அறிவியல் வினா விடை-இயற்பியல்/மின்னணுவியல்

விக்கிமூலம் இலிருந்து

14. மின்னணுவியல்

1. மின்னணுவியல் என்றால் என்ன?

1. மின் சுற்றுகள் பெருக்கத்தை ஆராயும் பயன்முறை அறிவியல், 2. மின்னணுக் கருவிகள்.

2. நுண் மின்னணுவியல் என்றால் என்ன?

சிலிகான் நறுவல்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் பற்றி ஆராயுந்துறை. தகவல் தொடர்பியலில் ஒரு பெரும் புரட்சியை உருவாக்கி வருவது.

3. நுகர்வோர் மின்னணுக் கருவிகள் என்றால் என்ன?

வானொலி, தொலைக் காட்சி, வீடியோ முதலிய வீட்டில் பயன்படும் மின்னணுக் கருவியமைப்புகள்.

4. ஆற்றல் மின்னணுவியல் என்றால் என்ன?

திண்ம நிலைத் தொழில்நுட்ப இயல். தொகுதியாற்றல் வழங்குதலைத் திறமையாகக் கையாள்வது. இதில் அரை குறைக்கடத்தி அமைப்புகள் பயன்படுகின்றன.

5. ஒளி மின்னணுவியல் என்றால் என்ன?

ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவதை ஆராயுந் துறை இது.

6. ஒளியனியல் என்றால் என்ன?

ஒளித்துகள்கள் என்பவை ஒளியன்கள் ஆகும். இவற்றை ஆராயுந்துறை ஒளியனியல்.

7. ஒளியன் கருவியமைப்புகள் யாவை?

இவை ஒளியின் அடிப்படையில் அமைந்தவை. நீளச் சார்பிலாப் பொருள்களைப் பயன்படுத்துபவை.

8. ஒளிமின்சாரம் என்றால் என்ன?

மின்காந்தக் கதிர்வீச்சு அல்லது ஒளியினால் உண்டாகும் மின்சாரம்.

9. அழுத்தமின்சாரம் என்றால் என்ன?

சில படிகங்கள் இறுக்கப்படும்பொழுது அவை உண்டாக்கும் மின்சாரம்.

10. இதன் பயன் யாது?

உயர் நிலைப்பு மின்னணு அலை இயற்றிகள், உயர் நம்பக ஈர்ப்பிகள், வளி ஏற்றிகள் ஆகியவற்றில் பயன்படுவது.

11. அரைகுறைக்கடத்தி என்றால் என்ன?

சிலிகான் அல்லது ஜெர்மானியம். இது படிகத் திண்மம். இதன் மின் கடத்தும் திறன் கடத்திக்கும் காப்புப் பொருளுக்கும் இடையில் உள்ளது.

12. அரைக்குறைக்கடத்தியின் சிறப்பென்ன?

மின்னணுவியலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

13. படிகப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) என்றால் என்ன?

ஜெர்மானியப் படிகத்தை மையமாகக் கொண்ட கருவியமைப்பு

14. இதன் சிறப்பென்ன?

வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி ஆகியவற்றின் மின்சுற்றுகளின் அடிப்படையாகும்.

15. படிகப்பெருக்கியின் வகைகள் யாவை?

1. ஒருமுனை வழிக்கடத்தி. 2. இருமுனை வழிக் கடத்தி.

16. படிகப்பெருக்கியின் வேலைகள் யாவை?

1. வானொலித் திறப்பியினை (வால்வு) நீக்கி அதன் வேலையைச் செய்வது. 2.மின்னலைகளைப் பெருக்குவது.

3. எதிர்மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக்குவது.

17. படிகப்பெருக்கியின் சிறப்புகள் யாவை?

1. வெப்பம் ஏறாமல் உடன் வேலை செய்வது.

2. அளவு மிகச் சிறிது. ஆகவே குறைந்த இடத்தை அடைத்துக் கொள்வது.

3. உழைப்புத் திறன் அதிகம்.

