உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் கதை/கதை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





தமிழ் ஓங்குக.
ஔவையார் கதை
கடவுள் வணக்கம்
பாட்டு

செந்தமிழ்ச் சொக்கநாதா! செய்யகயற் கண்ணித்தாயே! தொந்தி விநாயகனே! கந்தவேள் என்னும்மைந்தா! இந்தநல் வேளையிலே எங்களுக்கு அருளவேண்டும் வந்தடி வணங்கி நின்றோம் வாக்கருள் பண்ணவேண்டும் தென்கடல் குமரியம்மா திருவருள் செய்யவேண்டும்! பொன்னடி போற்றிகின்றோம் இன்னருளைப் பண்ணவேண்டும் கன்னல்தேன் அன்னமொழி கன்னித்தமிழ் அமுதமொழி மன்னவர் காத்தமொழி மாநிலமே ஏத்தும்மொழி அரியசெந் தமிழினிலே அழகுறப் பாடவேண்டும். பெரியோர்கள் நீங்களெல்லாம் பேணியே கேட்கவேண்டும் உரியபேர் ஔவையென்னும் உயர்செல்வி கல்விவல்லாள் பிரியமாய் இளைஞரெல்லாம் பேசுமொரு பெண்புலவர் நாமகளின் அவதாரம் கங்கையர்க்குள் அவள்சாரம் பாமகள் ஔவையாவார் பாருக்குப காரமாவார் பூமியாள் அரசரெல்லாம் போற்றியே வணங்கப்பெற்றார் நாமமிது தெரியார்கள் நாட்டிலேதும் அறியார்கள் தன்னலம் எண்ணாதவர் தமிழரசி ஔவையாவார் மன்னுயிர் நன்மையெண்ணி மாநிலத்தின் இன்பம்விட்டார். அன்னையாய் உலகினுக்கே அறவுரைகள் பேசிகின்றார் இன்னவர் ஔவையாரின் இனியகதை கேட்பிரையா !

வசனம்

கல்வியின் தெய்வமாகிய கலைவாணி - சரசுவதி தேவியின் திருஅவதாரம் என்று கற்றவரெல்லாம் கொண்டாடும் கண்டமிழ் மூதாட்டியராகிய ஔவையாரின் அரிய பெரிய கதையை அறிவில் சிறியவர்களாகிய நாங்கள், இந்த வில்லிசையில் அமைத்துச் சொல்லப்போகிறோம். ஔவையாரைப் பற்றி அறியாதவர் எவருமே இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள். எல்லோரும் தெரிந்திருப்பார்கள். முதல்வகுப்புப் படிக்கும் சிறுபிள்ளைகளும் 'ஔவை தமிழ்க் கிழவி' என்று படித்திருப்பார்கள். இங்ஙனம் சிறுவர்முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் அறிந்த ஔவையாரைப் பற்றி, "நாங்கள் என்ன சொல்லப்போகிறோம்? நீங்கள் எங்களிடமிருந்து என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?" என்பவற்றையெல்லாம் அன்போடும் அமைதியோடும் இருந்து இந்தக் கதையைக் கேட்ட பின்புதான் சொல்லமுடியும். ஆதலினாலே, கதையைத் தொடங்குகிறோம். காதைக்கொடுத்துக் கேளுங்கள் ஐயா!

பாட்டு

தமிழ்நாடு செய்ததீ வினையால்
தண்டமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த
தக்கவர லாறேதும் காணோம்
அமிழ்தென்ன அவர் தந்த பாடல்
அவைகண்டு வரலாறு நாடல்
ஆராய்ச்சி யாளர்க்குக் கேடில்

ஔவையின் பெற்றோரைப் பற்றி
அறிதற்கு வழியில்லே சுற்றி
ஆராய்வோம் நாமதைப் பற்றி
செவ்வையாய் நோக்குவார் தெரிவார்
செந்தமிழ்ப் பலநூல்கள் அறிவார்
தேர்ந்துவரலாற்றினைப் புரிவார்

வசனம்

நம் தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார் அவதரித்த நாடு சேரநாடாகும். இப்போது மலையாள நாடென்று சொல்லப்படும் நாடே பழைய சேரநாடு. இதை மலைநாடு என்றே ஔவையார் குறிப்பிடுவார். தமிழ்நாட்டின் பல பகுதிகளுடைய சிறப்புக்களையும் ஒரே பாட்டில் உணர்த்த விரும்பிய ஔவையார், "வேழம் உடைத்து மலைநாடு" என்று தொடங்கினார். முதலில், தாம் பிறந்த நாட்டின் பெருமையையே காட்டினார். அவருடைய நாட்டுப்பற்றைப் பாருங்கள்!

பாட்டு

சேரன் ஆண்ட செல்வநாடு
செங்குட் டுவனன்(று) ஆண்டநாடு
வீரர் பல்லோர் வாழ்ந்தநாடு
வேந்தர் புகழைக் காத்தநாடு
மலைகள் சூழ ஆளும்நாடு
மாதவர் எங்கும் தங்கும்காடு
கலைகள் எல்லாம் ஓங்கும்நாடு
கற்றவர் பல்லோர் தாங்கும்நாடு
ஆறுகள் பாய்ந்து பரவும்நாடு
யானைகள் மேய்ந்தங் குலவும்நாடு
தேறிடும் தீந்தமிழ் ஆய்ந்தகாடு
தேர்தமிழ் வாணர் வாழ்ந்தநாடு

உலப்பில் ஆனந்தம் பொங்கும்நாடு
உத்தமக் கற்பினர் தங்கும்நாடு
சிலப்பதி காரம் பிறந்தநாடு
செந்தமிழ் காத்த சேரநாடு

வசனம்

மலையாள நாடாகிய பழைய சேரநாட்டிலே ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னாலே - கடைச்சங்க காலத்திலே, தக்கார் பலர் வாழ்ந்த தகடுர்த் திரு நகரிலே,

பாட்டு

பண்ணிசைத்து வாழ்ந்துவரும் பாணர்தம் பழங்குடியில்
எண்ணரிய கலைவல்ல யாளிதத்தன் என்பார்க்கு
வாழ்க்கைப் பெருந்துணையாய் வாய்த்தமனை யாளுடனே
வாழ்ந்த அறப்பயனுய் வந்ததொரு பெண்மகவு
பல்லாண்டு பிள்ளையின்றிப் பாரிலறம் செய்தவர்கள்
எல்லையிலா நல்லறங்கள் இயற்றிவரம் வேண்டியவர்
கலைகள் பல கற்றுணர்ந்த கற்றவராம் பெற்றியர்க்குக்
கலைமகளே நன்மகவாய்க் காசினியில் அவதரித்தாள்
குழந்தை பிறந்தவுடன் குளிர்ந்தமழை பெய்ததையா
பழங்கள் மரங்களெல்லாம் காய்த்தினிது பழுத்தவையா
செந்நெற் பயிர்களெல்லாம் செழிக்கோங்கி வளர்ந்தவையா
கன்னல் கதலியெல்லாம் விண்ணோங்கி வளர்ந்தவையா
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்நேர் பசுக்களெல்லாம்
பாங்கினர் வந்துகண்டார் ஒங்குவகை கொண்டுகின்றார்
தேவமகள் அவதரித்தாள் திருக்குழந்தை அருட்குழந்தை
ஆவியெனப் பேணிடுவீர் தேவியிவள் கலைவாணி
என்றினிது புகழ்ந்திட்டார் நன்றினிது மகிழ்ந்திட்டார்
அன்றுமுதல் பெற்றோர்கள் அகமகிழ்ந்து வாழ்ந்திட்டார்

வசனம்

யாளிதத்தனும் அவன் மனைவியும் தாம் பெற்றெடுத்த பெருந்தவக் குழந்தையைப் பேணி வளர்த்து வந்தார்கள். குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மூன்றாண்டுப்பருவம் அடைந்தது. பெண்குழந்தையாக இருந்தாலும் அதன்பால் கண்ட தெய்வங்கலங்களால் அளவற்ற மகிழ்ச்சியுடன் கண்ணுங் கருத்துமாய்க் காத்து வளர்த்தார்கள். குழந்தையின் மழலை மொழிகேட்டு உள்ளம் குளிர்ந்தார்கள். ஆடியசைந்து வரும் இளநடைகண்டு இன்பம் கொண்டார்கள். இங்ஙனம் இன்புற்று அன்புற்று வாழ்ந்துவரும் நாளில், குழந்தையின் தாய் நோய்வாய்ப்பட்டு இறக்குந் தறுவாயில் இருந்தாள். ‘முந்தித் தவங்கிடந்து, முந்நூறுகாட்சுமந்து, அந்திபகலாச் சிவனே ஆதரித்துத், தொந்திசரிய நொந்து பெற்ற நந்தவக் குழந்தையை நன்கு பேணி வளர்ப்பாரில்லையே! யான் இறந்தால் தாயில்லாக் குழந்தையாகத் தவிக்குமே!’ என்று, அத் தாய் வருந்திப் புலம்பினாள். அவளது வருத்தத்தைக் கண்ணுற்ற குழந்தை, தாயின் பக்கத்திலே சென்று அவளது கண்ணிரைத்துடைத்து, அவளை நோக்கி,

“இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ-முட்டமுட்டப்
பஞ்சமே யானலும் பாரமவ னுக்கன்னாய் !
நெஞ்சமே அஞ்சாதே நீ”

என்ற பண்ணமைந்த பாட்டைப்பாடி, அவளைத் தேற்றியது. தன்னைத் தேற்றிய தனிப்பெருங் குழந்தையின் இனிப்பான ஆறுதல் மொழியைக்கேட்ட தாய் —அதிலும பாட்டாகப் பாடித் தேற்றிய குழந்தையின் ஆற்றலைக் கண்ட தாய் உண்மையாகவே கவலையொழிந்தாள். இது தெய்வக் குழந்தை இதைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டிய தில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்தாள். அன்றே ஆறுதலோடு உயிர்நீத்தாள். மனைவியை இழந்த யாளிதத்தனும் குழந்தையைத் தன் உறவினர் வீட்டில் வளர்க்கு மாறுகொடுத்துத் தான் வெளியூர் புறப்பட்டுவிட்டான்.

பாட்டு

பெற்றோரைப் பிரிந்திட்ட பிள்ளை
பேணிடும் உற்றோர்கள் இல்லில்
உற்றங்கு வளர்ந்தனள் நாளும்
ஒர்ந்தனள் பலகலைகள் மேலும்
கல்வியில் கலைவாணி யொத்தாள்
கற்றவர்கள் மெச்சிடப் பெற்றாள்
செல்வியாம் திருமகளை யொத்தாள்
சேயிழை பேரழகை யுற்றாள்
இசைவல்ல மெல்லியல் ஆனாள்
யாழிசையில் ஒப்பாரைக் கானாள்
நசையுள்ள நடனத்தில் வல்லாள்
நற்றமிழ்ப் புலமைகொள் நல்லாள்
நல்லிசைப் புலமைமெல் லியலாள்
நாடுறும் தமிழிசைக் குயிலாள்
வல்லவர் ஏத்துகவி சொல்வாள்
வையகம் வாழவழி விள்வாள்
முத்தமிழ்ப் புலமையும் மிக்காள்
மூதறி வாளர்புகழ் தக்காள்
வித்தகர் ஏத்திடும் அறிவாள்
விண்ணவர் போற்றுபணி புரிவாள்
கலையுரு வானகலை வாணி
கற்றவர்கள் அஞ்சுவார் நாணி
சிலைத்தங்க மானதிரு மேனி
சீர்ப்பருவ முற்றாளம் மானி

வளர்த்திட்ட பெற்றோர்கள் அன்று
வாய்த்த மணாளரைக் கண்டு
கிளர்மணம் செய்குவோம் என்று
கேட்டவர்க்குச் சொன்னார் நன்று
மணமகன் வீட்டார்கள் வந்தார்
மணம்பேசி முடிக்க விரைந்தார்
மணமகள் தனைக்காண நினைந்தார்
வளர்ப்பவர் பெண்ணரு கடைந்தார்
பணிகள்பல பூட்டியணி செய்தார்
பாவையைப் பேரழகு செய்தார்
மணம்பேச வந்தவர்கள் முன்னே
வந்திடுக என்றினிது சொன்னார்
முக்காடு போட்டங்கு வந்தாள்
முன்கோலை யூன்றியவண் வந்தாள்
அக்கணமே கண்டவர் எழுந்தார்
அன்னாளை மனம்பேசப் பயந்தார்
இச்செய்தி அறிந்தார்கள் எல்லாம்
இனிமணம் பேசவோ வல்லார்
அச்சமே கொண்டேதும் பேசார்
அவள்மனம் போல்விடக் கூசார்
உலகிற்கு நற்பணிகள் செய்ய
உடலின்பம் விட்டனள் மெய்யாய்
அலகிலாப் பேர றங் கூற
அவதரித் தாளவள் நேராய்
எல்லோர்க்கும் தாயாகிவிட்டாள்
இனியநல் லறவுரைகள் சொற்றாள்
வல்லார்க்கும் வல்லவள் ஆனாள்
வையத்தின் ஞானவொளி யானாள்
தாயான பெண்ணவ்வை என்பார்
தாரணிக் கமுதமொழி சொல்வார்

சேயாக மக்கள்தமை எண்ணி
செய்யவறம் காட்டிடுவர் நண்ணி
பெற்றோர்கள் இட்டபெயர் போச்சு
பேர்ஔவை எனச்சொல்ல லாச்சு
உற்றோர்கள் தெய்வமென லாச்சு
உயர்தமிழ் அரசியெனப் பேச்சு
தமிழரசி ஔவையை அறியார்
தமிழினில் ஏதுமே அறியார்
கமழ்ந்திடும் ஞானமணம் காணக்
கற்றவர்க் கவள்பாடல் வேனும்

வசனம்

தகடூரில் தோன்றித் தமிழ்க்கலை யாசியாய்த் திகழ்ந்து வரும் ஔவையாரின் அருமை பெருமைகளே அந்நாட்டுச் சிற்றரசனும் பெருவள்ளலும் ஆகிய அதியமான் கேள்வியுற்றான். ஔவையாரைத் தனது அரசவைப் புலவராக ஆக்க விரும்பினான். அரசர்களிடமும் வள்ளல்களிடமும் பரிசுபெற்றுத் தம் வாழ்க்கையை வளமுற நடத்தும் குணமுறு பாணர் குடியில் பிறந்த ஔவையாரும் தமிழ் வள்ளலாகிய அதியமானப் புகழ்ந்துபாடிப் பரிசுபெறப் பேரார்வமுடன் இருந்தார். ஒருநாள் அவனது சபையை அடைந்து அவனைப் புகழ்ந்து பாடினார். ஔவையாரின் அருந்தமிழ்ப் புலமையை அதியமான் அகமகிழ்ந்து போற்றினன். அவரிடத்துப் பேரன்பு காட்டினான். பரிசிலை உடனே கொடுத்தால் பைந்தமிழ்ச் செல்வியார் நம்மைப் பிரிந்து சென்று விடுவாரே என்று எண்ணிக் காலத்தை நீட்டினான். பல நாட்கள் அதியமான் அரண்மனேயில் தங்கியிருந்தும் பரிசு கிடைக்கப்பெறாத ஔவையாருக்கு அதியமான் மீது அளவற்ற கோபம் உண்டாயிற்று. பொறுமை யிழந்தார். கொண்டுவந்த பொருள்களை மூட்டை கட்டினார். அரண்மனையினின்று வெளியே புறப்பட்டார். வாசலில் நின்ற காவலாளனைப் பார்த்து,

பாட்டு

வாயிலைக் காக்கும் வல்லாள வீரனே!
மன்னனுக்குச் சொல்லி வாராய்!
வந்தவர்க் கடையாத வாயில்காப் போனே!
வள்ளலுக்குச் சொல்லி வாராய்!
அதியமான் தன்தரம் அறியாது போனாள்
அன்னதை நீ கூறி வாராய்!
அடைந்தவள் என்தரம் அறியா திருந்தான்
அச்செயலும் செப்பி வாராய்!
மன்னவர் வேறிங்கு இல்லாமல் இல்லை
மற்றவர்கள் காப்பர் கூறாய்!
இன்னருள் மன்னரை நாடியே செல்வேன்
இச்செய்தி அவற்குச் சொல்வாய்!
கற்றவர் செல்லிடம் காப்பவர்கள் உண்டு
காத்திருந்தேன் வீணே இங்கு
உற்றவர் சீரை உணராத மன்னர்
உலகிருந்தால் பயனும் என்னே!

வசனம்

என்று சொல்லி வழிநடந்தார். ஔவையாரின் கோப மொழிகளை வாயிற்காவலன் ஓடோடிச் சென்று. அதியமானிடம் அறிவித்தான். அதுகேட்ட அதியமான் ஆசனம் விட்டெழுந்தான். அரண்மனையின் வெளியே வந்து ஔவையாரை வழிமறித்து, மீண்டும் அரண்மனைக்கு அழைத்தான். அறியாது செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டினான். தனது கொடைமன்றத்துக்கு வந்தருளும் படி பணிந்து வேண்டினான். அதியமானுடைய அன்பு நிறைந்த, பணிந்த மொழிகளால் ஔவையார் சினந்தணிந்து அவனுடன் வந்தார். அவனது கொடை மன்றத்தை யடைந்தார். அவருக்கு அதியமான் பொன்னும் மணியும் பூம்பட்டாடைகளும் வேண்டுமட்டும் பரிசாக வழங்கினான்.

