உள்ளடக்கத்துக்குச் செல்

புகழேந்தி நளன் கதை/அறிமுகம்

விக்கிமூலம் இலிருந்து
புகழேந்தி நளன் கதை
அறிமுகம்

நளன் கதையை யார் கூறியது? ஏன் கூறப்பட்டது? ஒரு கதையாகிறது. பாரதம் அந்தக் கதையே தருமன் சூதாட்டத்தை மையமாகக் கொண்டு அமைந்த ஒன்று.

தருமன் நேர்மை தவறாதவன்; தவறு செய்யாதவன்; அத்தகையவன் சூது ஆடினான்; அதனால் விளைந்த விளைவு நாட்டை இழந்தான்; காட்டை அடைந்தான்; இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இதுதான் பாரதக் கதை.

காட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்; விராட நகரில் ஒர் ஆண்டு மறைந்து உறைந்தான்; பின்பு வெளிப்பட்டான்.

பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலும், ஒர் ஆண்டு மறைந்தும் வாழ்ந்து பின் நாடு கேட்டனர்; தருகிறோம் என்று கூறிய துரியன் வார்த்தை தவறிவிட்டான்.

அடுத்து என்ன செய்வது என்று செவிமடுத்துப் பலர் உரையையும் தருமன் கேட்டான். போர் தொடுப்பதே நேர்வழி என்று தம்பியர் உரைத்தனர். கண்ணன் உடனிருந்து அவர்கள் கருத்துரைகளைக் கேட்டான்; பாஞ்சாலியும் தான் விரித்த கூந்தலை முடிக்க வேண்டும் என்று துடி துடித்தாள்; போர் செய்வதே தக்க வழி என்று எடுத்து உரைத்தாள். வீமன் வீரம் பேசினான்; அர்ச்சுனன் காண்டீபம் எடுத்தான்; தருமன் அவர்களை அமைதிப் படுத்தினான். எதற்கும் கண்ணனைத் தூது அனுப்பி வைப்பது என்று முடிவு எடுத்தனர்; கண்ணனைத் தூது அனுப்பி வைத்தனர். நாடும் தரமுடியாது; இருக்க வீடும் கிடையாது என்று துரியன் வீர முழக்கம் செய்தான். போருக்கு அவன் துணிந்து நின்றான்.

அடுத்துப் போர் செய்வதுதான் வழி என்று அதற்கு வேண்டிய படைகளைத் திரட்டுவதில் பாண்டவர் முனைந்தனர்; அவர்களுக்கு வேண்டிய அரசர்கள் அவர்களுக்குத் துணையாகச் செயல்பட அங்கு வந்து கூடினர். முனிவர்கள் பலரும் அவர்களுக்குத் தக்க அறிவுரைகள் தர அங்கு வந்து சேர்ந்தனர்.

வேதம் வகுத்த வியாசனும் அவர்கள் ஏதம் அறிந்து ஆறுதல் கூற அடவியை அடைந்தான். அவன் வருகை கண்டு தன் இருக்கை விட்டு எழுந்து தருமன் வரவேற்றான்.

அவன் வருகையால் தன் பிறவிப் பெருந்துயர் எல்லாம் தீர்ந்தது என்று போற்றிப் புகழ்ந்தான். வியாசன் தருமன் மனத் தளர்ச்சியைக் கண்டு அவன் கவலையோடு இருப்பதை அறிந்தான். தோல்வி கண்டு மனம் தளராதவன் தருமன். உயர்விலும், தாழ்விலும் சமநிலை காட்டும் மனநிலை உடையவன். அத்தகையவன் சித்தம் கலங்கியது ஏன் என்று கேட்டான்.

தருமன் தன்நிலையை எடுத்து உரைத்தான். “போருக்கு உரிய செயற்பாடுகள் அனைத்தும் செம்மையாக நடைபெறுகின்றன; அர்ச்சுனனும் கயிலை சென்று பரமசிவன்பால் அத்திரம் பெறச் சென்றுள்ளான். விரைவில் வருவான்” என்று தெரிவித்தான். “எங்களுக்கு ஆற்றல் உள்ளது; மேலும் திரு எங்களை வந்து சேரும்; அதற்காகக் கவலைப்படவில்லை” என்று கூறினான்.

“கவலையுற்ற நிலைக்குக் காரணம் யாது?” என்று வியாசன் கேட்டான்.

“யான் செய்த தவறு என்னை வாட்டுகிறது; மனம் உளைகிறது. யான் சூது ஆடியதால்தானே இந்தத் தீதுகள் வந்து சேர்ந்தன; அரசர்களில் என்னைப் போல் யாராவது இப்படிச் சூது ஆடிக் கேடுகளை விளைவித்துக் கொண்டவர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்டான்.

அவனுக்கு ஆறுதல் கூற வியாசன் “மன்னர்கள் இருக்கிறார்கள்; சூதாடுவது கேடு தருவதுதான்; என்றாலும் அதனை மேற்கொண்டு அழிந்தவர்கள் உனக்கு முன்பும் இருந்திருக்கிறார்கள். நீ செய்தது புதிது அன்று; வருந்தாதே” என்று கூறினான்.

மேலும் அவனுக்கு ஆறுதல் கூற நளன் கதையைக் கூறத் தொடங்கினான். கலியால் விளைந்த கதை இது; நளன் என்பவன் உன்னைப் போல் நாடு இழந்தான்; இந்தக் கேடுகள் நிகழ்வதற்குக் கலியன்தான் காரணம். விதி வலிமையுடையது; அதனால் ஏற்பட்ட பாதிப்பு இது” என்று கூறினான்.

தருமன் நளன் கதையைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான். ‘பாரதம்’ நிகழ்வதற்கு முன் தோன்றிய கதை என்பது இவர்கள் பேச்சுரையால் வெளிப்பட்டது.

தன் வாழ்வைப் போலவே நளன் கதை அமைந்திருப் பது கண்டு மன ஆறுதல் பெற்றான். நளன் தமயந்தியை வைத்துச் சூதாடவில்லை; தருமன் அவ் வகையில் நெறி பிறழ்ந்து விட்டான் என்றுதான் கூற முடியும்.

மனைவி தன் உடைமை என்ற தவறான கருத்தே தருமனைத் தவறு செய்யத் தூண்டியது. நளன் தன் காதலியை மதித்தான்; அவள் தனக்கு உரியவள்; உடைமை யள் அல்லள்; இந்த வேறுபாட்டை அறிந்து செயல்பட்டான்.

இனி நளன் கதையை வியாசன் கூறத் தொடங்கினான்.