18. படிகப்பெருக்கியின் பகுதிகள் யாவை?

உமிழி, அடி, திரட்டி.

19. வாயில்மின்னோட்டம் என்றால் என்ன?

புல விளைவுப் படிகப் பொருத்தியின் வாயில்சுற்றிலும் படிகத்திருத்தியின் எதிர்மின்வாயிலும் ஓடுவது.

20. ஒருங்கிணைச்சுற்று (IC) என்றால் என்ன?

ஒரு தொகுதியில் பல இயைபுறுப்புகளை உள்ளடக்கிய சுற்று. இது இருவகைப்படும்; ஒற்றைமுறை ஒருங் கிணைந்த சுற்று, கலப்புமுறை ஒருங்கிணைந்த சுற்று.

21. ஆற்றல் பெருக்கல் என்றால் என்ன?

ஓர் அரைகுறைக் கடத்தியுடன் மாசினைச் சேர்த்து, அதன் மின்கடத்தும் திறனைக் கட்டுப்படுத்தல். சேர்க்கப் படும் மாசுகள் பாசுவரம், பொரான்.

22. மாசு என்றால் என்ன?

கடத்தும் திறனை உயர்த்த அரைகுறைக் கடத்திகளில் சேர்க்கப்படுவது. எ-டு. சிலிகன், பாசுவரம்.

23. கதிரவன் மின்கலங்கள் என்றால் என்ன?

இவை அரைகுறைக் கடத்திகள்.கதிரவன் கதிர்வீச்சுக்களை மின்னாற்றலாக மாற்றுபவை. செயற்கை நிலாக்களில் பயன்படுபவை.

24. கட்டவிழ் மின்னணு என்றால் என்ன?

எம் மூலக்கூறுடனும் (அயனி அல்லது அணுவுடனும்) சேராத மின்னணு. மின்புலக் கவர்ச்சியால் கட்டவிழ் நிலையில் இயங்குவது.

25. கட்டவிழ் ஆற்றல் என்றால் என்ன?

குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் ஒரு தொகுதியில் வேலை நடைபெறுவதற்கு இருக்கக்கூடிய

ஆற்றல்.

26. மின்னணுக் கடிகாரம் என்றால் என்ன?

ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக இயங்கும் கடிகாரம். இதற்குச் சீசியம் 133 பயன்படுகிறது.

27. இதன் சிறப்பென்ன?

இது 6000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வினாடி இழக்கவோ கூடவோ செய்யும். இது அமெரிக்காவில் போல்டர் கொலராடோ ஆய்வுக் கூடத்திலுள்ளது.

28. மின்னணு வில்லை என்றால் என்ன?

மின்னணுக் கற்றைகளைக் குவிக்கும் கருவியமைப்பு. இவ்வில்லைகள் மின் புலங்களைப் பயன்படுத்துபவை.

29. மின்னணு நுண்ணோக்கியின் இரு வகைகள் யாவை?

1. செலுத்தும் மின்னணு நுண்ணோக்கி.

2. அலகிடும் மின்னணு நுண்ணோக்கி.

30. மின்னணு ஒளிஇயல் என்றால் என்ன?

மின்னணுக் கற்றைகளை இயக்கவும் குவிக்கவும் மின் புலங்களையும் மின்காந்தப் புலங்களையும் பயன் படுத்தும் துறை.

31. உடல்மின்னியல் என்றால் என்ன?

மின் நிகழ்ச்சிகளுக்கேற்ப உயிரிகள் எவ்வாறு இயங்கு கின்றன என்பதை ஆராயுந் துறை.

32. லேசர் என்றால் என்ன?

ஒர் உயரிய ஒளிக்கருவி. ஆற்றல் வாய்ந்ததும் ஒருங் கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்கவல்லது.

33. இதன் பயன்கள் யாவை?

மருத்துவம் (கண்ணறுவை), அறிவியல், தொழில் நுட்ப வியல் முதலிய துறைகளில் பயன்படுவது.

