உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/அம்மாவின் அந்திய நேரம்

விக்கிமூலம் இலிருந்து
அம்மாவின் அந்திய நேரம்
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


அம்மாவுக்கு நோய் கண்ட அன்று மாலை பெரியண்ணா வந்திருந்தார். கல்யாணமான நாளிலிருந்து அவர் அம்மாவோடு பேசுவதும் இல்லை; வீட்டுக்கு வருவதும் இல்லை. அன்று வந்தவர் வாசலிலேயே நின்று விசாரித்துவிட்டுப் பார்க்காமல் போய் விட்டார். காலரா கண்டு குணமடைந்தவன் ஆகையால் நான் அம்மாவின் அருகிலேயே இருந்தேன். அப்போது எனக்கு என்றுமில்லாத துணிவு ஏற்பட்டிருந்தது. அம்மாவின் வயிற்றில் பூச டாக்டர் ஒரு மருந்து கொடுத்திருந்தார். நான் அந்த மருந்தைப் பூசிக் கொண்டிருந்தேன். மதினி கோதுமைத் தவிடு வறுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்கி டாக்டர் சொன்னபடி ஒத்தடம் கொடுத்தேன். அம்மாவுக்குத் தன் நினைவு இல்லை, கண்கள் மேலே சொருகின. மதினி பயந்து அழத் தொடங்கினார்கள். வெளியே சின்னண்ணாவும் மரணத் தருவாயில் படுத்திருப்பதைச் சைகையால் காட்டி, நான் மதினியின் அழுகையை அடக்கினேன்... சில நிமிடங்களில் அம்மா மீண்டும் கண் திறந்தார்கள். “பெரியண்ணாவை அழைத்து வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டேன். அம்மா வேண்டாமென்று கையசைத்தார்கள். பேச முடியவில்லை. கோதுமைத் தவிடு கொடுத்துவிட்டுப் போன மதினியைச் சுட்டிக் காட்டி “அவளைக் கை விடாதிருக்கச் சொல்” என்று ஜாடை காட்டினார்கள். மீண்டும் ஏதோ சொல்ல முயன்றார்கள். பேச்சு வரவில்லை. நான் அருகில் குனிந்து ‘என்னம்மா’ என்றேன். அவர்கள் காட்டிய சைகையிலிருந்து தங்கைமார்களை நினைவுபடுத்துவதாகப் புரிந்து கொண்டேன். “சுப்பு-காமாட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா” என்றேன். அம்மாவின் கண்கள் மலர்ந்தன. சற்று நேரத்தில் மீண்டும் கண்கள் மேலே சொருகிக் கொண்டன. அம்மா உறங்குவதாக நினைத்து நான் வெளியே வந்தேன். சின்னண்ணாவுக்கும் உறக்கம் இல்லை. வாயால் பேசவும் இயலாத நிலை.அவரது கண்கள்,அம்மாவின் நிலையை அறிய ஆவல் கொண் டிருப்பது தெரிந்தது. அம்மா உறங்குவதாக அவருக்குச் சைகை காண்பித்து விட்டு,வாயிலில் இறங்கிவிதிக்கு வந்தேன்.நள்ளிரவு: வீதியில் ஜன நடமாட்டமே இல்லை. வானம் நிர்மலமாயிருந்தது. நட்சத்திரங்கள் பளிச்சிட்டன. கம்பெனியின் நீண்ட பணியாளரான கோபால்பிள்ளை மட்டும் திண்ணையில் படுத்திருந்தார். உள்ளே தங்கைமார்கள் சுப்புவும், காமாட்சியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு நாய்கள் ஊளையிட்டன. அருகிலிருந்த கம்பெனி வீட்டுக்குப் போய்வர எண்ணி இரண்டடி நடந்தேன். மீண்டும் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தேன். அறைக்குள்ளே மதினி அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.அறைக் குள் அடியெடுத்து வைத்தேன். அம்மா எவ்விதச் சலனமுமின்றி அமைதியாகக் கிடந்தார்கள். கோபால்பிள்ளையை அழைத்து பார்க்கச் சொன்னேன்... அவர் பார்த்தார். அம்மா எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர் முகம் காட்டியது.

என் நெஞ்சம் ஏனே கல்லாய் உறைந்திருந்தது!அழுகையே வரவில்லை. மதினியையும் அழ வேண்டாமென்று சமாதானப் படுத்தினேன். சின்னண்ணா ஒன்றும் புரியாமல் விழித்தபடி கிடந் தார். பெற்ற அன்னையார் எங்களைப் பிரிந்து நெடுந்துாரம் சென்று விட்டார்கள். கொடுங் காலரா நோய் பெற்ற தாயை விழுங்கிக் கொண்டது. 1931 ஜனவரி 29-ஆம் நாள் இரவு 12.30க்கு எங்கள் அன்னயார் இறைவனடி சேர்ந்தார்.

