கல்லாடம்/16-20

விக்கிமூலம் இலிருந்து

பாடல்:16[தொகு]

நிலவு வெளிப்பட வருந்தல்[தொகு]

நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம்
அடுமடைப் பள்ளியின் நடுஅவ தரித்தும்
திருவடிவு எட்டனுள் ஒருவடிவு ஆகியும்
முக்கணில் அருட்கண் முறைபெற முயங்கியும்
படிஇது என்னா அடிமுடி கண்டும் (5)
புண்ணிய நீறுஎனப் பொலிகதிர் காற்றியும்
நின்றனை பெருமதி! நின்தொழு தேற்கும்
நன்னரின் செய்குறும் நன்றிஒன்று உளதால்
ஆயிரம் தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து
ஒரொரு பனிக்கலை ஒடுங்கிநின்று அடைதலின் (10)
கொலைநுதி எயிறுஎன்று இருபிறை முளைத்த
புகர்முகப் புழைக்கை ஒருவிசை தடிந்தும்
மதுஇதழ்க் குவளைஎன்று அடுகண் மலர்ந்த
நெடுஞ்சுனை புதைய புகுந்தெடுத்து அளித்தும்
செறிபிறப்பு இறப்பென இருவகை திரியும் (15)
நெடுங்கயிற்று ஊசல் பரிந்துகலுழ் காலை
முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும்
தந்தஎம் குரிசில் தனிவந்து எமது
கண்எனக் கிடைத்துஎம் கண்எதிர் நடுநாள்
சமயக் கணக்கர் மதிவழி கூறாது (20)
உலகியல் கூறி பொருளிது என்ற
வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்
தன்னைநின் றுணர்ந்து தாமும் ஒன்றின்றி (25)
அடங்கினர் போல நீயும்
ஒடுங்கிநின் றமைதி இந்நிலை அறிந்தே! (27)


பாடல்:17[தொகு]

தேர் வரவு கூறல்[தொகு]

சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெனும்
ஒருகால் சுமந்த விண்படர் பந்தரின்
மூடிய நால்திசை முகில்துகில் விரித்து
திருப்பணி நிரைத்த கடுக்கைஅம் பொலந்தார் (5)
நிரை நிரை நாற்றி நெடுங்காய் மயிர் அமைத்து
ஊதையில் அலகிட்டு உறைபுயல் தெளித்து
போற்றுறு திருவம் நால்திசைப் பொலிய
மரகதத் தண்டின் தோன்றி விளக்கெடுப்ப
குடத்தியர் இழுக்கிய அளைசித றியபோல் (10)
கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப
பிடவலர் பரப்பிப் பூவை பூஇட
உயர்வான் அண்டர் கிளைவியப் பெய்த
உறவுஇணை நட்பு கிளைவியப் பெய்த
முகில்முழவு அதிர ஏழிசைமுகக்கும் (15)
முல்லை யாழொடு சுருதிவண்டு அலம்ப
களவலர் சூடி புறவுபாட் டெடுப்ப
பசுந்தழை பரப்பிக் கணமயில் ஆல
முல்லையம் திருமகள் கோபம்வாய் மலர்ந்து
நல்மணம் எடுத்து நாளமைத்து அழைக்க (20)
வரிவளை முன்கை வரவர இறப்பப்
போனநம் தனிநமர் புள்இயல் மான்தேர்
கடுவிசை துரந்த கான்யாற் றொலியின்
எள்ளினர் உட்க வள்இனம் மடக்கிமுன்
தோன்றினர் ஆதலின் நீயே மடமகள்! (25)
முன்ஒரு காலத்து அடுகொலைக்கு அணைந்த
முகிலுருப் பெறும்ஓர் கொடுமரக் கிராதன்
அறுமறைத் தாபதன் அமைத்திரு செம்மலை
செருப்புடைத் தாளால் விருப்புடன் தள்ளி
வாயெனும் குடத்தில் வரம்பற எடுத்த (30)
அழுதுகடல் தள்ளும் மணிநீர் ஆட்டி
பின்னல்விட் டமைத்த தன்தலை மயிரணை
திருமலர் விண்புக மணிமுடி நிறைத்து
வெள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி
வைத்தமை யாமுன் மகிழ்ந்தமுது உண்டவன் (35)
மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான்
கூடல்நின் றேத்தினர் குலக்கிளை போலத்
துணர்பெறு கோதையும் ஆரமும் புனைக
புதையிருள் துரக்கும் வெயில் மணித் திருவும்
தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக (35)
இறைஇருந்து உதவா நிறைவளைக் குலனும்
பெருஞ்சூ டகமும் ஒருங்குபெற் றணிக
நட்டுப் பகையினர் உட்குடி போல
உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும்
கொலையினர் நெஞ்சம் கூண்டவல் இருளெனும் (40)
ஐம்பால் குழலையும் அணிநிலை கூட்டுக
விருந்துகொண் டுண்ணும் பெருந்தவர் போல
நீங்காத் திருவுடை நலனும்
பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே! (44)


