உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கை விநோதம்/தலைக்கு வந்தது

விக்கிமூலம் இலிருந்து
தலைக்கு வந்தது

வீதியில் மேளச் சத்தம் கேட்டது. நானும் என் நண்பன் நாராயணனும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தோம். சுவாமி ஊர்வலம் வந்ததுதான் அந்தச் சத்தத்துக்குக் காரணம்.

சுவாமி தரிசனம் செய்வதற்குமுன்னால் என் பார்வை மேளக்காரர்கள் மேல் விழுந்தது. அவர்களில் ஒருவர் நெற்றியில் அழகாகப் பட்டை அடித்து, கழுத்தில் சங்கிலியும், இடுப்பில் பட்டும், கையில் தவுலுமாகக் காட்சி அளித்தார். முகம் எங்கேயோ அடிக்கடி பார்த்த மாதிரியாக இருந்தது. ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இதற்குள் நாராயணன், “என்னப்பா, என்ன யோசனை? அந்த ஆளையே எடுத்துவிடுவது போலப் பார்க்கிருயே!” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை, இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரியாக இருக்கிறதே! அதுவும் அடிக்கடி........”

“ஓஹோ, அவர்தான் மிலிடரி ஹெயர்கட்டிங் ஸ்லூன்’ புரோப்ரைட்டர் ஆறுமுகம். தெரிந்ததா?”

இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அந்த ஆசாமி சாட்சாத் ஆறுமுகம்தான் என்பதை அறிந்து கொண்டேன். அவனது உடையும், அவன் புகுந்திருக்கும் வேலையுமே கொஞ்ச முன்பாக அவனை என்னால் அறிய முடியாதபடி செய்துவிட்டன.

“ஆமாம், ஆறுமுகத்திற்கும், இந்த வேலைக்கும் என்ன சம்மந்தம் ?” என்றேன்.

“அடடா, இது தெரியாதா? ஜார்ஜ் டவுனிலே பாதி நாவிதர்களுக்குமேல் மேளம் வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய ஸைட் பிசினஸ் (Side Business)” என்றான் நாராயணன்.

ஆறுமுகத்துக்கும், சங்கீத உலகத்துக்கும் நேரடி யான சம்மந்தம் உண்டு என்பதை அப்பொழுதுதான் கண்ணாரக் கண்டேன்.

ஆறுமுகம் ரொம்ப நல்லவன். மரியாதை காட்டுவதில் அவனுக்குச் சமானம் அவன்தான். ‘நீ’, ‘உனக்கு என்று யாராயிருந்தாலும் மரியாதை இல்லாமல் பேசும் பட்டணத்தில், ‘வாங்க’, ‘இருங்க’ என்று மரியாதை காட்டினால் யாருக்குத்தாம் அவன் மேல் பிரியம் இல்லாதிருக்கும்? அத்துடன், கண்ட இடத்திலெல்லாம் நமக்குச் சலாம் போடுவதும், ஸலூனுக்குச் சென்றால் மிகுந்த மரியாதையுடன் ஆசனம் தந்து உட்காரச் செய்வ தும், இடையிடையே தமாஷாகப் பேசுவதுமே அவனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டன.

அவனுடைய ஸலூனுக்குப் பெயர் ‘மிலிடெரி ஹெயர்கட்டிங் ஸலூன்’ என்றிருந்தாலும், யுத்த காலத் தில் கூட மிலிடரியைச் சேர்ந்தவர்கள் அங்கே விஜயம் செய்ததில்லை. காரணம், அது ஒர் ஒதுப்புறமாக இருப்பதுதான். இருந்தாலும் எப்போதும் அங்கே ஒரே கூட்டம்தான். எல்லோரும் வாடிக்கையாக வருபவர்கள். ஒதுப்புறமாக இருந்தாலும் எல்லோரையும் அங்கே அழைத்து வந்து வாடிக்கைக்காரர்கள் ஆக்கிவிடுவது, எது தெரியுமா? ஸலூன் ஆறுமுகம் நடந்துகொள்ளும் விதந்தான் ; அவனது எண்ணற்ற வாடிக்கைக்காரர்களில் நானும் ஒருவன் என்பது குறிப்பிடத் தக்கது.

