உள்ளடக்கத்துக்குச் செல்

பாஞ்சாலி சபதம்/65. திரௌபதி சொல்வது

விக்கிமூலம் இலிருந்து
65. திரௌபதி சொல்வது

‘சாலநன்கு கூறினீர் ஐயா, தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கதுநீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்” எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்.
வம்பு மலர்க்கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவி கரைந்திடுதல் கண்டே, சிலமொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கிழந்து கூறினான். 67

வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -- அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள். -- வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் -- அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான். -- இந்தப
பீடையை நோக்கினன் வீமனும், -- கரை
மீறி எழுந்தது வெஞ்சினம்; -- துயர்
கூடித் தருமனை நோக்கியே, -- அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டீரா? 68