பாடல்:18[தொகு]

அழுங்கு தாய்க்கு உரைத்தல்[தொகு]

கல்லுயர் வரைதோள் செம்மனக் குரிசிலும்
கல்லா தவர்உளம் புல்லிய குழலும்
இம்மனை நிறைபுகுந்து எழில்மணம் புணர
கோளொடு குறித்து வரும்வழி கூறிய
மறைவாய்ப் பார்ப்பான் மகனும் பழுதிலன் (5)
சோதிடக் கலைமகள் தோற்றம் போல
சொரிவெள் அலகரும் பழுதில் வாய்மையர்
உடல்தொடு குறியின் வரும்வழி குறித்த
மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப
பெருந்திரள் கண்ணுள் பேச்சுநின் றோர்ந்து (10)
வாய்ச்சொல் கேட்டநல் மதியரும் பெரியர்
ஆய்மலர் தெரிந்துஇட்டு வான்பலி தூவி
தெய்வம் பராய மெய்யரும் திருவினர்
கருங்கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடும் மறிய (15)
சுரிமுகச் செவ்வாய்ச் சூல்வளை தெறிப்ப
கழுக்கடை அன்ன கூர்வாய்ப் பெருங்கண்
பனைகிடந் தன்ன உடல்முதல் துணிய
ஆருயிர் கவரும் காருடல் செங்கண்
கூற்றம் உருத்தெழுந்த கொள்கை போல (20)
நெட்டுடல் பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும்
வரைநிரை கிடந்த திரைவுவர் புகுந்து
நெடுஞ்சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்தும்
கருமுகில் வெளுத்த திருமிடற்று இருளும்
நுதல்மதி கிழித்த அழலவீர் நோக்கமும் (25)
மறைத்தொரு சிறுகுடிப் பரதவன் ஆகி
பொந்தலைப் புணர்வலை கொடுங்கரம் ஆக்கி
நெடுங்கடல் கலக்கும் ஒருமீன் படுத்த
நிறைஅருள் நாயகன் உறைதரு கூடல்
வணங்கார் இனமென மாழ்கி,
குணம்குடி போய்வித்த ஆய்வுளம் தவறே. (31)


பாடல்:19[தொகு]

வெறி விலக்கல்[தொகு]

உழைநின் றீரும் பிழைஅறிந் தீரும்
பழங்குறி கண்ட நெடுங்கண் மாதரும்
ஒன்று கிளக்க நின்றிவை கேண்மின்
ஒருபால் பசுங்கொடி திருநுதல் பொடித்த
குறுவெயிர்ப்பு ஒழுக்கு எனப்பிறை அமுதெடுக்க (5)
படிறர் சொல்எனக் கடுவுநஞ்சு இறைப்ப
அண்டப் பொற்சுவர் கொண்ட அழுக்கை
இறைத்துக் கழுவுவது என்னக் கங்கைத்
துறைகொள் ஆயிரம் முகமும் சுழல
அப்பெருங் கங்கை கக்கிய திரைஎனக் (10)
கொக்கின் தூவல் அப்புறம் ஆக
மாணிக் கத்தின் வளைத்த சுவரெனப்
பாணிக் குள்பெய் செந்தழல் பரப்ப
தன்னால் படைத்த பொன்அணி அண்டம்
எண்திக்கு அளந்து கொண்டன என்னப் (15)
புரிந்த செஞ்சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடிசூழ் சூரியர் என்னத்
தங்கிய மூன்றுகண் எங்கணும் ஆக
கூடல் மாநகர் ஆடிய அமுதை
உண்டு களித்த தொண்டர்கள் என்ன (20)
இம்மது உண்ண உம்மையின் உடையோர்
முருக நாறப் பருகுதல் செய்க
வேலனும் வெறிக்களன் ஏறுதல் ஆக
அணங்காட்டு முதியோள் முறங்கொள் நெல்எடுக்க
பிணிதர விசித்த முருகியம் துவைக்க (25)
ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க
இன்னும்பல தொழிற்கு இந்நிலை நின்று
மாறு பாடு கூறுதல் இலனே
ஈங்கிவை நிற்க யாங்கள்அவ் அருவியில்
ஒழுக புக்குத் தழுவி எடுத்தும் (30)
ஒருமதி முறித்துஆண்டு இருகவுட் செருகிய
ஏந்துகோட்டு உம்பல் பூம்புனம் எம்உயிர்
அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்
நெடுங்கை வேலால் அடும்தொழில் செய்து
பெறுமுயிர் தந்து மருவி அளித்த (35)
பொன்நெடுங்குன்றம் மன்னிய தோளன்
செவ்வே தந்தமை துயர்இ ருப்ப
கூறு பெயரொடு வேறு பெயரிட்டு
மறிஉயிர் உண்ணக் குறுகி வந்திருந்த
தெய்வம் கற்ற அறிவை
உய்யக் கூறிலோர் நெஞ்சிடம் பொறாதே. (41)


