எனது நாடக வாழ்க்கை/பதிப்புரை
கலைஞர் அவ்வை தி. க. சண்முகம் அவர்களின் எனது நாடக வாழ்க்கை என்னும் இந்நூல், அவரது வாழ்க்கை வரலாறாக இருப்பினும் தமிழ் நாடகக் கலையின் முப்பது ஆண்டுகால வரலாற்று நூலாக விளங்குகிறது.
இந்நூலில் இவரோடு தொடர்பு கொண்ட நாடக ஆசிரியர்கள், நடிக-நடிகையர், கவிஞர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் பற்றி இவர் வெளியிடும் செய்திகள் சுவையளிப்பன. அக்கால நாடகமேடை விநோதங்கள், மேடைகளில் நடிகர்கள் மேற்கொண்ட நடிப்பு முறைகள், பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் விசித்திர இயல்புகள் போன்ற பற்பல செய்திகள் படித்து ரசிக்கத் தக்கவை.
இந்நூலில் கலைஞர், தம் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை மனம் திறந்து சொல்கிறார். அவர் தம் வாழ்வில் சந்தித்த பலரைப்பற்றிப் பாரபட்சமின்றி விமர்சிக்கிறார். இந்நூலைப் படிக்கும் போது காந்தியடிகளின் சத்தியசோதனை நம் நினைவுக்கு வராமல் போகாது.
அவ்வை சண்முகத்தின் அடக்க இயல்பும், அன்புப் பெருக்கும், பிற கனிந்த பண்புகளும்வசீகரம் மிக்கவை. மற்றவர்களுக்குப் போதனை நல்கும் ஒருவர், தம் சொந்த வாழ்க்கையிலும் எத்துணைத் தூய்மையுடைய வராக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாக விளங்குபவர்.
தமக்குப் பயிற்சி அளித்த நாடகத் தலைமை ஆசிரியர் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரால் மன்றம் அமைத்து தமது நன்றிப் பெருக்கை நாள்தோறும் காட்டி வருகிறார் கலைஞர்.
எண்ணற்ற கலைஞர்களையும் ‘எழுத்தாளர்களையும் நடிக-நடிகையரையும் நாடக உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குண்டு.
புராண - இதிகாச நாடகங்களை நடத்தி வந்த நாடக மேடைகளில் சீர்த்திருத்தக் கருத்துக்கள், தேசியப்பற்று, சுதந்திர எழுச்சி ஆகியவற்றைக் கொண்ட கதைகளையும் நடத்தி மக்கள் உள்ளத்தில் மகத்தான மாறுதலை ஏற்படுத்திய பெருமை இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் உரியதாகும்.
இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழ்ப் பெருமக்கள் வாழும் இடங்களாகிய இலங்கை மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கும் சென்று, தமிழ் நாடகக் கலையின் சிறப்பைப் பரப்பியுள்ளார்கள். இன்று தமிழ்நாடகக் கலையின் ஒளி விளக்காகத் திகழும் திரு. சண்முகம் அவர்கள் தம் பிள்ளைப் பிராயத்திலிருந்தே கலைத் திருவோடு பிரகாசிக்கலானார்.
வாழ்க்கை முழுதும் நாடகக்கலைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் சண்முகம் அவர்கள் தாம் எழுதிய சுவைக் களஞ்சியமான இந்த அரிய பெரிய நூலை வானதி பதிப்பக வெளியீடாக வெளியிட இசைவு தந்தமைக்கு என் நன்றிப் பெருக்கினை வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இடையறாத தம் பணிகளுக்கிடையே என் விருப்பத்துக்கிசைந்து கேட்டவுடன் இந்நூலுக்கு அன்போடு முன்னுரை வழங்கியிருக்கிரார் மாண்புமிகு முதல்வர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கள். நாடகக் கலைஞர் எழுதிய நூலுக்குக் கலைகளின் உருவாக அமைந்துள்ள கலைஞரின்
முன்னுரை தங்கக் குடத்துக்கிட்ட கஸ்தூரி திலகமெனத் திகழ்கின்றது. இதற்கு முதல்வர் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.
