கலித்தொகை/2.குறிஞ்சிக்கலி/51-60
பாடல் 51 (சுடர் தொடீஇ)
[தொகு]சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!
பாடல் 52 (முறம் செவி மறை)
[தொகு]முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,
கல் உயர் நனம் சாரல், கலந்து இயலும் நாட! கேள்;
தாமரைக் கண்ணியைத், தண் நறும் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின்,
'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே;
ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே;
ஆர மார்பினை, அண்ணலை, அளியை
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்,
'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே;
என ஆங்கு,
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள், இவள் அன்றிப்
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்குப்
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல் யானே.
பாடல் 53(வறன் உறல் அறியாத)
[தொகு]வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா
மறம் மிகு வேழம், தன் மாறு கொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல
உயர் முகை நறும் காந்தள் நாள் தோறும் புதிது ஈன,
அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!
மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்த பின்
இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன் -
அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்!
கயல் உமிழ் நீர் போலக், கண் பனி கலுழாக்கால்?
இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின்,
'பனி இவள் படர்' எனப் பரவாமை ஒல்லும்மன் -
ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்?
'அஞ்சல்' என்று அகன்று, நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன் -
நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர்,
கனவினால் அழிவுற்றுக், கங்குலும் ஆற்றாக்கால்?
என ஆங்கு,
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
தளி பெறத் தகைபெற்றாங்கு, நின்
அளி பெற நந்தும், இவள் ஆய் நுதல் கவினே!
பாடல் 54(கொடியவும் கோட்டவும்)
[தொகு]'கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப்
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதைத்,
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு?' என்ன,
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றிப்,
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,
நலம்பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரல் போது கொண்டு
செறாஅச் செங் கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இள முலை இனிய தைவந்து,
தொய்யல் அம் தடம் கையின், வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்;
அதனால்,
அல்லல் களைந்தனன் தோழி! நம் நகர்
அரும் கடி நீவாமை கூறின்,'நன்று' என,
நின்னொடு சூழ்வல், தோழி, 'நயம் புரிந்து,
இன்னது செய்தாள் இவள்' என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே!
பாடல் 55(மின் ஒளிர் அவிர் அறல்)
[தொகு]மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்,
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப்
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,
இன் நகை, இலங்கு எயிற்றுத், தேமொழித், துவர்ச் செவ்வாய்
நல் நுதால் நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி;
'நில்' என, நிறுத்தான்; நிறுத்தே வந்து.
நுதலும், முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ,
'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
மை தீர்ந்தன்று, மதியும் அன்று;
வேய் அமன்றன்று, மலையும் அன்று;
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும், கிளியும் அன்று'
என ஆங்கு,
அனையன பல பாராட்டிப், பையென,
வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப்,
புலையர் போலப் புன்கண் நோக்கித்,
தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடும் களிறு அன்னோன்
தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!
பாடல் 56(ஊர்க் கால் நிவந்த)
[தொகு]ஊர்க் கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்துக், கண் கூடு கூழை
சுவல் மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்? - ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல்; கொடி இயல்,
பல் கலைச் சில் பூங் கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!
இவளை சொல்லாடிக் காண்பேன், தகைத்து;
நல்லாய்! கேள்;
ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத்,
தூது உண் அம் புறவு எனத், துதைந்த நின் எழில் நலம் -
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! - நின் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?
நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என,
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் -
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய்! - நின் கண்டார்க்கு,
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை எனப்,
பெயல் துளி முகிழ் எனப், பெருத்த நின் இள முலை -
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! - நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு,
பேதுற்றாய்ப் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய்! கேள், இனி;
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடை
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்குப்
'பறை அறைந்து அல்லது செல்லற்க' என்னா
பாடல் 57(வேய் எனத் திரண்ட)
[தொகு]வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி -
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்பக்
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின் கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு - இகத்தந்தாய்! கேள் இனி;
பூம் தண் தார்ப் புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண் கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,
சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? - சின் மொழி!
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலைப்
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? - கனம் குழாய்!
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்,
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் - தக்கதோ? காழ் கொண்ட இள முலை!
என ஆங்கு,
இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு, நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே,
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே!
பாடல் 58(வார் உறு வணர்)
[தொகு]வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள்,
பேர் எழில் மலர் உண் கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனிக், கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்,
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை,
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்;
உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;
நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;
அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்கு ஆகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;
என ஆங்கு,
ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான், மற்று இந் நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின், பொலம் குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே!
பாடல் 59(தளை நெகிழ்)
[தொகு]தளை நெகிழ், பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர் அரி முன்கைச்
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட, அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி;
'மருளி, யான் மருள் உற இவன் உற்றது எவன்?' என்னும்
'அருள் இலை இவட்கு' என அயலார் நின் பழிக்கும்கா,
வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
உருள் இழாய்! 'ஒளி வாட, இவன் உள் நோய் யாது' என்னும்
'அருள் இலை இவட்கு' என அயலார் நின் பழிக்கும்கால்,
பொய்தல மகளையாய்ப், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?
ஆய் தொடி! 'ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?' என்னும்
'நோய் இலை இவட்கு' என நொதுமலர் பழிக்கும்கால்,
சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து, நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
என ஆங்கு,
அனையவை - உளையவும், யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின், சே இழாய்!
செய்ததன் பயம் பற்று விடாது;
நயம் பற்று விடின் - இல்லை - நசைஇயோர் திறத்தே.
பாடல் 60(சுணங்கு அணி)
[தொகு]சுணங்கு அணி வன முலைச், சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்,
நுணங்கு எழில் ஒள் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!
'கண் ஆர்ந்த நலத்தாரைக், கதுமெனக், கண்டவர்க்கு,
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனை இழாய்!' எனக் கூறி தொழூஉம்; தொழுதே
கண்ணும் நீர் ஆக நடுங்கினன்; இன் நகாய்!
என் செய்தான் கொல்லோ! இ·து ஒத்தன் தன் கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி, உள் உள்
உருகுவான் போலும், உடைந்து?
தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில,
நீ நின் மேல் கொள்வது, எவன்?
அலர் முலை, ஆய் இழை நல்லாய்! கதுமெனப்
பேர் அமர் உண் கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண் தொடீ!
'நின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்;
நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்து இழாய்!
என் செய்வாம் கொல், இனி நாம்?
பொன் செய்வாம்;
ஆறு விலங்கித் தெருவின் கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம்,
'தேறல் எளிது' என்பாம் நாம்;
'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம் மற்று;
சிறிது, ஆங்கே - மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி,
பூண் ஆகம் நோக்கி, இமையான், நயந்து நம்
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப், பெயர்த்தல் நயவரவு இன்றே.