பாட்டு

ஔவையே அறிவுச்செல்வி அடியேனைப்
பொறுத்தல் வேண்டும்
செவ்வையாய் நுந்தம் அன்பைச் சிறக்கவே
பெறுதல் வேண்டும்
தண்டமிழ்ச் சுவையைஉம்பால் கண்டிட
வேண்டும் என்றே
கொண்டவோர் எண்ணத்தாலே பரிசிலைக்
கொடுக்க வில்லே
பரிசிலைக் கொடுத்துவிட்டால் பதியினைப்
பெயர்ந்து செலவீர்
விரைவினில் உம்மைப்பிரிய விரும்பிலேன்
ஆகை யாலே
காலத்தைத் தாழ்த்திவிட்டேன் கடுஞ்சினம்
கொள்ளல் வேண்டாம்
ஞாலத்தில் கற்றேர்தம்மைப் பிரிந்திட
நயப்பார் யாரே?
கற்றார்கூட் டுறவெங்காளும் களிப்பினை
நல்கும் மேலும்
வற்றாத தமிழின்பத்தை வழங்கிட
வேண்டும் தாயே!
இங்ஙனம் சொல்லிநிற்கும் வள்ளலின்
இதயம் கண்டார்

பொங்கிடும் அன்புவெள்ளம் புரண்டலை
மோதக் கண்டார்
ஐயைய்யோ யாதுசெய்தேன் அதியமான்
அன்பைக் காணேன்
வையகம் போற்றும்வள்ளல் வண்மையைக்
கண்டே னில்லை
ஒருநாள் இருநாளல்ல பலநாள்
செலினும் அன்னான்
மருவிடும் சுற்றமோடு பெருகவே
செலினும் வள்ளல்
தலைநாளைப் போலஅன்பு தந்துமே
தாங்கிக் காப்பான்
பலநாள் கழிந்திட்டாலும் பரிசுவிரைந்
தளித்திட் டாலும்
யானையின்கைக் கவளம்போல என்றுமது
தப்பா தையோ!
கோனவனாம் தமிழகவள்ளல் அதியமான்
குணமீ தையோ!
என்றுபுகழ்ந் திணிதேஏத்தி நன்றவனை
வாழ்த்தி யிட்டார்
அன்றுமுதல் பன்னாளவ்வை அவன்சபை
அமர்ந் திருந்தார்

வசனம்

அதியமான் அரசவைப் பெரும்புலவராய் விளங்கி, அவ் வள்ளலுக்கு வாய்த்த வேளையெல்லாம் வளமான தமிழ்ச்சுவையை யூட்டினார். அவனைத் தமிழமுதப் பெருங்கடலில் திளைக்குமாறு செய்தார். ஔவையார் ஊட்டி வரும் தமிழமுதத்தைப் பருகிய அதியமான் அவரைக் கண்ணினைக் காக்கின்ற இமையைப்போல் காத்துவந்தான். ஒருநாள் அதியமான், தனது மலைநாட்டைச் சார்ந்த தமிழ் மலையாகிய பொதியமலையின் அரிய வளங்களைக் காணூம் வேணவாவுடன் தனது பரிவாரம் சூழச்சென்றான். மலை வளம் கண்டு மகிழ்ந்துகொண்டு, உல்லாசமாக வரும் வேளையில் தவமுனிவர் ஒருவரைத் தரிசித்தான். அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான். அவனது சிறந்த குணத்தை யறிந்த அருந்தவ முனிவர் அவனுக்கு ஆசி கூறினார்.

பாட்டு

வானவர் வணங்கும் மலையதுதனிலே
வந்திட்ட செந்தமிழ் மன்னா!
தானவர் நடுங்கும் தலமிதுதனிலே
சார்ந்திட்ட வேந்தர் வேந்தே!
பிறையணி பெருமான் அருளது தன்னால்
பெருமலை யிதனில் வாழும்
நிறைமொழி முனிவன் தமிழ்வளர்இனியன்
அகத்தியன் நிலைத்து வாழும்
பொதியநன் மலையின் பொற்புயர் சிகரம்
பொருந்திய பிளவங் கொன்றில்
அதிமது ரந்தரு கருநெல்லிக்கனி
அருமரம் அங்கே உண்டு
அம்மர மதனில் பன்னிராண்டுக்
கொருமுறை அக்கனி தோன்றும்
செம்மைகொள் அக்கனி தின்றவர் பன்னாள்
செகத்தினில் நீடு வாழ்வார்
நறுஞ்சுவை அக்கனி முற்றிடும் நன்னாள்
நண்ணிய துடனே செல்வாய்

அருங்கனி பெற்றினி துண்டுமகிழ்வாய்
அவனியில் நீடு வாழ்வாய்
இங்ங்னம் இயம்பி அம்முனி சென்றார்
இன்னருள் வள்ளல் விரைந்தான்
பொங்குயர் பொதிய மாமலைப் பிளவைப்
போய்க்கண்டு அரிதில் புக்கான்
வெடித்த பாறையுள் வீசியகிளைமேல்
மென்கனி தன்னைக் கண்டான்
துடித்திடும் உள்ளம் தூண்டிடஉச்சித்
தொங்கிடும் கனியைப் பறித்தான்
அமுதக் கனியதைப் பெற்ற அதியமான்
அரண்மனை விரைந்த டைந்தான்
தமிழ்முனி யளித்த தண்ணருள் அமுதம்
தானுண்டு வாழ விரும்பான்
பன்னாள் உலகினில் யானும் வாழ்ந்தால்
பயனே தும் விளைவ துண்டோ?
மன்னிடும் நூல்பல மக்களுக்கீயும்
மாதவளாம் ஔவைக் கீவோம்
இவ்விதம் எண்ணி அரசவையிருந்தான்
இந்நேரம் ஔவையும் வந்தார்.

வசனம்

அதியமான் தனது அரசவைக்கு வந்த அருந்தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரை அகமகிழ்வுடன் எழுந்து சென்று வரவேற்றான். தனது அருகிலிட்ட தனி மணி பாசனத்தில் அமரச் செய்தான். கையில் வைத்திருந்த கருநெல்லிக்கனியைக் கன்னித்தமிழ் அன்னையாகிய ஔவையாரிடம் அளித்தான். “தாயே! இதனை உண்ணாக!” என்று அன்போடு கூறினான். ஏதோ ஓர் சாதாரண நெல்  லிக்கனி என்று நினைந்து வாயிலிட்டுச் சுவைத்த ஔவையார், அதனிடம் கண்ட அளவற்ற அமுதச் சுவையைக் கண்டு, உண்டு, களிகொண்டு, “ஆகா! அரசே! ஈதென்ன வியப்பாயிருக்கிறது! தேவர்கள் உண்டார்கள் என்று சொல்லப்படும் தெள்ளமுதத்தினும் நல்லமுதமாக அன்றே இந்த நெல்லிக்கனியுள்ளது! இது உனக்கு எப்படிக் கிடைத்தது? இதன் வரலாறென்ன?” என்று அதியமானே வினவினார்.

பாட்டு

தாயே! தமிழ்ச்செல்வி! தந்த இந்த நற்கனியும்
தூய தமிழ்ப்பொதிகைத் தொன்மலையில் கண்டுற்றேன்
தவமுனி இன்னருளால் சார்ந்திட்ட கனியிதனை
நவமுற உண்டவர்கள் நாட்கள் பல வாழ்ந்திடுவார்.
பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை பழுப்பதாகும்
இன்னமுத நற்கனியாம் இந்தநெல் லிக்கனியே
யானிதனை உண்டாலோ யாதுபயன் உண்டம்மா
தேனமுதத் தீங்கனியைத் தின்றுவாழ்ந் தென்னபயன்
போர்கள் பலபுரிந்து பல்லுயிர்கள் போக்கிடுவேன்
சீரமைந்த நீருண்டால் தெய்வத் தமிழோங்கும்
எண்ணரிய பன்னூல்கள் இப்புவியர் பெற்றிடுவர்
பண்ணார்ந்த இன்னறிவைப் பார்முழுதும் உற்றோங்கும்
இந்தநலம் சிந்தையெண்ணி இங்ங்னம்யான் செய்திட்டேன்
செந்தமிழ் வாழநீரும் சிறக்கவே வாழவேண்டும்
என்றினிது பேசியிட்ட இயலரசன் அதியமானின்
நன்றான பொற்குணத்தை நாவார வாழ்த்தியிட்டார்
தனிப்பெருமை சொல்லாது கருத்துள் அடக்கிகின்றாய்
தனியேன் உயிர்தழைக்க இனிதுண்ண வேண்டிநின்றாய்
சாக்காடு நீக்கமுறத் தந்துகனி உணச்செய்தாய்
தாக்கும் பகைவர்சளைத் தவிடுபொடி யாக்கிவிடும்

தாரணிந்த போர்மன்னா! தமிழ்வள்ளல் அதியமானே!
ஆறணிந்த பேரீசன் அருள்நீல மணிகண்டன்
போலவே மன்னிடுக ! பூமிதனில் புகழ்பெறுக!
காலமெலாம் இன்புற்றுக் காசினியில் வாழ்ந்திடுக!
என்றேத்தி யிருந்திட்டார் இனியதமிழ்ச் செல்வியவர்!
அன்றுமுதல் அவர்வ்நட்பு அரியசுவை நூலாச்சு
அதியமான் வீரமதும் அருள்வண்மைச் சீலமதும்
மதிவன்மை யால்பாடி மாநிலத்தை மகிழ்செய்தார்.