பொதுவாக, கிராப் செய்துகொள்வது, எண்ணெய் தேய்த்துக்கொள்வது என்றால் எனக்கு வேப்பெண்ணெய் சாப்பிடுவது போலத்தான். இந்த இரண்டும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் நிம்மதியாக வாழலாம் என்பதுதான் என்னுடைய சித்தாந்தம்.

முன் காலத்தில், சில ராஜாக்கள் தூங்கும்போதே நாவிதன் வந்து வேலையை முடித்துவிடுவானாம். ராஜா எழுந்து எதிரே இருக்கும் கண்ணாடியைப் பார்த்தவுடன் தான், முகம் வழவழ என்றிருப்பது தெரியுமாம் ; சந்தோஷப்படுவாராம்.

ஏன் ? பட்டாளங்கள் கூடாரம் அடித்திருக்கும் சில இடங்களில்கூட இப்படி நடப்பதாகக் கதை சொல்லுகிறார்கள். கூடாரத்துக்கு வெளியே தலையை இழுத்து ஷவரம் செய்விட்டுப் பிறகு தலையை உள்ளே தள்ளி விடுவார்களாம், நாவிதர்கள்!

இவை உண்மையோ, பொய்யோ! எப்படி இருந்தாலும் இது மாதிரி தூங்கும்போது ஷவரம் செய்து விட்டால் நல்லதுதான். ஆனல் முகஷவரமாயிருந்தால் இப்படிச் செய்துகொண்டுவிடலாம். கிராப் எப்படிச் செய்துகொள்வது? முடியாத காரியம்தான். `தன் கையே தனக்குதவி’ என்ற பழமொழியைச் செய்கையாக முக ஷவரத்தில் வேண்டுமானால் காட்டலாம். ஆனல் கிராப் செய்துகொள்வதில் காட்ட முடியுமா?

“ கிராப் செய்துகொள்வதில் என்ன அவ்வளவு சிரமம் ?” என்று கேட்கிறீர்களா ?

அதைத்தான் சொல்லப் போகிறேன்.

ஆறுமுகம் ஸலூனில் எப்பொழுது பார்த்தாலும் ஒரே கூட்டம்தான். அங்கு இருக்கும் நெருக்கடியைப் பார்த்தாலே, உலக நெருக்கடியை ஒருவாறு உணர்ந்து கொண்டுவிடலாம்.

காலையில் 5½; மணிக்குப் போனால் ஒருவேளை இடம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக எழுந்திருப்பது எப்படி ? பஸ்ஸிற்கும் ரயிலுக்கும் தான் எல்லோருடனும் போட்டி போடவேண்டி யிருக்கிறது. சூரியனுடனுமா எழுந்திருப்பதில் போட்டி போடுவது ? முன்னால் சூரியன்தான் எழுந்திருக்கட்டுமே என்று விட்டுவிடுவதுதான் என் சுபாவம். அப்படியிருக்க எப்படி ஸலூன் திறந்தவுடனேயே ஆஜராவது ?

நன்றாக விடிந்ததும்தான் எழுந்து செல்வேன். ஆனால் நேரே ஸலூனுக்குப் போய்விடுவது என் வழக்க மல்ல. எங்கேயோ அவசர வேலையாகப் போவது போல ஸலூனைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே நேராகப் போவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் நேராகவே சென்று வேறு வழியாக வீடு வந்து சேர்ந்து விடுவேன். குறைவாக இருந்தால்தான் நேராகவே உள்ளே நுழைவேன்.

ஸலூனுக்குப் பக்கத்தில் செல்லும்போது கொஞ்சம் தயங்கினாலும் போதும். ஆறுமுகம் சலாம் போட்டு உள்ளே அழைக்க ஆரம்பித்துவிடுவான். அவனுடைய அழைப்பைத் தட்டிக் கழிப்பது எப்படி?

