உள்ளடக்கத்துக்குச் செல்

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/துரோணரின் மகள்

விக்கிமூலம் இலிருந்து

12. துரோணரின் மகள்

வில் ஆசிரியர் துரோணருக்கு ஒரு மகன் இருப்பது தான் நமக்குத் தெரியும். அவன் பெயர் அசுவத்தாமன். அவன் சிரஞ்சீவி.

துரோணருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் பெயர் சாந்தா என்றும் நாடோடிக் கதை ஒன்று கூறுகின்றது. அவள் வரலாறு அற்புதமானது. அதைச் சிறிது காண்போம்.

ஒரு நாள் துரோணர் வீட்டில் இறை வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

அவ்வூரில் திருக்குலத்து அடியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சேதா. மிக்க பக்திமானாக இருந்தமையால் பக்த சேதா என்று அழைக்கப்பட்டார்.

அவர் மனைவி பெயர் காந்தா, அவர்களுக்கு ஒரு மகள் அவள் பெயர் சேவா.

துரோணர் வீட்டில் வழிபாடு நடப்பதைப் போலத் தன் வீட்டிலும் வழிபாடு நடத்தல் வேண்டும் என்பது சேவாவின் ஆசை. வழிபாட்டுக்கு மலர் வேண்டுமே!

தன். தந்தை தைத்த செருப்புக்களைத் துரோணரின் சீடரிடம் கொண்டு போய்த்தந்து, அவர்களிடம் மலர்களை வாங்கிவந்து, தன் தந்தையிடம் இறை வழிபாட்டுக்குத் தந்தாள் சேவா.

“செருப்புக்கு மலர் மட்டும் விலையாகுமா? மேலும் பணம் கேட்டு வாங்கி வா” என்று காந்தா தன் மகளைத் துரோணர் வீட்டுக்கு அனுப்பினாள்.

அங்குச் சென்ற சேவா, துரோனர் மகள் சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “என் தந்தை படைக்கும் நைவேத்யத்தைப் பகவான் நேரில் வந்து உண்கின்றார்” என்றாள். சாந்தா, இதை நம்பவில்லை. நீ சொல்வது பொய் என்று சேவாவிட்ம் கூறினாள்.

“நீ என்னுடன் வா! நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்கின்றேன்” என்றாள் சேவா.

சேவாவுடன் சென்ற சாந்தா, அவள் கூறியது உண்மை என்பதைக் கண்ணாரக் கண்டு வியப்புற்றாள்.

உடனே வேகமாக ஓடி வந்து, தன் தந்தை துரோனரிடம், தான் கண்ட அதிசயத்தைக் கூறினாள்.

துரோணர், மகளின் கூற்றை நம்பவில்லை. சாந்தாவுக்கு மூளை குழம்பிவிட்டதால், இப்படி உளறுகின்றாள். தாழ்குலத்தான் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் ஏற்பானா? என்று கருதி, அவளை வீட்டில் அடைத்து வைத்தார்.

“கீழ்க்குலத்தானாகிய சேதா இறைவனை வழிபடுவதாக நடித்து இப்படிப் பொய்க் கதைகளைக் கட்டி விடுகின்றான். அவனை இப்படியே விட்டு வைத்தால், சாதி மரியாதையைக் குலைத்துவிடுவான். தாழ்குலத்தானுக்கு இறை வழிபாடு செய்ய உரிமை ஏது? உடனே அவனுக்குத் தக்கபுத்தி புகட்ட வேண்டும்” என்று முடிவு செய்தார் துரோணர்.

கீழ்க்குலத்தான் என்பதற்காக ஏகலைவன் வலதுகைப் பெருவிரலை வெட்டச் செய்தவர் அல்லவா துரோணர்!

உடனே சேதாவை அழைத்து வரச் செய்தார். “நாளைக் காலையில், ஆயிரம் சோடி செருப்புக்கள் அவசியம் தருதல் வேண்டும். இல்லையேல், மரண தண்டனை தரச்செய்வேன்” என்று கடுமையான உத்தரவிட்டார்.

என்ன செய்வார் சேதா! “ஒரு நாளில் ஒரு சோடி செருப்புத் தான் தைக்க இயலும் ஆயிரம் சோடி தைப்பது எப்படி? அதற்கு வேண்டிய மூலப் பொருளுக்கு எங்கே பேர்வது? சரி நம் தலை தப்பாது” என்று அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தார். வந்த சோர்வால் அப்படியே தூங்கி விட்டார். விடிந்ததை உணர்ந்து எழுந்தார்.

ஆயிரம் சோடிசெருப்புக்கள் தைக்கப்பட்டு அடுக்கடுக்காகக் கட்டி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தார். ஏது. இவை? எங்கிருந்து வந்தன என்று திகைத்தார். இறைவனே நமக்காக இவற்றைத் தைத்து வைத்துள்ளான் என்று தெரிந்து கொண்டார்.

துரோணரின் உத்தரவுப்படி குறித்த நேரத்தில் ஆயிரம் சோடியையும் கொண்டுபோய்ச் சமர்ப்பித்தார் சேதா!