வசனம்

ஔவையார் அதியமான் அரண்மனையிலேயே தங்கி, அவனுக்குத் தமிழமுதத்தைப் பலகால் ஊட்டி அவன். அரசவையை அலங்கரித்து வந்தார். அவனது சபைப் புலவராக விளங்கியதோடல்லாமல் தக்க சமயங்களில் நல் வழி காட்டும் மதிமந்திரியாகவும் இம் மாதரசி விளங்கி வந்தார். ஔவையாரின் அரசியலறிவுப் பெருந்திறனைக் கண்ட அதியமான், தன்னே எளியவகை எண்ணித் தன்னோடு போர்கொடுத்தற்குச் சமயம் நோக்கியிருக்கும் காஞ்சித் தொண்டைமானிடத்துத் துாதுசென்று வருமாறு அன்புடன் வேண்டினான். அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூதுசெல்ல இசைந்தார்.

பிறநாட்டு மன்னர் பேரவைக்குத் தூதுவாய்ச் சென்று தொழிலாற்றப் பெண் ஒருத்தி பெருமையுடன் சென்றாள் என்ற சிறப்பை முதலில் பெற்ற நாடு, நம் பெருந்தமிழ்நாடே. ஒரு நாட்டு அரசியல் தூதுவர், பிற நாடுகளில் பணி செய்வதை இன்றும் நாம் காண்கின்றோம். என்றாலும் இன்று தூதுவர்களைப் பகைவர் நாட்டுக்கு அனுப்புவதில்லை. உறவுடைய நாடுகட்குமட்டுமே அனுப்புவார்கள். அந் நாடுகளோடு நட்புறவு நீங்கிப் பகைதோன்றி விட்டாலோ அங்கே அனுப்பப்பெற்ற தூதுவர் உடனே திருப்பி அழைக்கப்பட்டுவிடுவர். ஆகவே, பகை தோன்றாத வரை அது தோன்றாதிருக்குமாறு பார்த்துக்கொள்வதே இக்கால அரசியல் தூதர் ஆற்றும் பணி. உள்ள பகையைப் போக்க உழைப்பது அவர்கள் தொழிலன்று. ஆனால், பண்டைக்காலத்தில் தூதுவர் பகையரசர் அவைக்கு அனுப்பப்படுதலே மிகுதியாகும். உள்ள பகையை ஒழிக்க முயல்வதே அக்காலத் தூதுவர் ஆற்றவேண்டிய அரும் பணியாய் இருந்தது. ஆகவே, இக்காலத் தூதுவர் செய்யும் வேலையைக்காட்டிலும் அக்காலத் தூதுவர் செய்த வேலையே செய்தற்கரியது. அச்செயலை ஒரு பெண் செய்தாள் என்றால் எவ்வளவு வியத்தற்குரியது பார்த்தீர்களா! தொண்டைமானிடம் தாதுசெல்ல இசைந்த ஔவையார் காஞ்சிமாநகரம் நோக்கிப் புறப்பட்டார்.

பாட்டு

காஞ்சி மாநகர் ஆண்ட மன்னன்
கர்வமிகக் கொண்ட தொண்டை மானாம்
ஆய்ந்த படைபலம் ஆர்ந்த என்றன்
ஆற்றல் அறியாமல் சீற்ற முற்றான்
என்றன் திறமை பெருமை யெல்லாம்
இன்றே தொண்டைமான் அறிய வேண்டும்
நன்றுநீர் தூதுசென்றேத வேண்டும்
நாயவன் செருக்கை யடக்க வேண்டும்
இவ்விதம் அதியமான் வேண்டி நின்றான்
இன்றமிழ் ஔவை அதற்கிசைந்தார்
கவ்வைகொள் காஞ்சி நகர் அடைந்தார்
காவலன் தொண்டைமான் எதிர் கொண்டான்
மன்னன் விருந்தாய் மகிழ்ந்து இருந்தார்
வந்த செயற்கெதிர் பார்த்து இருந்தார்

அன்னவன் ஔவையை உடன் அழைத்தான்
ஆயுதச் சாலையைக் காணு மென்றான்
படைக்கலக் கொட்டிலைப் பார்த்து நின்றார்
பார்த்திபன் தொண்டைமான் பக்கம் வந்தான்
உடைப்பரும் தண்டம் ஒளிர் வேல்வாள்
ஒளியுடன் நெய்யணிக் திலங்கக் கண்டார்
மன்னன் செருக்கு மடியும் வண்ணம்
வன்மையாய்ப் பேசும் வாய்ப்பை யுற்றார்
மன்னா! பொன்னேளிர் வேலும் வாளும்
மயிற்பீலி அணிந்தொளி வீசு மையோ !
குந்தம் ஈட்டிவேல் தண்ட மெல்லாம்
கொள்ளுறை உள்ளே குலவு மையோ!
கொந்தணி மாலைகள் கொண்ட வையோ !
கொற்றவ! நன்றுநன்று இவைகள் எல்லாம்
பகுத்துண் வள்ளல் அதிய மானின்
படைக்கலம் எதுவும் மனையில் இல்லை
தொகுத்த அவன்படைக் கலங்கள் எல்லாம்
தொடுத்தபோர் தன்னால் சிதைந்த ஐயோ!
குத்திப் பகைவர்ச் சிதைத்த எல்லாம்
கொல்லன் உலைக்களம் கிடக்குமையா
எத்திக் கும்புகழ் இனிய வள்ளல்
ஏந்தல் அதியமான் வீரம் என்னே!

வசனம்

இவ்விதம் சாதுரியமாகப் பேசித் தொண்டைமானைப் புகழ்வதுபோல இகழ்ந்தார். இவ்விதம் இகழ்வதுபோல் புகழ்வதும், புகழ்வதுபோல் இகழ்வதுமாகிய செயலை வஞ்சப்புகழ்ச்சி என்று வழங்குவார்கள். நிந்தாஸ்துதி என்றும் சொல்லுவார்கள். வசைக்கவி பாடுவதில் வல்லா ராகிய காளமேகப்புலவர் இத்தகைய நிந்தாஸ்துகி பாடுவதில் இணையற்ற புலவர். ஆறுமுகப் பெருமானுடைய அருமையைக் கூறவந்த அந்தப் புலவர்,

பாட்டு

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு)
எண்ணும் பெருமை யிவை

வசனம்

என்று வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடினார். இது போன்ற வாக்குவன்மையால் அதியமான் ஆற்றலை இகழ்வதுபோலப் புகழ்ந்து, தொண்டைமான் செருக்கை அடக்கினார். அந்தக் காலத்தில் திருக்கோவலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன், அரசர் பலரை வென்று, செருக்குக் கொண்டிருந்தான். இதனை அறிந்தான் அதியமான்.

பாட்டு

திருக்கோவ லூரை யாண்ட
திருமுடிக் காரி யென்பான்
செருக்கினை யடக்க வேண்டிச்
சேருங்கள் படையை என்றான்
நால்வகைப் படைகளோடும்
நன்கவனைத் தாக்க லுற்றான்
மேலான அறிவுச் செல்வி
மேன்மைகொள் ஔவை கண்டார்
போரிலே எண்ணில் உயிர்கள்
போதலைக் கண்டு நைந்தார்

காரியினை நேரில் கண்டார்
கடும்போரை நிறுத்துக என்றார்
அதியமான் வாளின் வன்மை
அவனது வேலின் திண்மை
குதிரைகள் யானைச் சேனை
கொண்டதிறம் கூறி நின்றார்
ஔவையின் அமுதச் சொல்லை
மலேயமான் அறிந்தா னில்லை
கவ்வைகொள் போரை அன்றே
கடுமையாய்த் தொடங்கி விட்டான்
அதியமான் படைக்கு முன்னே
அஞ்சியே நெஞ்சு குலைந்தான்
பதியினை யிழந்து சிதைந்து
பற்றற்றே யோடி மறைந்தான்
மலையமான் திருமுடிக் காரி
மன்னவனின் கோவ லூரும்
அதியமான் வசமாயிற்றே
அயலவர் பகையா யிற்றே
அதியமான் அடைந்த வெற்றியை
ஔவையார் புகழ்ந்து பாடினார்
குதிகொள்ளும் படைகள் கொண்ட
கொற்றவனைப் பாடல் எளிதோ !
வாளினைத் தாங்கும் தோளாய் !
வள்ளலே உங்தன் வீரம்
கேளாரின் உள்ளம் நடுங்கும்
கேட்டார்தம் உடல் பூரிக்கும்
போர்வென்றி புகழ்ந்து பாடிய
புலவரைப் போற்றி மகிழ்ந்தான்
போர்தனில் ஊரை யிழந்த
புரவலன் காரி சினந்தான்