நான் எவ்வளவுதான் முன்ஜாக்கிரைதயாகப் போனாலும் ஸலூனில் ஐந்து, ஆறு நபர்களுக்குக் குறைவாக இருப்பதே இல்லை. அங்கு உள்ளதே மூன்று ஸ்தானங்கள்தாம். இவற்றில் காலி ஏற்படும் ஸ்தானத்தை முன்னால் வந்தவர்கள்தாம் வரிசைப்படி நிரப்புவது வழக்கம்.

கடைவீதிகளில் உள்ள ஸலூன்களைப் போல ஆறு முகம் புதுப் பத்திரிகைகள் வாங்கிப் போடுவது கிடையாது. எல்லாம் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு வந்தவைகள்தாம். புதுப் பத்திரிகைகளையாவது, நாம் எங்கேனும் இலவச வாசகசாலைகளில் பார்த்துவிடலாம். ஆனால், பழைய பத்திரிகைகளைப் பார்ப்பது அவ்வளவு சுலபமா? அத்துடன், அந்தப் பழைய பத்திரிகைகளின் வளர்ச்சியையும் தாழ்ச்சியையும், ஏன், மறைவையும்கூட அறிந்துகொள்ளலாமல்லவா?

உள்ளே நுழையும்போது, “உட்காருங்க. இதோ ஐந்தே நிமிஷந்தான்” என்று ஆறுமுகம் சொல்லியிருந்தாலும், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருக்க வேண்டும், என்னுடைய முறை வருவதற்கு வேலையெல்லாம் கெட்டுவிடுவதோடு ஆபீஸ் மானேஜரின் முன் போய் ‘லேட்’ ஆகச் சென்றதற்கு விளக்கம் கூற வேண்டியதும் வரும்.

வேறு ஸ்லூன்களுக்காவது போய்விடலாம் என்றால் அங்கும் இந்த மாதிரிக் கஷ்டங்கள் இல்லாமலா இருக்கின்றன? அப்படியே வேறு இடங்களில் சென்று ஷவரம் செய்துகொண்டாலும் ஆறுமுகம் கடையைத் தாண்டித்தானே வீடு செல்ல வேண்டும்? அப்பொழுது அவனிடம் தலையைக் காட்டாது இருக்க முடியுமா ? அவன் நம்மேல் வைத்திருக்கும் மரியாதைக்குப் பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது?

ஆறுமுகம் முதலாளியாகையால் ஒரு சிலருக்குத் தாம் அவனே நேராக ஷவரம் செய்வது வழக்கம். அந்த ஒரு சிலருள் நானும் ஒருவன்.

நமக்கு ஷவரம் செய்துகொண்டிருக்கும்போதே வீதியில் போகும் ஒவ்வொருவரையும் சலாம் செய்து உள்ளே அழைப்பதிலும், ஷவரம் செய்துகொண்டவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிப் பெட்டியில் போட்டு, பூட்டிச் சாவியைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு, அவர்களுக்குச் சலாம் போட்டு வழி அனுப்பு வதிலும், இடையிடையே நேரத்தைப் போக்கிவிடுவான். அத்துடன் பலகாரம், டீ முதலியவற்றை வேறு வாங்கி வரச் செய்து நமது அனுமதி பெற்றுச் சாப்பிட ஆரம்பித்துவிடுவான் !

ஷவரம் செய்யும்போது, குதிரை வண்டிக்காரர்களும், போட்டோக்காரர்களும், ட்ரில் மாஸ்டர்களும் படுத்தும் பாட்டைவிட அதிகப் பாடுபடுத்திவிடுவான்.

“சார், கொஞ்சம் தலையைக் குனிந்துகொள்ளுங்கள். சார், கொஞ்சம் இப்படித் திரும்புங்கோ. கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழே” என்று, கழுத்தைத் திருகாமல் மற்றவற்றை எல்லாம் செய்துவிடுவான்.

கத்தியை எடுத்து மூக்குக்குக் கீழே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்ணிர் கலங்கும். அது நல்ல கத்தியாக இருந்தாலல்லவா ? பட்டாவைத் தீட்டியல்லவா நமது தோலைப் பதம் பார்க்கிருன் ?

