ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/மலை போல் குவிந்த மலர்கள்
அருச்சுனன் பெருவீரன். தெய்வபூசை தவறாமல் செய்பவன். பூசை செய்யத் தவறுமாயின், உணவே உண்ண மாட்டான்.
அத்தகைய தெய்வ பக்தனிடமும் ஒரு குறை இருந்தது. உலகத்தில் தன்னைவிடச் சிறந்த பக்தர் இலர் என்று எண்ணும் இறுமாப்பே அது.
அதனால், வீமனைச் சற்று ஏளனமாக நோக்குவான்.
"இவன் தெய்வபூசையே செய்வதில்லை. எந்நேரமும் வண்டிவண்டியாய் உண்டி உண்பதிலேயே ஆர்வம் காட்டுகிறான்" என்பதால், வந்த ஏளனம் அது.
கண்ண பெருமான், அருச்சுனனிடத்துள்ள இந்த அகந்தையை அறிந்தார். "கீதை உபதேசம் நேரில் கேட்டும் அகந்தை போகவில்லையே! அகந்தை இருந்தால், பிற நல்ல குணங்களையெல்லாம் மழுங்கச் செய்து விடுமே! ஆதலால், இவன் அகந்தையைத் துடைக்க வேண்டும்" என்று எண்ணிச் செயல்படக் காலம் எதிர்நோக்கியிருந்தார்.
பாரதப்போரில் அருச்சுனன் மகன் அபிமன்யுவைச் சயததிரதன் என்பவன் கொன்று விட்டான்.
"என் மகனைக் கொன்றவனைக் கொன்றே தீருவேன்" என்று அருச்சுனன் சபதம் செய்தான்.
அந்தச் சபதம் நிறைவேற வேண்டுமாயின், சிவபெருமானிடம் பாசுபதம் என்னும் ஆயுதம் பெறவேண்டும். அதற்காக சிவன் இருக்கும் கயிலை மலைக்கு அருச்சுனனை அழைத்துக் கொண்டு, கண்ணன் புறப்பட்டான்.
பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப்பகுதியில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை.
ஆனால் வழியெங்கும் மலர்கள் குவிந்தவண்ணமே இருந்தன.
சிவகணங்கள் என்னும் சிவத் தொண்டர்கள், குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்துவிடும். மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திச் சிவகணங்கள் ஓய்ந்து சோர்ந்து போய்க் கொண்டிருந்தனர்.
இக்காட்சியைக் கண்ட அருச்சுனன், கண்ணனிடம் "எம்பெருமானே பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால், மலர்கள் மலைபோல் குவிந்து கொண்டே இருக்கின்றனவே! இக்காட்சி வியப்பாக இல்லையா?" என்று கேட்டான்.
"அருச்சுனா! இம்மலர்கள் இங்குப் பூப்பவை அல்ல. நிலவுலகில் மலர்வன. அவை அனைத்தும் இங்கே வந்து குவிகின்றன" என்றான் கண்ணன்.
"நிலவுலக மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?" என்று கேட்டான் அருச்சுனன்.
"தானாக இம்மலர்கள் இங்குக் குவியவில்லை. நிலவுலகில் உன் அண்ணன் வீமன், தெய்வத்துக்கு அருச்சனை செய்த மலர்கள் இவை. அவன் அருச்சனையில் பயன்பட்ட மலர்கள் இங்குக் குவிக்கின்றன" என்றான் கண்ணன்.
"வீமனாவது, அருச்சனை செய்வதாவது? அவனுக்கு அருச்சனை செய்ய நேரந்தான் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லையே அப்படியிருக்கும் போது, அவன் எப்போது அருச்சனை செய்வான்? அப்படியே அருச்சனை செய்தாலும், யாராவது கண்டிருக்கமாட்டார்களா? இதுகாறும் யாரும் கண்டதில்லையே! நீ கூறுவதை எப்படி நம்ப முடியும்" என்று அருச்சுனன் நீண்ட வினா எழுப்பினான்.
"ஆம்! அருச்சுனா வீமன் அருச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. அவன் உன்னைப் போல், தெய்வ உருவம் நிறுவி, மந்திரங்கள் ஓதி, மலர்கள் தூவி அருச்சனை செய்வதில்லை.
அவன் செய்யும் அருச்சனை மானசீகமானது; மனத்தாலேயே செய்யப்படுவது. அவன் எங்காவது சென்று கொண்டிருக்கும்போது, கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும்! என்று மனத்தால் நினைப்பான். உடனே அம்மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலைமலையாகக் குவிந்து விடும். நீ நினைப்பது போன்று வீமன் உண்ணும் பிண்டம் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். அவனோடு ஒப்பிடும்போது, நீ பக்தனே அல்ல என்ற நிலைக்குத் தள்ளப் படுவாய்! ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பக்தனை நீ ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டுவிடு!
"நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. தெய்வபக்திக்குப் பெருந்தடையாக இருப்பது அகந்தையே! நாயினும் கடையேன் என்று தன்னை நினைப்பவனே உண்மைப் பக்தன் ஆவான்".
என்று கண்ணன் கூறிய மொழிச்சுடரால் அருச்சுனன் நெஞ்சில் மண்டியிருந்த அகந்தை அரக்கு உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
தன்னைத் திருத்தி ஆட்கொள்வதற்குக் கண்ணன் செய்த உபதேசத்தை எண்ணி, அருச்சுனன் மெய்சிலிர்த்து நின்றான். அன்று முதல் வீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான் என்பதைச் சொல்ல வேண்டுமோ?