மறுநாள் முற்பகல் 11 மணியளவில் அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதுதான் எங்கள் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோதனைக் காலம்.கம்பெனி நிலை தத்தளித்தது. திசை தெரியாத காட்டில், சேறு நிறைந்த பாதையில் சிக்கிக் கொண்ட வண்டிக்காரனுடைய நிலைமையில் நாங்கள் இருந்தோம். கம்பெனி என்னும் வண்டியை எப்படி மேலே கொண்டு செல்வது? நடிகர்களின் பெற்றோர்கள் பலர் தமது பையன்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கடிதங்கள் வரைந் தனார். சிலர் நேராகவே வந்து அழைத்துச் சென்றனார். ஒரு மாத காலம் நாடகம் நிறுத்தப்பட்டது.

பரிவு காட்டிய பால்ய நண்பர்கள்

இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு இரு நண்பர்கள் உதவி புரிந்தார்கள்.ஒருவர் கிட்டுராஜூ, மற்றவர் வீரமணி ஐயர். இவ்விருவரும் 1924ஆம் ஆண்டு முதல் எங்களோடு நெருங்கிப் பழகியவர்கள். பெரும் செல்வந்தர்களாகப் பிறக்கவில்லையென்றா லும் நல்ல மனம் உடையவர்கள்.இவ்விரு நண்பர்களும் அடிக்கடி வந்து சந்தித்தார்கள்;ஆதரவு கூறினார்கள். பொருள் கொடுத்தும் உதவினார்கள். கையில் பொருளின்றிக் கடன் கேட்க மனமின்றி, விடுபட வழியுமின்றி, நாங்கள் வேதனைக்கடலுள் ஆழ்ந்து கிடந்த போது, பாசத்தோடு பரிவு காட்டிய கண்பர் கிட்டுராஜுவை உயி ருள்ள வரை மறக்க முடியாது. பல நாடக ரசிகர்களால் எங் களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களும் நகை களும் இருந்தன. எட்டையபுரம் ஜமீந்தார் காசி விஸ்வநாத பாண்டியன் அன்புடன் வழங்கிய வைர மோதிரங்கள், கடுக் கன்கள், கெம்பு அட்டிகை முதலிய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் இந்த நேரத்தில் கம்பெனிக்கு உயிர் கொடுத்தன.

எங்கள் நிருவாகம்

அம்மாவின் மரணத்திற்குப் பின் சிற்றப்பாவுக்கும், பெரியண்ணாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. எதிலும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட சிற்றப்பா, இனித் தாம் கம்பெனியில் உரிமையாளராக இருக்க இயலாதென்று கூறி விட்டார். பெரியண்ணாவும் இதையே எதிர்பார்த்திருந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் சார்பில் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நேரடியாக எங்கள் நிருவாகத் தில் வந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு நாகர்கோவிலில் திருமணம் நடை பெற்றது. அம்மா இறந்த சமயம் என். எஸ். கிருஷ்ணன் நாகர் கோவிலில் இருந்தார். திருமண சம்பந்தமாக அவருக்கு பண உதவிசுட நண்பர் கிட்டுராஜுவே செய்தார். கொடுங் காலரா நோய் அம்மாவைக் கொள்ளை கொண்டபின் வேறு யாரையும் துன்புறுத்தவில்லை. சின்னண்ணா மறுபிறவிஎடுத்தது போல் படிப் படியாகக் குணம் அடைந்தார். திருமணத்தால் பெரியண்ணா வுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்பும் அம்மாவின் மறைவுடன் தீர்ந்தது. இனிக் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெரியண்ணாவின் தலையில் சுமந்தது. சிறு குழந்தை களாக இருந்த இரண்டு தங்கைமார்களைக் காப்பாற்றிக் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய கடமையும் அண்ணாவுக் கிருந்தது. எனவே அவர் பழைய வெறுப்பு மனோபாவத்தை விட்டுத் தமது மனைவியுடன் ஒன்றுபட்டிருந்து வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்.

கிட்டப்பா நந்தனார்

நாங்கள் நாடகத்தை நிறுத்தியிருந்த சமயத்தில் எஸ். ஜி. கிட்டப்பாவின் ஸ்பெஷல் நந்தனார் நாடகம் ஒன்று எங்கள் கொட்டகையிலேயே நடந்தது. நாங்கள் எல்லோரும் நாடகம் பார்க்கப் போயிருந்தோம்.