பாடல்:20[தொகு]

உலகியல்பு உரைத்தல்[தொகு]

பழமை நீண்ட குன்றக் குடியினன்
வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும்
மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும்
பந்து பயிற்றியும் பொற்கழங்கு உந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவும் (5)
உடைமை செய்த மடமையள் யான்என
எம்எதிர் கூறிய இம்மொழி தனக்குப்
பெருமை நோக்கின் சிறுமையது உண்டே
செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந்து ஈன்ற
செம்மகள் கரியோற்கு அறுதி போக (10)
மகவின் இன்பம் கடல் சென்றிலவால்
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வின ரிடத்தும் அவ்வழி ஆன
திரைக்கடல் குடித்த கரத்தமா முனிக்கும்
திங்கள் வாழ்குலம் தங்கும் வேந்தற்கும் (15)
அமுதஊற் றெழுந்து நெஞ்சம் களிக்கும்
தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த
பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கல்புடை ஆரம்
அணியும் மாமகிழ்நர் பதியுறை புகுந்தால் (20)
உண்டோ சென்றது கண்டது உரைக்க
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற
புறம்ஆர் கல்வி அறமா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டு அருகிடத்தும்
அவர்மன அன்னை கவரக் கண்டிலம் (25)
பெருஞ்சேற்றுக் கழனி கரும்புபெறு காலை
கொள்வோர்க் கன்றி அவ்வயல் சாயா
பூம்பணை திரிந்து பொதிஅவிழ் முளரியில்
காம்புபொதி நறவம் விளரியோ டருந்தி
கந்தித் தண்டலை வந்து வீற்றிருந்து (30)
கடிமலர்ப் பொழிலில் சிறிதுகண் படுத்து
மயக்கநிறை காமத்து இயக்கம் கொண்டு
நின்ற நாரணன் பரந்த மார்பில்
கலவாக் குங்குமம் நிலவிய தென்னக்
கார்வான் தந்த பேர்கொள் செக்கரில் (35)
வீதிவாய்த் தென்றல் மெல்லென் றியங்கும்
மூதூர்க் கூடல் வந்தருள் முக்கணன்
காமனை அயனை நாமக் காலனை
கண்ணால் உகிரால் மலர்கொள் காலால்
சுட்டும் கொய்தும் உதைத்தும் துணித்த (40)
விட்டொளிர் மாணிக்க மலையின் ஒருபால்
அடங்கப் படர்ந்த பசுங்கொடி அதனை
வளர்ந்த சேண்மலை உளத்துயர் கொண்டு
தொடர்ந்ததும் இலைகீழ் நடந்தசொல் கிடக்க
பாலைக் கிழத்தி திருமுன் நாட்டிய (45)
சூலத் தலையின் தொடர்ந்துசிகை படர்ந்து
விடுதழல் உச்சம் படுகதிர் தாக்க
பாடல்சால் பச்சைக் கோடகக் காற்றை
மையில் காட்சிக் கொய்யுளை நிற்ப
வயிற்றில் இருந்து வாய்முளைத் தென்ன (50)
இருகால் முகனிற்கு அருகா துரந்து
படுமழல் நீக்கக் குடகடல் குளிக்கும்
நாவாய குறியாத் தீவாய் பாலையில்
தம்மில் இன்பம் சூளுடன் கூடி
ஒன்றி விழைந்து சென்றாட்கு உடைத்து (55)
பொன்பதி நீங்கி உண்பதும் அடங்கி
முழங்கப் பெருங்குரல் கூஉய்ப்
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே. (58)


பார்க்க:[தொகு]

கல்லாடம்
கல்லாடம் பாயிரம்
கல்லாடம்:3-5
கல்லாடம்:6-10
கல்லாடம்:11-15
கல்லாடம்:21-25
கல்லாடம்:26-30
கல்லாடம்:31-35
கல்லாடம்:36-40
கல்லாடம்:41-45
கல்லாடம்:46-50
[[]] :[[]] :[[]] :[[]] :[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/16-20&oldid=486082" இலிருந்து மீள்விக்கப்பட்டது