முந்திரிப் பருப்பு எல்லாம் உருண்டு தரையில் விழுந்தன. அடடே, எல்லாமே தரையில் விழுந்து விட்டதாகச் சொன்னேனா? இல்லை, இல்லை ஒரே ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி மட்டும் தலை நடுவே தனியாக நின்றது!
கண்மூடிக் கண் திறப்பதற்குள் முதலில் யோசனை சொன்ன காக்கை வேகமாகப் பாய்ந்து அவன் தலை அருகே வந்தது. அங்கே பாத்திரம் எதையும் காணாத போனாலும், அதற்கு ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி போதாதா? வேகமாகப் பாய்ந்து அந்தக் கற்கண்டுக் கட்டியைக் கொத்திக் கொண்டு உயரப் பறந்தது.
அது பாய்ந்த வேகத்தில் அதனுடைய கூர்மையான அலகு குப்புவின் மொட்டைத் தலையைப் பதம் பார்த்துவிட்டது!
அதிர்ச்சிக்கு உள்ளான குப்பு தலையைத் தடவிப் பார்த்தான். கையெல்லாம் இரத்தம்!“ஐயோ!”, “அம்மா” என்று அலறியபடி அங்கேயே தரையில் உட்கார்ந்து விட்டான்!
சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்தவர், போனவரெல்லாம் ஓடிவந்து பார்த்தார்கள். ஒலைக் குல்லாவைக் காணோம்! தரையிலே கற்கண்டுக் கட்டிகள், வெல்ல அச்சுகள், முந்திரிப் பருப்புகள் எல்லாம் விழுந்து கிடந்தன. இக்காட்சியைக் கண்ட பலசரக்குக் கடை பழனிச்சாமியின் நண்பர் ஒருவர் உடனே பழனிச் சாமிக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். ஒடோடி வந்த பழனிச்சாமி,“எப்படிடா இது நடந்தது?” என்று கேட்டார்.
மகன் நடந்ததையெல்லாம் சொல்லி, “அப்பா, உங்களுக்குத் தெரியாமலே தினசரி இப்படிப் பண்டங்களைக் கொண்டு போனேனப்பா. அது தப்புத் தானப்பா. இப்போ நல்லா உணருகிறேன் அப்பா. இனிமேல் இதுமாதிரி செய்ய மாட்டேனப்பா” என்று மன்னிப்புக் கேட்டான்.
இதைக் கேட்டு சுற்றி நின்றவர்களெல்லாம் சிரித்தார்கள்.
“சரி, சரி, வா. கடைக்குப் போகலாம். தலைக்கு மருந்து போடுறேன்” என்று சொல்லி, குப்புவைக் கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார் பழனிச்சாமி.