பெருஞ்சேர லிரும்பொறை என்பான்
பெருவீரன் சேரன் தன்னை
அருந்துணை வேண்டி கின்றான்
அவனதற் கிசைந்து கொண்டான்
சேரனும் காரிமன் னவனும்
சேர்ந்துவல் வில்லோரி தன்னைப்
போரினில் எதிர்த்திட லானர்
பொருப்பினைப் பற்றவே போனார்
ஒரியும் போர்த்துணை வேண்டி
உற்றனன் அதியமான் தன்னை
போரினில் விருப்புற்ற அன்னான்
போர்த்துணை மன்னரை அழைத்தார்
நண்பராம் சோழபாண் டியரை
நல்லதுணை யாகவே பெற்றார்
வன்பொடு போர்புரிந் திட்டார்
வல்வில் லோரியின் நட்டார்
நால்வரையும் வென்று விரட்டி
நற்கொல்லி மலையினைப் பற்றி
வேல்வீரர் சேரனும் காரி
வேந்தனும் வெற்றியைக் கண்டார்
தோற்றிட்ட அதியமான் அஞ்சி
தோய்ந்ததக டுர்மதில் சேர்ந்தான்
மாற்றலர்க் கஞ்சியக் கோட்டை
மதிலடைத் துள்ளே யிருந்தான்
வென்றிட்ட மலையமான் சேரன்
வேந்தர்கள் கோட்டையைச் சூழ்ந்தார்
துன்றிட்ட அதியமான் தோன்றல்
தோல்விநிச் சயமென்று கண்டான்
மதில்சூழ்ந்த பகைவரை மன்னன்
மலையாது வாளா விருந்தான்

அதுகண்ட ஔவை எழுந்தார்
அதியமான் நிலைகண் டுணர்ந்தார்
தளர்ந்திட்ட அஞ்சியின் நெஞ்சம்
தனிவீரம் கொள்ளவுரை சொல்வார்
கிளர்ந்தெழும் வீரமொழி சொல்வார்
கிளையான படைவீரம் விள்வார்
அவ்வையின் ஊக்கமொழி யாலே
அதியமான் போருக் கெழுந்தான்
நவ்விமேல் பாய்புலிப் போலே
நயந்தவன் போரைப் புரிந்தான்
பகைகொண்ட இருகட்சி யாரும்
பார்த்தவர் நடுங்க மலைந்தார்
வகைகொண்ட சேனைமிகு சேரன்
வன்மையுடன் வேலே விடுத்தான்
சேரனின் கூரிய வேலும்
தீயகடுங் கூற்றினைப் போல
சீரதிய மானவன் மார்பில்
சென்று டுருவியே செல்லும்
வலமிக்க தேரில் இருந்த
வள்ளலும் உயிரை யிழந்தான்
புலியன்ன மன்னவன் போரில்
பொன்னுடல் சாயவே மாய்ந்தான்
மன்னவன் மாய்ந்ததைக் கண்ட
மதிவல்ல அவ்வையார் கொண்ட
இன்னலுக் கோரெல்ல யில்லை
எதுசெய்வர் வந்தது தொல்லை
ஐயையோ அதியன் மறைந்தான்
அவனருள் வள்ளன்மை என்னே!
மெய்யாக மார்பைத் துளைத்த
வேல்பல இடங்கள் துளைக்கும்

பாணர்தம் பாத்திரம் துளைத்து
பைந்தமிழ்ப் புலவர்நாத் துளைத்து
பேணிடும் உறவோர்கண் துளைத்து
பெரும்பசி யாளர்கைத் துளைத்து
மறைந்ததே அவ்வேலும் ஐயா !
மாநிலம் பாடுநரும் இல்லை
நிறைந்தவர்க் கீகுநரும் இல்லை
நீணிலத் துயிர்கள்மிக வாடும்.

வசனம்

இங்ஙனம் அதியமான் போரில் இறந்தது கண்டு ஆறாத தூயமடைந்த ஔவையார், பலவாறு புலம்பிக் கலங்கி அவனது கொடைத்திறத்தைக் கொண்டாடிப் பாடினார். அதியமான் இறந்த பின்னர் அவன் மகன் பொகுட்டெழினி என்பான் முடிசூடினான்.

பாட்டு

அதியமான் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வனவன்
மதிமிக்க பொகுட்டெழினி மணிமுடி தரித்திட்டான்
ஆண்டினில் மிகவிளைஞன் அறிவில் மிகுவினைஞன்
மாண்டதன் தந்தையைப்போல் வள்ளன்மை உள்ளத்தான்
அன்னவற்கு அரசியலில் அருந்துணையாய் ஔவைநின்றார்
மன்னவனை வாயாரப் புகழ்ந்து பல பாப்புனைந்தார்
சில்லாண்டு கழிய அவர் செந்தமிழ் நாடுசுற்ற
நல்லார்வ மிகக்கொண்டு நயந்துவிடை தான்பெற்றார்
தன்னுடைய மலைநாட்டுத் தமிழ்வள்ளல் வள்ளுவனை
மன்னுபுகழ் நாஞ்சில்மலை மன்னவனை நண்ணியிட்டார்
வள்ளுவனே! சிறிதரிசி வழங்குக! நீ என்றிட்டார்
உள்ளமகிழ் வள்ளுவனோ ஓரானை உவந்தளித்தான்

நாஞ்சில்மலை வள்ளுவனை நாவாரப் பாடிநின்றார்
ஆய்ந்துபல நாள்நடந்து அரசர்களைக் காணலுற்றார்
கடையெழு வள்ளல்களில் கருத்தினிய வள்ளலவன்
படைமிகு மன்னனவன் பார்புகழ் அண்ணலவன்
பறம்புமலை யாளுமவன் பசித்தவர் குழுமவன்
அறம்பல செய்யுமவன் ஆருயிர்கட் கையனவன்
பாரியெனப் பாரவர்கள் பாராட்டும் பண்பனவன்
ஓரறிவு கொள்ளுயிர்க்கும் உவந்தருள் வள்ளலவன்
முல்லையிளங் கொடியினுக்கு முழுமணித் தேரளித்தான்
தொல்லையவன் புகழதனைச் சொல்லாத நூல்களில்லே
இத்தகைய வள்ளல்தனை இயலவ்வை அடைந்திட்டார்
வித்தகங்ற் செல்வியினை விழைந்துவர வேற்றிட்டான்
பரிசுகள் பலவழங்கி அரியதமிழ் கேட்டிட்டான்
அரியவரைப் பிரிவதற்குப் பெரிதுமே வருந்தியிட்டான்.
பலகாலும் வந்தவ்வை பைந்தமிழை யூட்டிகின்றார்
அலகில்லா அன்புடனே ஒருசமயம் அடைந்திட்டார்
வந்தவர்க்குச் சிந்தைமகிழ்ந் தரும்பரிசு வழங்கிட்டான்
புந்திமகிழ்ந் தவ்வையாரும் புறப்பட்டார் வழிநடந்து
காட்டுவழிச் செலும்போது கள்ளர்பலர் மறித்திட்டார்
கூட்டாக அவர்பொருளைக் குலைந்திடக் கவர்ந்திட்டார்
பரிசுகளை இழந்திட்ட பசுந்தமிழ்ச் செல்வியவர்
பெரிதுமனம் வாடிமிகப் பெட்புறுபாரியைக் கண்டார்
பேரறமே உருவான பாரிவள்ளால் நின்னுட்டில்
சாரும்வழி தான்மறித்துத் தந்தபொருள் பறித்திட்டார்
உன்னுடைய திருநாட்டும் உள்ளாரோ கள்ளர்பலர்
என்னவியப்பு! ஐயையோ! ஈதோ உன் னைட்சிமுறை!
இந்தவிதம் முறையிட்ட செந்தமிழர் தம்தவத்தை
வந்தித்து வாழ்த்தியவர் சிந்தையது குளிர்வித்தான்
கலைவாணித் திருவுருவே! கற்றவர்கள் நற்றவமே!