ஒரு சமயம் இப்படித்தான் ஷவரம் செய்துகொண்டிருந்தான். அடுத்த வீட்டில் ஏதோ அழுகைக் குரல் கேட்டது.

ஆறுமுகம் என்னைப் பார்த்து, “சார், இங்கே அடுத்த வீட்டிலே இறந்து போனாங்களே, அவங்க உங்களுக்குச் சொந்தமா?” என்று கேட்டான்.

“ஏன் ? அப்படி ஒன்றும் இல்லையே!”

“அப்படின்ன நீங்க இன்னும் ரொம்பத் தங்கமான வங்க, சார்.”

“என்னப்பா அப்படிச் சொல்கிறாய் ?”

“இல்லை, அந்த அழுகைக் குரலைக் கேட்டவுட னேயே மளமளவென்று கண்ணிர் வந்துவிட்டதே!”

“அனுதாபத்தால் கண்ணீர் வரவில்லை. கத்தியின் செய்கையால்தான் கண் கலங்குகிறது” என்பதை நான் அவனிடம் சொல்லியிருப்பேன். ஆனாலும், என்னுடைய தங்கமான குணத்தைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது சும்மா இருந்துவிட்டேன்.

‘ஏன் சார், நீங்க ஏன் மீசை வச்சுக்கப்படாது?’ என்று ஒரு தடவை கேட்டான்.

எனக்கும் ஆசைதான், பாரதியாரைப் போல மீசை வைத்துக்கொள்ள. அத்துடன் மூக்குக்குக் கீழே ஆறு முகத்தின் கத்தி போகாது தடுத்தும் விடலாமல்லவா ?

“வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் வீரமும் இருக்க னும், மீசையும் இருக்கணும். என்னைப் போல ஆளுக் கெல்லாம் மீசை எதுக்கப்பா? வேண்டாம்” என்றேன்.

“ஆமாம் சார், வாஸ்தவந்தான். கரப்பாம்பூச்சி கூடத்தான் மீசை வச்சிருக்கு” என்றான் சிரித்துக் கொண்டே.

இவ்வளவு பிரியமாக இருந்தாலும் ஆறுமுகம் எனக்கு இப்பொழுது கொஞ்சம் பிடிக்காதவனாகி விட்டான்.

காரணம், ஒருநாள் எனக்கு கிராப் வெட்டிக் கொண்டிருந்தான். வீதியில் மேளச் சத்தம் கேட்டது. ஆறுமுகமும் மேளக்காரர் கூட்டத்தில் ஒருவனாதலால் மேளத்துக்குத் தக்க தாளம்போட ஆரம்பித்துவிட்டான். கையால் அல்ல ; கையில் வைத்திருந்த கத்திரிக் கோலால்! டக் டக் என்று சப்தம் உண்டாக்கி ஷவர வேலையோடு தாளம் போடும் வேலையையும் சேர்த்துக் கொண்டான் ; நானும் இதில் லயித்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் சென்று பார்த்தால், ஐயோ! என் தலைமயிர் சில இடங்களில் ரொம்பக் குட்டையாகவும், சில இடங்களில் அடியோடும் அலங்கோலமாக வெட்டப் பட்டிருப்பது கண்ணாடியில் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. வெளியில் தலைகாட்ட முடியாதே என் பதை நினைத்து வருந்தினேன்.

இருந்தாலும் ஆறுமுகம், “ சார், மன்னிச்சுடுங்க" சார், தெரியாமல் பண்ணிட்டேன். ‘சம்மர் கிராப்’ பண்ணிவிடலாம் சார்,” என்று யோசனை சொல்ல ஆரம்பித்தான்.

எப்படி? மழை காலத்தில் ‘சம்மர் கிராப்’ செய் கிறானாம் ! என்ன செய்வது ? இப்பொழுது அவன் யோசனைப்படியே சம்மர் கிராப் வைத்து விரைவாக வளர்த்து வருகிறேன்.

நல்ல வேளை, தாளம் போடும்போது மெய்மறந்து காது, மூக்கு இவைகளைக் கத்தரிக்காது, தலைக்கு வந்ததைத் தலைமயிரோடு விட்டுவிட்டானே !