34. லேசரின் சிறப்பென்ன?

படிகப் பெருக்கிக்கு அடுத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சி செய்து வருங்கருவி. எல்லாத் துறைகளிலும் பயன்படுவது.

35. கிளர்திறன் என்றால் என்ன?

ஓரலகு பரப்பிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சு ஒட்டம்.

36. கிளரணு என்றால் என்ன?

ஓர் குறைக்கடத்தியினால் கிளர் நிலையிலுள்ள மின்னணுக் கடத்தலுக்கு ஆயத்தமாக இருப்பது.

37. மிகுமின்னணு என்றால் என்ன?

குறைக் கடத்தியில் அமைந்திருப்பது. மாசு ஒன்றினால் அளிக்கப்படுவது. சவ்வீரம், பாசுவரம் முதலியவை மாசுகள். மின் கடத்தும் திறனை உண்டாக்கக் குறை கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுகள் இவை.

38. கிளர்வாக்கல் என்றால் என்ன?

அணு மூலக்கூறு, அணுக்கரு ஆகியவற்றின் ஆற்றலைக் கூட்டுதல். அடிநிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்வதால் ஆற்றல் அதிகமாகும்.

39. தொலை அதிர்வச்சு (டெலக்ஸ்) என்றால் என்ன?

செவியுறு அதிர்வெண் கொண்ட தொலையச்சு முறை. விரைவுச் செய்திகள் அனுப்ப அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிலையங்களில் பயன்படுவது.

40. தொலையச்சு என்றால் என்ன?

செய்திகளைத் தானே அச்சு இயற்றும் கருவி. ஒரு தொலைத் தொடர்பு முறை.

41. மாற்றமைப்பி என்றால் என்ன?

ஒலி, ஒளி, வெப்பம் முதலிய மின்சாரமல்லாக் குறிபாடுகளை மின்குறிபாடுகளாக மாற்றுங் கருவி.

42. தொலையழைப்பி (பேஜர்) என்றால் என்ன?

ஒரு மின்னணுக்கருவி அமைப்பு. குறிப்பிட்ட ஒலிமூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. இடுப்பில் செருகிக் கொள்ளலாம்.

43. ஒளி இருமுனைவாய் என்றால் என்ன?

அரைகுறைக்கடத்திகளின் இருமுனைவாய் ஒளியூட்ட லுக்கேற்ப மீள்மாற்ற மின்னோட்டம் வேறுபடுவது.

44. ஒளிநகலி என்றால் என்ன?

அச்சியற்றிய அல்லது எழுதிய பகுதியின் படி எடுக்குங் கருவி.

45. சாளரம் (விண்டோ) என்றால் என்ன?

1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைகின்றன.

2. கணிப்பொறித் திரையில் உள்ளது. தனி விளைவு களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி.

46. உட்பாடு (இன்புட்) என்றால் என்ன?

இடுவரல், செய்திகளை உள் அனுப்புதல்.

47. உட்பாட்டுக் கருவியமைப்பு என்றால் என்ன?

கணிப்பொறி புற ஒருங்கில் உள்ளது. எ-டு கை நெம்புகோல். இக்கருவி கணிப்பொறிக்கு செய்திகளை அனுப்புவது.

48. வெளிப்பாடு (அவுட்புட்) என்றால் என்ன?

விடுவரல். செய்திகளை வெளி அனுப்பல்.

49. வெளிப்பாட்டுக் கருவியமைப்பு என்றால் என்ன?

செய்திளை வெளியனுப்பும் கருவி.

50. அச்சுப்பாடு என்றால் என்ன?

இது அச்சியற்றியினால் தாளில் அச்சிடப்படுவது. எ-டு பட்டியல்கள், படம்.

51. தொலையறிதல் என்றால் என்ன?

இது ஒரு பயனுறு அறிவியல். வானிலை முன்னறிவிப்பு, கனிவளங்காணல் முதலியவற்றை அளிப்பது. இதற்குச் செயற்கைநிலாக்கள் பயன்படுகின்றன.