நிலையான நும்கவிதை நீடுபுகழ் நாடிதனில்
கள்ளர்கள் யாருமில்லை யானே அக் கள்வனவன்
தள்ளரிய நும்பிரிவு தாங்கரிய பெருந்துன்பம்
தந்ததனைல் நந்தம்மைத் தடுத்துமறித் திடச்செய்தேன்
இந்தவித மன்றியுமை இங்குமீண் டழைப்பரிதே
என்றெண்ணிச் செய்திட்டேன் நன்றுபொறுத் திட்டருளும்
கன்றுமணம் ஆறியெனைக் கனிந்தினிது வாழ்த்து மென்றான்
பாரியவன் பேரன்பைச் சீருறவே தாமறிந்தார்
நேரில்லா அவனருளை நினைந்துநினைங் தின்புற்றார்.

வசனம்

ஔவையாரிடம் பேரன்பு கொண்ட பாரியைப் போலப் பற்பலர் அந்தக் காலத்தில் செந்தமிழ் நாட்டிலே இருந்தார்கள். பழையனூர் என்னும் ஊரிலே வாழ்ந்த உத்தம வேளாளன் ஒருவன் சிறந்த அருள் வள்ளல். நிறைந்த தமிழறிஞன். காரியென்னும் பேருடையான். நேரில்லாச் சீருடையான். அன்னவனும் நம் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தான். ஔவையார் ஒரு சமயம் அவனிடம் சென்றார். சிலநாள் அவனது மனையில் விருத்தாளியாக இருந்து மகிழ்ந்தார். ஓய்ந்த நேரமெல்லாம் ஆய்ந்த தமிழ்க் கவியால் அவனை மகிழ்வித்தார்.


பாட்டு

பழையனூர் வேளாளன் உழையவர்க் கருளாளன்
தழைமனத் தாளாளன் விழைந்திடும் பொருளாளன்
காரி என் பானுடைய சீர்விருந் தாயமர்ந்தார்
சார்ந்தசின் னைட்பின்னர் விடைபெறச் சார்ந்திட்டார்
அன்னவன் தன்னிலத்தில் அருங்களை பிடுங்கிநின்றான்
துன்னிட்ட அவ்வையரைத் தவிர்க்கவே எண்ணிட்டான்
கையிருந்த களைக்கட்டை அவ்வையின் கைக்கொடுத்தான்

வெய்யகளை நீக்கிடுவீர் வேண்டினன் என்றுரைத்தான்
காரியின் பார்வையினல் கருத்துணர்ந்த அவ்வையரும்
நேராக அதுவாங்கி நீள்களைகள் போக்கலுற்றார்
இன்றுநாம் இங்குவிட்டுச் செல்லுதற் கியலாது
என்றவ்வை உணர்வரைக்கும் சென்றவன் மீளவில்லை
அன்னவன் சூழ்ச்சிதனை அவ்வையார் தாமுணர்ந்தார்
இன்னருள் காரியவன் பொன்னைன அன்புணர்ந்தார்
உள்ளத்தில் பொங்குகவி வெள்ளத்தால் போற்றியிட்டார்
வள்ளலின் உள்ளமதை வாயார வாழ்த்தியிட்டார்.

வசனம்

அந்தக் காலத்தில் சேரமான் மாவெண்கோ என்னும் மன்னனன் ஒருவன் பெருவிருந்தொன்று நடத்தினான். அந்த விருத்துக்கு ஔவையாருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான். அச் சேரமானும் ஔவையாரிடத்து அளவற்ற போன்பு கொண்டவன். அவனது அழைப்பைக் கண்ட ஔவையார் காரியிடம் விடைபெற்று, நேராகச் சேரமான் செல்வ மாளிகையைச் சென்றடைந்தார். அவனேக் கண்டார். அப்போது விருந்துநேரம் நெருங்கி விட்டது. நாட்டிலுள்ள பல்வேறு மன்னர்களும் கல்வி வல்ல புலவர்களும் செல்வப் பெருமக்களும் விருந்துக்கு அவன் மாளிகையில் வந்து நிறைந்துவிட்டார்கள். எல்லோரையும் விருந்து மன்றத்தில் வந்து அமருமாறு அன்போடு வேண்டினான். ஔவையாரும் அங்குச் சென்று ஒர் இலை யின் முன்பு அமர்ந்தார்.

பாட்டு

அறுசுவை உணவுள்ள விருந்து
ஆர்ந்தவர்க் கமுதாம் விருந்து
உறுசுவைப் பண்டங்கொள் விருந்து
உற்றவர்க் கரிதாம் விருந்து

எண்ணற்ற கனிநிறை விருந்து
எண்ணவே தித்திக்கும் விருந்து
பண்ணுற்ற தீஞ்சுவை விருந்து
பண்பான அன்புமன விருந்து
விருந்தினை அருந்திட நிறைந்தார்
வேல்வேந்தர் எண்ணற்ற பேர்கள்
பொருந்தினர் புலவர்கள் பல்லோர்
டொற்புடைய வள்ளல்கள் நல்லோர்
அடைந்தனர் செல்வர்கள் பல்லோர்
அமர்ந்தனர் விருந்தறை யதிலே
மிடைந்திட்ட இலைமுன் னிருந்தார்
மேலாக ஒரன்பர் நின்றார்
இலைபோட இடமங்கே யில்லை
இருந்திட அவர்க்கிடமு மில்லை
நிலைகண்ட சேரமான் எங்கும்
நீள்விழிப் பார்வையது செய்தான்
நின்றிட்ட புதியவரை அங்கே
இருத்திட நினைந்துவழி கண்டான்
நன்றுள்ள ஔவையரு குற்றான்
நற்கரம் பற்றியெழுப் பிட்டான்
"ஔவைவா ராய்" என்று அழைத்தான்
அப்புறம் உண்போமென்று உரைத்தான்
செவ்வையாய் நின்றவரை ஆங்கே
சேர்த்திலை முன்னமரச் செய்தான்
உரிமையால் பேரன்பு செய்த
உத்தமன் சேரமான் உள்ளம்
பெருமையது பெருமையது என்றே
பேரன்பு கொண்டுபோற் றிடுவார்

வசனம்

பின்னர்ச் ஔவையாரைத் தனது அருகில் அமரச்செய்து அருஞ்சுவை யுணவூட்டித் தானும் உண்டு மகிழ்ச்சி கொண்டான். தான் உள்ளன்பால் உரிமையோடு செய்த செயலை உணர்ந்து போற்றிய உயர்தமிழ் மூதாட்டியை உவந்து பாராட்டினான். அவனது அரண்மனையில் பன்னைளிருந்து, பின்னர் விடைபெற்று வழிநடந்தார். திருக்கோவலூரை நோக்கி வந்துகொண்டிருக்கும் வழி நடுவே பெருமழை பெய்யத் தொடங்கியது. மழைக்கு ஒதுங்கிநிற்க இடையே இடம் ஏதும் இல்லாமையால் விரைந்து திருக்கோவலூரை அடைந்தார். இரவுவேளை, மழையோ விட்டபாடில்லை. உடுத்திய ஆடை மிகவும் நனைந்துவிட்டது. உடலோ குளிரால் நடுங்கியது. ஊருள் நுழைந்ததும் எதிரே காணப்பெற்ற குடிசையுள்ளே ஔவையார் நுழைந்தார்.

பாட்டு

அகத்தில் நுழைந்த ஔவையின் வரவை
அங்கவை சங்கவை மங்கையர் கண்டார்
தாயே வருகெனத் தழுவியே நின்றார்
தையலர் யாரெனப் பையவே கண்டார்
யாரிவர்? நீங்கள் பாரியின் மக்காள் !
சீருற வாழ்ந்தீர்! சிறுகுடில் வந்தீர் !
பாரியோ மறைந்தான் பார்ப்பவர் இல்லையோ ?
பார்த்திபர் சினத்தீப் பற்றி அழித்ததோ ?
கலங்கிப் புலம்பும் கற்றமூ தாட்டி
நடுங்கும் உடலம் நங்கையர் கண்டார்
நீலச்சிற் றுடை யொன்று நீட்டினார்
நீவிர்இவ் வாடை உடுத்திடும் என்றார்

நனைந்த ஆடையை களைந்திடும் என்றார்
இனைந்த ஔவையின் இரும்பசி களைந்தார்
மனையில் இருந்தகூழ் மகிழ அளித்தார்
நனிசுவைக் கீரைக் கறியும் நல்கினார்
கூழும் கீரையும் சுடச்சுடக் கொடுத்தார்
கொண்டுள் குளிர உண்டமூ தாட்டி
பேரருள் வள்ளல் பாரியின் அழிவும்
பெருந்தவ மக்கள் இருகண் மணிகள்
பார்ப்பனர் இல்லில் பரிந்து வாழ்வதும்
பார்த்து நெஞ்சம் பதைத்துத் துடித்தார்
குளிரும் பசியும் அகலக் கொடுத்த
கூழும் ஆடையும் கொண்டு புகழ்ந்தார்

