உள்ளடக்கத்துக்குச் செல்

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/தந்தையின் தவம்

விக்கிமூலம் இலிருந்து

23. தந்தையின் தவம்

பாரதம் ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் ஒன்று சிந்து.

அந்நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் சயத்திரதன். அவன் வளர வளரத் தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறர்க்குத் துன்பம் இழைப்பதைப் பெருமகிழ்ச்சியாகக் கருதினான். யாராவது அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால், அவர்களைத் தண்டிப்பான்.

சிந்து மன்னன், விருத்தக்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால், அவனைக் கண்டிக்கவே மாட்டான்.

திருமணம், செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் குறையலாம். என்று எண்ணிய தந்தை, அவனுக்குத் துரியோதனன் தங்கை துச்செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.

தந்தையின் எதிர்பார்ப்பு வீணானது. சயத்திரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.

"இத்தகைய கொடியவனுக்குக் கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகவுங்கூடுமே! இனி இவனைத் திருத்தவே இயலாது. இவன்கேடு அடையாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்னவழி என்று ஆராய்ந்தான்.

"தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று நம் ஒரே மகனைக் காப்போம்" என்று எண்ணினான். காட்டின் நடுவே சியமந்தகம் என்ற ஒரு தடாகம்(குளம்) இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்திருந்தன. வெயில் நுழைபு அறியாத சோலைகளாக அவை இருந்தன.

தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.

"என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்கவேண்டும்" என்று தான் இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.

பல ஆண்டுகள் தவம் செய்தான். வரமும் பெற்றுவிட்டான். இனித் தவத்தை முடிக்கலாம் என்ற நிலை.

அப்போது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவைச் சயத்திரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.

இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அருச்சுனன் "சயத்திரதனைக் கொன்றே தீருவேன்" என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அருச்சுனன் ஓர் அம்பால் சயத்திரதன் தலையைக் கொய்தான்.

உடனே கண்ணன் "அருச்சுனா! அந்தத் தலையை நிலத்திற்படவிடாதே. மேலும் மேலும் அம்பு தொடுத்துச் சியமந்தக தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை கையில் விழப்பண்ணு" என்று ஏவினான்.

கண்ணன் சொன்னபடியே அருச்சுனன் செய்தான். சயத்திரதன் தலை, தவம் செய்து கொண்டிருந்தவனுடைய விரித்தகையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்தமையால், துணுக்குற் தந்தை, தன்மகன் தலையைக் கீழே போட்டான்.

அவன் பெற்ற வரம் பலித்துவிட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்" என்பது தானே அவன் பெற்ற வரம்.

இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிர் இழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.

தீயவர் யாராயினும் திருத்த முயலுதல் வேண்டும். திருத்த இயலாவிடின், தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், தன்வினை தன்னைச் கூடாது விடுமா என்று ஆறுதல் பெறவேண்டும்.

இந்த நீதிக்கு மாறாகத் தவம் செய்த பெற்ற வரம், கருதிய பயன் தரவில்லை. மாறாகத் தவம் செய்தவனையே அழித்தது.