52. தொலைநகல் என்றால் என்ன?

உருநகல் எந்திரம். விரைந்து தகவலைஅனுப்ப உதவும் கருவியமைப்பு.

53. தொலைஇயக்கி (ரொபோட்) என்றால் என்ன?

1. தானியங்கு கருவித் தொகுதி. 2. எந்திரமனிதன்.

54. அலைத்துகள் என்றால் என்ன?

ஒளித்துகளுக்குரிய (ஒளியன்) பெயர். அலைப்பண்பும் துகள் பண்பும் இருப்பதால் இப்பெயர். வேவ்,

பார்ட்டிகிள் ஆகிய இரண்டின் சுருக்கம்.

55. மின்னணுத் துப்பாக்கி என்றால் என்ன?

நிலையான மின்னணுக் கற்றையை உண்டாக்குங் கருவி.

56. இதன் பயன் யாது?

மின்னணு நுண்ணோக்கியிலும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுவது.

57. வரம்பிடம் என்றால் என்ன?

தட்டு அல்லது நாடாவில அமைந்துள்ள நிகழ்ச்சிக்குரிய நினைவகப் பரப்பு.

58. சொல் செயல்முறையாக்கி என்றால் என்ன?

இது கணிப்பொறி வழியமைந்த தட்டச்சுப்பொறி.

59. கணிப்பொறி அல்லது கணினி என்றால் என்ன?

கட்டளைகளுக்கு ஏற்பச் செய்திகளை முறையாக்கும் உயர்நிலை மின்னணுக் கருவியமைப்பு.

60. லோரன் என்றால் என்ன?

கப்பல் போக்குவரத்து நீண்ட எல்லை உதவி என்பது இதன் பொருள் (Long-Range. Aid to Navigation). வானவூர்திகள் அல்லது கப்பல்களுக்குரிய வானொலிவழிப் போக்கு வரத்து முறை.

61. புதிய இயற்பியல் என்றால் என்ன?

விண்ணகம், விண்வெளி நிகழ்ச்சிகள், விண்ணக வானியல், ஏவுகணைகள், செயற்கை நிலாக்கள் முதலியவை பற்றி ஆராயும் புதிய துறை. வானவெளி அறிவியலின் ஒரு பிரிவு.

62. நிரப்புதிறன் நெறிமுறை என்றால் என்ன?

டேனிஷ் இயற்பியலார் நீல்ஸ்போர் கருத்து: "ஒளியன் ஒளியனே. அலை அலையே” இது ஐயப்பாட்டு நெறிமுறையின் ஒரு வகையே. இதை இவர் 1927இல் கூறினார்.

63. எய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை என்றால் என்ன?

துகளின் உந்தத்தையும் நிலையையும் வரம்பிலாத் துல்லியத்தோடு அறிய இயலாது என்னும் நெறிமுறை. 

64. இதை இவர் எப்பொழுது கண்டுபிடித்தார்.

இவர் இதை 1927இல் கண்டுபிடித்தார்.

65. ஒளிமின்கலம் என்றால் என்ன?

மின்காந்தக் கதிர் வீச்சினால் மின்னோட்டத்தை உண்டாக்கும் கருவி. தொலைக் காட்சியில் பயன்படுவது.

66. ஒளிமின்னணுவியல் என்றால் என்ன?

மின்சாரம், ஒளி ஆகிய இரண்டிற்குமிடையே ஏற்படும் வினையை ஆராயுந் துறை.

67. ஒளி உமிழ்கலம் என்றால் என்ன?

ஒளி எதிர்மின் வாயிலிருந்து உமிழப்படும் மின்னணுக்களை அளிப்பதன் மூலம், கதிர்வீச்சாற்றலைக் கண்டறியுங் கருவி.

68. ஒளி உமிழ் திறன் என்றால் என்ன?

ஒளியூட்டப்படும்பொழுது மின்னணுக்களை உமிழும் பொருளின் பண்பு.