வசனம்

பாரியின் மக்களாகிய அங்கவையும் சங்கவையும் அங்கம் குளிர்நீங்கத் தந்துதவிய நீலச்சிற்றாடையினை நினைந்தார். அன்று பாரிவள்ளல் தன்மீது கொண்ட தணியாத பேரன்பால் பிரிவதற்குப் பெரிதும் வருந்தித் திரும்ப அழைக்க விரும்பிக், கொடுத்த பரிசுகளைக் கொள்ளையடித்துப் பிடுங்கி வருமாறு வீரர்களை அனுப்பினான். பழையனூர் வேளாளச் செல்வனாகிய காரியோ என்னைப் பிரிய வருந்தி, விடைபெறச் சென்றபோது, தடையாகக் கையிலிருந்து களைக்கட்டைத் தந்து களை பிடுங்கச் செய்தான். சேரமான், என்பால் கொண்ட அன்பால் உரிமைகொண்டு, விருந்து மன்றத்தில் இலைமுன்னிருந்த என்னை வாராய்! என்று அழைத்து எழச் செய்தான். இந்த மூவர் காட்டிய பேரன்பும் சரி, இப்போது பாரி மகளிராகிய இம் மங்கையர் எனது குளிர் போக்கச் சிற்றாடை வழங்கிய பேரன்பும் சரி; அந்த மூவர் அன்பினும் இவ்விரு பெண்கள் காட்டிய அன்பு மேலானது என்று பாராட்டிப் பாடினர். அப்போது அவர் பாடிய பாட்டுத்தான் இது !

பாட்டு

பாரி பறித்த கலனும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கட்டும்-சேரமான்
வாராய் எனஅழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்.

வசனம்

மாரியைப்போல் கைம்மாறு கருதாது வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கிய பாரிவள்ளலின் மக்கள் மனமுவந்து கொடுத்த கூழைக் கீரைக்கறியுடன் உண்டு மகிழ்ந்த ஔவையார், அக் கீரையுணவின் அருமையை வியந்து பாடினார். உயர்ந்த அறுசுவை உணவை யூட்டிய கையால் ஔவையார்க்குக் கூழும் கீரையும் படைக்கிறோமே என்று பதைபதைத்தார். அந்தப் பாவையர். அவருடைய உள்ள நிலையை உணர்ந்த ஔவையார், அந்தக் கீரையுணவின் அளவுமீறிய சுவையைக் கண்டு, தொட்டாலும் கைம்மணக்கும் கீரையல்லவா இது! தின்றாலும் வாய் மணக்கும் கீரையல்லவா இது! தின்னத் தின்னத் தெவிட்டாத தெள்ளமுதக் கீரையல்லவா இது! இத்தகைய அருஞ் சுவைக்கறி சமைத்த கைகட்கு வைரமணிக் கடகமன்றே பூட்டவேண்டும்! என்று போற்றினார்.

பாட்டு

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப்-பொய்யே
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு.

வசனம்

இங்ங்னம் பாரிமகளிரைப் பாராட்டியிருக்கும் வேளையில் மழை நின்றது. வானம் விளங்கியது. வெண்மையான பூரணசந்திரன் பால்போல் தண்கதிர் வீசி ஒளி செய்தது. வானத்தில் முழுநிலவைக்கண்ட வனிதையர் இருவர்க்கும் முன்னைய நினைவுகள் உள்ளத்தில் முளைக்கலாயின. முன்வந்த முழுத்திங்கள் நாளையில் தங்களுடைய பறம்புநாட்டில் பெற்ற தந்தையுடன் உற்றார் உறவினருடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்த வாழ்க்கைநிலையை எண்ணியபோது அவர்கள் மனம் புண்ணாய் உலைந்தது; ஆறாத துயரவெள்ளத்தில் ஆழ்ந்தது. உடனே அம் மங்கையர் இருவரும் புலம்பிக் கண்ணிர் சொரிந்தவண்ணம்,

பாட்டு

“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எங்தையும் இலமே.”

வசனம்

என்று கதறிக் கலங்கினர். அங்ஙனம் கலங்கிய கன்னியர் இருவரையும் ஔவையார் கட்டித்தழுவிக் கண்ணிரைத் துடைத்தார். அவர்களது நிலைக்குப் பெரிதும் இரங்கினர். அவர்கள் அங்குப் பார்ப்பனர் இல்லத்தில், பாரியின் ஆருயிர்த்தோழராகிய கவிஞர் கபிலரால் பாதுகாக்கப் பட்டதையும் தெரிந்தார். அம் மங்கையர்க்குத் தக்க மணுளரைத் தேடி, மணம்முடிக்க மனத்தில் உறுதிகொண்டார். அப்போது திருக்கோவலூரை யாண்டிருந்த மலையமான் தெய்வீகன் என்னும் மன்னனைச் சென்று கண்டார்.

பாட்டு

திருக்கோவ லூரை யாளும்
தெய்வீக ! சொல்லக் கேளாய்
உருக்கோல மிக்க மாதர்
உத்தமக் கற்பின் மாதர்
பேரருள் வள்ளல் பாரி
பெற்றாற் றவத்து மாதர்
பாரியோ மறைந்துவிட்டான்
பாவையர் கலங்கி நின்றார்
அங்கவை சங்கவை என்பார்
அன்புள்ள இன்ப நல்லார்
மங்கையரை மணந்து கொள்வாய்
மற்றவரை ஏற்றுக் காப்பாய்
தெய்வீகன் ஏது சொல்வான்
தேர்தமிழ்த் தாயே! கேளீர்
பெய்மாரி யன்ன பாரி
பேரரசர் மூவர் பகையே
இன்னவரை ஏற்பே னாயின்
இன்னல்கள் மூவர் செய்வர்
மன்னுபுகழ்ச் சேரன் சோழன்
மதிவழியன் துன்பம் சேரும்
அஞ்சுவேன் என்று மறுத்த
அன்பனுக் கவ்வை சொல்வார்
அஞ்சற்க மன்னர் மூவர்
அவரையான் அழைப்ப னென்றார்
மூவர்க்கும் ஒலை வரைந்தார்
முன்னவர்க் கனுப்பி விட்டார்
யாவரும் வருக என்றார்
அரியதிரு மணம் முடிப்பார்


சேரனுக்கு எழுதியது

சேரலர்கோன் சேரன் செழும்பூங் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக ! உட்காதே—பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவையை யுங்கூடத் தான்.

சோழனுக்கு எழுதியது

புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து—நகாதே
கடுக வருக ! கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள்.

பாண்டியனுக்கு எழுதியது

வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே—தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியஈர் ஒன்பான்நாள்
ஈண்டு வருக ! இயைந்து.

வசனம்

ஔவையாரின் ஒலையை அரசர் மூவரும் கண்டார்கள். அத் தெய்வத்தமிழ் மூதாட்டியின் அழைப்பை மறுப்பின் வெறுப்புடன் ஏதும் வசைக்கவி பாடிவிடலாகாதே என்று அஞ்சிப் பாரிமகளிரின் திருமணத்தை முடித்துவைக்கத் திருக்கோவலூரை வந்தடைந்தனர்.

பாட்டு

வரிசைகள் பலகொண்டு வந்து நின்றார்
வள்ளலின் மக்கள்மணம் காண வந்தார்
அரியபொற் கலன்கள் பல கொண்டு வந்தார்
ஆய்ந்தபட் டாடைகள் தாம்கொணர்ந்தார்.
சேரனும் சோழனும் பாண்டி மன்னும்
சேரவே சீர்களுடன் வந்த டைந்தார்

பேரரசர் மூவரும் ஆங்கி ருக்க
பெற்றியுடன் வாராதார் யாரி ருப்பார் !
சிற்றரசர் எல்லாரும் சேர வந்தார்
செந்தமிழ்த் திருமணம் காண வந்தார்
பற்றுள்ள புலவர்பலர் பாடி வந்தார்
பாரியைப் பாடாத புலவ ருண்டோ !
கவிமன்னர் புவிமன்னர் கடிது வந்தார்
காதல்மிகு நன்மணம் நடக்க என்றார்
கவியரசி ஔவைகண் காட்டி நின்றார்
கற்றகலை வாணரிசை யார்த்து நின்றார்
இன்னிசைப் பல்லியம் முழங்கு மெங்கும்
இன்பமண மாலைகள் தொங்கும் எங்கும்
கன்னலும் வாழையும் கமுகு மெங்கும்
கட்டெழில் பங்தலதில் நிறையு மெங்கும்
பாண்டியl மணவினை நடத்து கென்றார்
பைந்தமிழ்ச் செல்விபணி செய்ய லுற்றான்
ஈண்டுமங் கலமொழிகள் தான்மொ ழிந்தான்
இன்பமிகு தமிழ்மறை ஓதி நின்றான்
தெய்வீகன் மணவறை ஏறி யுற்றான்
தேவியர் இருவோரும் அருக மர்ந்தார்
செய்தமிழ்ப் பாமாலை பலர் புனைந்தார்
சேர்ந்தவர் பல்லாண்டு வாழ்க என்றார்
மணமக்கள் மணமாலை மாற்று கென்றான்
மன்னவர் மலர்மாரி சொரிய லுற்றார்
இனமக்கள் எல்லோரும் வாழ்த்தி நின்றார்
இன்பமணம் இனிதாக நடந்தே றிற்று !
மூவரும் விருந்துண்டு செல்க என்றார்
முதலில் பனம்பழம் படைக்க என்றார்
நாவரசி ஔவையார் நல்கும் என்றார்
நற்றெய்வ வன்மையைக் காட்ட லுற்றார்.