சேதாவின் செயல் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக அவன் மேல் சினம் கொண்டார் துரோணர். தம் கை வலிக்கும் வரைக்கும் சேதாவைத் தடியால் அடித்தார். சேதா அலுங்காமல் குலுங்காமல் நின்றார். ஏன் நிற்கமாட்டார்? அடியெல்லாம் இறைவன் அல்லவா தாங்கிக் கொண்டான். வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தா, தந்தையின் கொடுமை கண்டு, உண்ணா நோன்பு மேற்கொண்டாள். தன் பக்தை வீட்டுச் சிறையில் உண்ணாமல் உடல் வருந்துவதை இறைவன் பொறுப்பானோ?

வீட்டுக்கதவு தானாகவே திறந்து கொண்டது. சாந்தா வெளியேறினாள்.

சாந்தா தப்பி விட்டதை அறிந்த துரோணர்க்கு அடங்காச் சினம் மூண்டது.

துரியோதன மன்னனிடம் சென்று, “இந்தச் சேதா ஏமாற்றுக்காரன். மாயா ஜாலம் தெரிந்து வைத்து, பக்தனைப் போல் நடித்து மக்களை ஏமாற்றுகின்றான். தாழ்குலத்தானாகிய இவனுக்குக் கடுமையான தண்டனை தரல் வேண்டும். தண்டனை தாராவிடின், நான் உன் முகத்தில் விழிக்கமாட்டேன்” என்று சூள் உரைத்தார்.

ஆசாரியன் வாக்கைச் சீடன் மீறலாமா? “இந்தச் சேதாவின் கண்களைப் பிடுங்கிக் கைகளை வெட்டி விடுங்கள்” என்று உத்தரவிட்டான் துரியோதளன். சேதாவின் மனைவி காந்தா சிறைக்கு வந்து தன் கணவனுக்கு நேர்ந்த அவலநிலை கண்டு அலறினாள். “இந்த அவலம் கண்ட கண்கள் எனக்கு ஏன்” என்று தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டாள். அந்தக் கற்புக்கரசியின் கதறல் வீண் ஆகுமா? அந்த அவலக்குரல், இறைவன் காதில் படாதா?

பெரும் பூகம்பம் நிகழ்ந்தது. சிறைச்சாலை தகர்ந்தது. அந்நேரம் ஒரு குறவனும் குறத்தியும் எங்கிருந்தோ தோன்றினர். அவர்கள் தொட்டவுடனே சேதாவின் கால்கள் பொருந்திக் கொண்டன. கணவன்-மனைவி இருவர் கண்களும் ஒளி பெற்றன.

துரோணரின் வீட்டிலிருந்து தப்பிய சாந்தா திருக்குலத்தார். சேரிக்கு ஓடினாள். ஏனென்றால் சேரி முழுவதும் தீயிட்டு அழிக்கப் போவதாகத் துரோணர் கூறிக் கொண்டிருந்தார். துரோணர் கொடுமையிலிருந்து சேரிமக்களைக் காக்கவே சாந்தா அங்கே விரைந்தாள்.

துரோணர் சொன்னபடி சேரி தீப்பற்றி எரியத் தொடங்கியது.

சாந்தா, சேரிக்குழந்தைகளைக் காப்பதில் ஈடுபட்டாள். தன் உடலில் தீப்புண் ஏற்படுமே என்று அஞ்சாமல் சேரியினரைக் காப்பாற்ற முனைந்து நின்றாள்.

சாந்தா தீக்கு நடுவே சேரியிலிருப்பதைக் கேள்விப்பட்ட துரோணர் சேரிக்கு ஓடினார்.

அதற்குள் தீயில் வெந்து விடாமல் சாந்தாவைச் சேவா மீட்டு விட்டாள்.

தாங்கள் வழிபடும் இறைவன் திருவிக்கிரகத்தைக் காப்பதற்காகச் சேதாவும் காந்தாவும் ஓடினர்.

என்ன அதிசயம்! அங்கு நெருப்பே பரவவில்லை. இறைவன் முன் அமர்ந்து சேவாவும் சாந்தாவும் இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சேதாவும் காந்தாவும் இறைவன் திருவருளை எண்ணிக் கண்ணிர் சொரிந்தனர். திடீரென்று நெருப்பு அணைந்து விட்டது. அந்த நெருப்பினால், சேரிக்கு எவ்விதச் சேதமும் நேரவில்லை.

மகளைக் காண ஒடிய துரோனர். சேதாவின் வீட்டில் இறைவன் முன், சேவாவுடன் அவள் இருப்பதைக் கண்டார். கீழ்க்குலச் சேரி என்ற எண்ணம் தகர்ந்தது. சேரி வீட்டில் - சேதா வீட்டில் - நுழைந்தார். அங்குக் குடி கொண்டிருந்த இறைவன் முன் விழுந்து வணங்கினார்.

“பக்த சேதா அவர்களே! தங்கள் பெருமை அறியாமல், சாதி வெறியால் நீதி தவறிப் பல தீங்குகளை உமக்குச் செய்து விட்டேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்று சேதாவின் திருவடிகளிலும் விழுந்து வணங்கினார் துரோணர்.

பின்பு தம் மகள் சந்தரவைத் தழுவிக் கொண்டு, “மகளே! சாதி வெறித் திரை மூடியிருந்த என் கண்களைத் திறந்துவிட்ட தெய்வம் நீ! என் அகந்தையை நொறுக்க வந்த சம்மட்டி நீ! இனி இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டேன்” என்று குரல் தழுதழுக்கக் கண்ணீர் சொரிந்து தன் செயலுக்குக் கழுவாய் தேடலானார்.