உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தொகை/5.நெய்தற்கலி/121-130

விக்கிமூலம் இலிருந்து

</poem>

பாடல் 121 (ஒள் சுடர் கல்)

[தொகு]

 ஒள் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,
தெள் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப்,
புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!

தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறம் மாறத்
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே -
உறையொடு வைகிய போது போல், ஒய்யென,
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு;

வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு,
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே -
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு;

இன் துணை நீ நீப்ப, இரவின் உள் துணை ஆகித்,
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே -
ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு;
என ஆங்கு;
எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே.

பாடல் 122 ('கோதை ஆயமும் அன்னையும்)

[தொகு]

 'கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்,
போது எழில் உண் கண் புகழ் நலன் இழப்பக்,
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு, ஏது இன்றிச்,
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;
பலவு நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை;
அலவலை உடையை' என்றி - தோழீ !
கேள் இனி;
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
பேணி அவன் சிறிது அளித்தக் கால், என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;

இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக் கால், என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்;

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக் கால், என்
அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்;
அதனால்;
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம் -
தான் அவர்பால் பட்டது ஆயின்,
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே!

பாடல் 123 (கரும் கோட்டு நறும்)

[தொகு]

 கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இரும் தும்பி இயைபு ஊத,
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின், பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்,
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் -
காணாமை இருள் பரப்பிக் கையற்ற கங்குலான்,
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ? - காணாயோ? மட நெஞ்சே!

கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை,
அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
புல்லவும் பெற்றாயோ? - புல்லாயோ மட நெஞ்சே!

வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான்,
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ? - அறியாயோ? மட நெஞ்சே!
என ஆங்கு;
எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ,
இரும் கழி ஓதம் போல் தடுமாறி,
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!

பாடல் 124 (ஞாலம் மூன்று அடித்)

[தொகு]

 ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய
நீல நீர் உடை போலத், தகைபெற்ற வெண் திரை
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப!

ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் -
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்;

இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி,
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால்;
அதனால்;
பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக் கால்,
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தரப்,
புரி உளைக் கலி மான் தேர் கடவுபு -
விரி தண் தார் வியல் மார்ப! - விரைக நின் செலவே!

பாடல் 125 ('கண்டவர் இல்', என)

[தொகு]

 'கண்டவர் இல்', என உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்',
வண் பரி நவின்ற வய மான் செல்வ!
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்:

மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண் கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்!
இமிழ் திரை கொண்க! கொடியை காண் நீ;

இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,
நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்
புலந்து அழப், புல்லாது விடுவாய்!
இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியை காண் நீ;

இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி, வாட, வாராது விடுவாய்!
தண்ணம் துறைவ! தகாஅய் காண் நீ ;

என ஆங்கு;
அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்
பிறை ஏர் சுடர் நுதல் பசலை
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.

பாடல் 126 (பொன் மலை சுடர்)

[தொகு]

 பொன் மலை சுடர் சேரப், புலம்பிய இடன் நோக்கித்,
தன் மலைந்து உலகு ஏத்தத் தகை மதி ஏர்தரச்,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்கும்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்: மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே;

நீர் நீவிக் கஞன்ற பூக் கமழும்கால், நின் மார்பின்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்கக், கழிப் பூத்த
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு இனையுமே;

நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக் கால்,
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்: மதித்தாங்கே,
நனவு என புல்லும்கால், காணாளாய்க், கண்டது
கனவு என உணர்ந்து, பின் கையற்றுக் கலங்குமே;

என ஆங்கு;
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்,
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்கப்,
புது நலம் ஏர்தரப், பூண்க, நின் தேரே!

பாடல் 127 (தெரி இணர் ஞாழலும்,)

[தொகு]

 தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இரும் தும்பி இயைபு ஊதச் -
செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப;

கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ -
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!

குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ -
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ -
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!

அதனால்;
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
'உரவுக் கதிர் தெறும்' என, ஓங்கு திரை விரைபு, தன்
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு -
உரவு நீர்ச் சேர்ப்ப! - அருளினை அளிமே!

பாடல் 128 ('தோள் துறந்து, அருளாதவர்)

[தொகு]

 'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இரும் கங்குல், நம் துயர் அறியாது,
அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப்
புதுவது கவினினை' என்றி ஆயின்,
நனவின் வாரா நயன் இலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:

'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என்
நலம் தாராயோ?' எனத், தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப்
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும் -
'முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' எனத்
தலையுற முன் அடிப் பணிவான் போலவும் -
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதை அம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,
'பேதையை பெரிது' எனத் தெளிப்பான் போலவும்

ஆங்கு;
கனவினால் கண்டேன் - தோழி! - 'காண்தகக்
கனவின் வந்த கானலம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு' என,
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.

பாடல் 129 (தொல் ஊழி தடுமாறித்)

[தொகு]

 தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்,
பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய,
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர:
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை -

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்! -
'தூ அற துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக்
காதல் செய்து அகன்றாரை உடையையோ? - நீ.

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! -
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? - நீ.

பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல்! -
'இனி வரின், உயரும் மன் பழி' எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? - நீ

என ஆங்கு;
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே.

பாடல் 130 ('நயனும் வாய்மையும் நன்னர்)

[தொகு]

<poem>

'நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்	

இவனின் தோன்றிய இவை' என இரங்கப், புரை தவ நாடிப் பொய் தபுத்து, இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல், நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செலக் கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், புல் இருள் பரத்தரூஉம் - புலம்பு கொள் மருள் மாலை.

இம் மாலை; ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! இம் மாலை; இரும் கழி மா மலர் கூம்ப, அரோ, என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்! இம் மாலை; கோவலர் தீம் குழல் இனைய, அரோ என் பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும்!

என ஆங்கு; படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக், குடி புறங்காத்து ஓம்பும் செம் கோலான் வியன் தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.

கலித்தொகை
கலித்தொகை 5.நெய்தற்கலி

<