வசனம்

திருமண விருந்து அருந்திச் செல்லுமாறு வேண்டிய ஔவையாரை நோக்கி, சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும், “எங்கட்கு உணவுடன் பனம்பழமும் படைத்தல் வேண்டும்,” என்றனர். அக்காலம் பழம் பழுக்கும் பருவ காலமில்லை. ஆயினும் ஔவையார் அணுவளவும் திகைக்காமல், “அவ்விதமே படைக்கிறேன்” என்று சொன்னார். அவ்விடத்தில் பனைமரத்துண்டு ஒன்று கிடக்கக் கண்டார். அதனை எடுத்து நிலத்தில் நட்டார். பாடினார் ஒரு திருப்பாட்டு.

பாட்டு

“திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துகின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.”

வசனம்

என்று பாடினார். ஔவையார் நிறைமொழி மாந்தர் ஆதலின், அப் பனந்துண்டம் வெண்குருத்துவிட்டு, ஓலை வளர்ந்து, காய் காய்த்துப், பழம் பழுத்து, மூன்று பழங்களைச் சொரிந்து நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த அரசர்களும் புலவர்களும் ஔவையாரின் அரிய செயலைக் கண்டு வியந்து நின்றார்கள். தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் அவர் செயல் அச்சத்தையும் அதிசயத்தையும் ஒருங்கு விளைத்தன. எல்லோருக்கும் ஔவையார் அருமையான விருந்தளித்தார். அவ்விருத்திற்குத் திருக்கோவலூரை அடுத்துச் செல்லும் பெண்ணையாறு பாலாகவும் நெய்யாகவும் பெருகி வருமாறு,

பாட்டு

“முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து
தத்திவரு நெய்பால் தலைப்பெய்து—குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவிற் கொண்டோடி வா.”

வசனம்

என்று பாடியருளினார். அவ்வாறே ஔவையாரின் விருப்பப்படி, அவ் ஆறு பெருகி வந்த மக்களுக்கு ஆராத இன்பத்தை அளித்தது. பின்னர் ஔவையார் அத் திருமணத்திற்கு வந்திருந்த வறியவர் அனைவர்க்கும் பொன்னும் பொருளும் வழங்க எண்ணினார். உடனே வருணனை நோக்கி,

பாட்டு

“கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனை மாமலையன் கோவல்—பெருமணத்தில்
நன்மாரி தான்கொண்ட நன்னீர் அதுதவிர்த்துப்
பொன்மாரி யாகப் பொழி.”

வசனம்

என்று பாடியருளினார். அவ்வளவுதான். திருக்கோவலூர் முழுதும் பொற்காசு மழை பெய்தது. மணத் திற்கு வந்திருந்த ஏழை எளியவரெல்லாம் தாம் வேண்டு மட்டும் பொன்னை வாரிக்கொண்டு, “வறுமை நீக்கிய வனிதையர் வாழ்க! வாழ்க!” என்று வாயார வாழ்த்திய, வண்ணம் தத்தம் ஊரை அடைந்தனர். பின்னர் ஔவையார் தம்முடைய வேண்டுகோட்கு இணங்கிப் பாரிமகளிரை மணம்புரிந்து மகிழ்ந்தேற்ற மன்னன் தெய்வீகனையும், அவனது திருநகரத்தையும் வாயார மனமார வாழ்த்தியருளினார்.

பாட்டு

"பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி ஆடையாம்
அந்நாள் வயலரிசி ஆகுமூர்—எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஒங்கு திருக்கோவ லூர்.”

வசனம்

என்பது ஔவையார் அன்போடு வாழ்த்திய அமுத வாழ்த்து. ஔவையாரின் அரிய வாழ்த்தைப்பெற்ற அரசனாகிய தெய்வீகன், தான் மணம் முடித்த தமிழ்ச்செல்வியராகிய பாரிமகளிருடன் பல்லாண்டு நல்லாண்டு இனிது வாழ்ந்தான்.

தெய்வப் பேராற்றல் படைத்த தீந்தமிழ் மூதாட்டியாகிய ஔவையார் அவ்வப்போது தாம் செல்லும் இடமெல்லாம் மன்னவர்க்கும் மற்றவர்க்கும் மாபெரும் அறிவுரைகள் சொல்லியுள்ளார். அவையெல்லாம் அறிவுச் சுடர்மணிகள் ஒளி வீசும் ஞானச் சுரங்கம் ஆகும்.

பாட்டு

ஔவை அற வுரையென்று கேட்பீர்
அவ்வழியில் செல்லவே பார்ப்பீர்
செவ்வைநெறி யதுகன்று கேட்பீர்
செய்யநலம் கண்டினிதே யார்ப்பீர்
காடுமலை சூழ்ந்தபாழ் நாடோ
காட்டாறு பாயுமொரு நாடோ
தேடரிய கூடுவள நாடோ
தீயமுட் செடிநிறைந்த காடோ
பள்ளத்தில் உள்ளதொரு நாடோ
பருமேட்டில் திகழுமொரு நாடோ

தள்ளரிய நல்லார்கள் வாழும்
தகைமிக்க நாடேபொன் னாடு
நன்மக்கள் வாழாத நாடு
நல்வளம் சூழ்ந்தநா டேனும்
என்னபயன் இன்பநா டாமோ
இன்மக்கள் வாழ்நாடே நாடு
இந்தவுரை செந்தமிழில் தந்தார்
இனியகவி யமுதத்தை யீந்தார்
நந்தமிழ் ஔவையினைப் பெற்ற
நன்னாடிங் நாடுபொன் னாடே !

வசனம்

நிலம் எத்தகையதாக இருந்தாலும் அதில் வாழும் மக்களின் மனநிலையைப் பொறுத்தே பெருமையும் சிறுமையும் அமையும். இந்தக் கருத்தமைந்த ஔவையின் அமுதவாக்கை நோக்குங்கள் !

பாட்டு

"நாடா கொன்றே ; காடா கொன்றே ;
அவலா கொன்றே : மிசையா கொன்றே :
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்ல வாழிய! நிலனே.”

வசனம்

இங்கனம் எண்ணற்ற அறவுரைகள் மண்ணுலகிற்குத் தந்தருளிய தமிழ் மூதாட்டியைப் போற்றாத புலவரில்லை! புகழாத மன்னரில்லை.

பாட்டு

ஔவைக் கிழவி நம்கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி

நெல்லிக் கனியைத் தின்றுலகில்
நீடு வாழ்ந்த தமிழ்க்கிழவி
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
வியந்து போற்றும் ஒருகிழவி
கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவள்மொழியை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே !

வசனம்

என்று பிற்காலப் புலவரும் பெரிதும் புகழ்ந்து பாடினார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னாலே இத்தமிழகத்தில் வாழ்ந்த ஔவையாரின் அருஞ்செயலையும் பெருந்திறனையும் அருள் மொழியையும் ஒருவாறு தெரிந்தோம்.

பாட்டு

கலைவாணி உருவான தலைவிவா ழியவே!
நிலையான தமிழ்செய்த தலைவிவா ழியவே!
மலைசூழும் உயர்நாட்டு மாதர்வா ழியவே!
அலையாத அறமருள் ஔவைவா ழியவே!

இசைவேறு

வாழியவே ! பல்லாண்டு வந்துகதை கேட்டவர்கள்
வாழியவே ! ஔவைகதை மனமகிழக் கேட்டவர்கள்
வாழியவே ! அவர்மொழியை வாயாரச் சொன்னவர்கள்
வாழியவே! அவர்வழியை வையமதிற் கொண்டவர்கள்.

கழக வெளியீடு:-






பதிப்பாளர் :

திருநெல்வேலித் தென்னிந்திய

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,

1/140, பிராட்வே, - சென்னை - 1.

தலைமை நிலையம் :

98, கீழைத் தேர்த்தெரு, திருநெல்வேலி.



விலை அணா 8. அப்பர் அச்சகம், சென்னை- 1,

"https://ta.wikisource.org/w/index.php?title=ஔவையார்_கதை/கதை&oldid=1750088" இலிருந்து மீள்விக்கப்பட்டது