நாடகக் கலைஞர் சண்முகம் அவர்களோடு மிக்க ஈடுபாடும் மதிப்பும் கொண்ட சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை இந்நூலுக்கு ஒரு நல்ல அணியாகவே திகழ்கின்றது. அவர்களுக்கு என் இதயம் கலந்த நன்றி.
இராமனுக்கு இளையோன் இலக்குவனைப்போல் கலைஞர் சண்முகம் அவர்களுக்கு உடன் பிறப்புத் தம்பி தி. க. பகவதியவர்கள். இந்நூல் வெளி வர அவர் நல்கிய ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது.
இந்நூல் உருவாகக் கருத்தோடு ஒத்துழைத்த கவிஞர் தே. ப.பெருமாள் அவர்களுக்கு என் அன்பு கனிந்த நன்றி.
விரைவில் இந்நூல் வெளிவரத் தூண்டு கோலாக இருந்த நண்பர் -நகைச்சுவைச் செல்வர் நடிகர். டி. என். சிவதாணு அவர்களுக்கும் செப்பமுற நூலைத் துரிதமாக அச்சிட்டுத் தந்த மூவேந்தர் அச்சகத்தாருக்கும் என் நன்றி.
ரசனை மிக்க இந்நூலை வாசகப் பெருமக்கள் பெருமளவு வாங்கி ஆதரித்து என்னை இப்பணியில் மேலும் ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
23. 4. 72 சென்னை - 17 |
ஏ. திருநாவுக்கரசு |
முத்தமிழ்க்கலா வித்வரத்தினம் அமரர் அவ்வை சண்முகம் அவர்களின் ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் இந்நூல் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.
இந்நூலைப் பாராட்டி எண்ணற்ற கடிதங்கள் வந்துள்ளன, தமிழறிஞர்களும் சாதாரணமாக தமிழ்ப்படிக்க தெரிந்த அன்பர்களும் இந்நூலைப் பாராட்டியதோடல்லாமல் இந்நூலின் மறுபதிப்பை உடனடியாகக் கொண்டு வாருங்கள் என்று என்னைத் துரண்டிக்கொண்டே இருந்தார்கள். நூல் அளவில் பெரிது. நூலிலுள்ள விஷயமும் மிகப் பெரிது. இந்நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பகம் உண்மையிலேயே பெருமை கொள்கிறது.
இந்நூலின் மூன்றாம் பதிப்பை வெளியிட அனுமதியளித்த வணக்கத்துக்குரிய அவ்வை சண்முகம் அவர்களின் திருக்குமாரர்களுக்கு முதற்கண் உளமார்ந்த நன்றியை வானதி பதிப்பகம் செலுத்துகிறது.
அவ்வை சண்முகனாரின் மூத்தமகன் திரு டி. கே. எஸ் கலைவாணன் அவ்வை சண்முகம் அவர்களைப் போலவே அருங்கலைஞர். அவர் முன் பதிப்புக்களில் இல்லாத படங்களை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்து இப்புதிய பதிப்பில் சேர்க்க வேண்டும் என மிக ஆர்வமுடன் சொன்னார். அதன்படி மூன்றாம் பதிப்பு சில புதிய படங்களுடன் இப்பொழுது வெளிவருகிறது.
“இம்மூன்றாம் பதிப்பை விரைவில் கொண்டுவரத்தான் வேண்டும். நடிகர் உலகமும் தமிழ்வாசகர் உலகமும் பெரிதும் இந்நூலை வரவேற்கிறது. உடனடியாகக் கொண்டு வாருங்கள்” என்று எனக்கு அன்புக் கட்டளையிட்டவர்களில் தலையாயவர் சிறந்த சிரிப்பு நடிகரும் நல்ல நண்பருமான உயர்திரு டி.என். சிவதாணு அவர்கள். அவருக்கு அன்பு கனிந்த நன்றியை வாசகர் உலகமும், வானதியும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.
இந்நூலின் மூன்றாம் பதிப்பை அழகுற அச்சிட்ட குருகுலம் அச்சகத்தாருக்கும், குருகுலம் அச்சுப் பள்ளி மாணவிகளுக்கும் நன்றி.
எனது நாடக வாழ்க்கை நூலை ஏற்று மகிழுங்கள்!
29–10–86 சென்னை-17 |
ஏ. திருநாவுக்கரசு |