அன்று காயக சிகாமணி ஹரிகேசவகல்லூர் முத்தையா பாகவதரும் உள்ளே எங்களோடு உட்கார்ந்து நாடகம் பார்த்தார். கிட்டப்பா நந்தகைவந்து,அன்று பாடிய அற்புதமான பாடல்கள் இன்னும் என் செவிகளிலே ரீங்காரம் செய்து கொண்டிருக் கின்றன. சபையோர் கிட்டப்பாவின் இசையமுதத்தைப் பருகி, மதுவுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடந்தனார் என்றே சொல்ல வேண்டும். பாடல்களிலே நடிப்புணர்ச்சியைக் கொட்டிப் பாடும் பாவத்தோடு கூடியபாடல்களை நாங்கள் அன்றுதான் கேட்டோம். என் வாழ்நாளில் அப்படிப் பாடிய ஒரு சங்கீத தெய்வத்தை நான் இன்னும் சந்திக்கவில்லை. எங்களுக்கு ஏற்பட்டிருந்த எண்ணற்ற கவலைகளையெல்லாம் மறந்து, நான்கு மணி நேரம் கிட்டப்பாவின் இசை வெள்ளத்திலே மூழ்கிக் கிடந்தோம்.

மானேஜரின் துரோகம்

கம்பெனிக்கு நல்ல வருவாய் ஏற்பட்ட காலத்திலெல்லாம் அவற்றை உள்ளிருந்த மனிதக் கரையான்கள் அரித்துத் தின்று கொண்டிருந்தன. மானேஜர் காமேஸ்வர ஐயர் இப்படிச் செய்தவர்களிலே முதல்வர். எத்தனை எத்தனையோ துன்பங்களுக்கு அவர் காரணமாக இருந்தார். நகைகளை அடகு வைப்பதில் என்னென்னவோ தந்திரங்களைக் கையாண்டார். சில நகைகளைத் தாமே வைத்துக் கொண்டு பணம் கொடுத்தார். அவற்றின் கெடு தீர்ந்ததும் ஏலத்தில் போய்விட்டதாகப் பொய்யுரைத்தார். அவருடைய துரோகச் செயல்களேத் தெரிந்திருந்தும் விடுபட வழியின்றி அவஸ்தைப்பட்டோம். சிற்றப்பா நிர்வாகத்தை விட்டதோடு காமேஸ்வர ஐயரையும் கம்பெனியிலிருந்து விலக்கினோம், அவருக்கு ஒரு பெருந்தொகை சம்பளப் பாக்கியாகக் கொடுபட வேண்டியிருந்தது. அதைச் சில மாதங்களில் கொடுத்துவிடுவதாகப் பெரியண்ணா எழுதிக் கொடுத்தார். எப்படியாவது மானேஜர் போனால் போதுமென்றிருந்தது.

காட்சி அமைப்பாளர்கள்

இச்சமயம் காட்சியமைப்பாளர்களில் முதல்வராயிருந்த பகவதியாபிள்ளை இரண்டு திரைகளை யாருக்கோ விற்றுவிட்டார். மற்றொருவரும் இதற்கு உடந்தையாக இருந்தார் என்று தெரிந்தது. என்ன செய்வது? நிருவாகத்தில் குழப்பம். நாடகம் நடைபெறாத நிலைமை. எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்க வேண்டும்! பகவதியாபிள்ளை ஆரம்பகாலத்தில் எங்களிடம் உண்மையாக உழைத்த ஊழியர்களில் ஒருவர். காகிதத்தில் செடி, கொடி, பூ இவற்றைச்செய்வதில் நிபுணர். அவர் இவ்வாறு நடந்து கொண்டது எங்களுக்கெல்லாம் வேதனை அளித்தது. மேலும் மேலும், நாடக அரங்கில் பல பொருட்கள் களவாடப்பட்டு வந்தன. கடைசியாக வேறுவழி யின்றிப் பகவதியாபிள்ளையை விலக்க நேர்ந்தது. கும்பகோணத்திலிருந்து வேறு ஊருக்குப்போக முடிவு செய்தோம். புது ஊர்கள் எதிலும் கொட்டகை கிடைக்கவில்லை. பெரியண்ணாவும் கோபால் பிள்ளையும் பல ஊர்களுக்குப் போய்த் திரும்பினார்கள். கடைசியில் தஞ்சாவூருக்குப்போக முடிவு செய்யப் பெற்றது.

மோகனசுந்தரம்

தஞ்சையில் வாத்தியார் கந்தசாமி முதலியார் மீண்டும் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். மோகனசுந்தரம் நாடகம் தயாராயிற்று. மோகனசுந்தரம் ஒரு அருமையான நாடகம் ஜே. ஆர். ரங்கராஜுவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. முற் போக்குக் கருத்துக்கள் அமைந்த நாடகம். பின்னல்திரைப்படத்தில் எல்லோரும்கண்டு மகிழ்ந்திருக்கிருேமாதலால் இதைப்பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இந்நாடகம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. கம்பெனியின் இந்தக் கஷ்டமான நிலையிலும் புதிய நாடகத்திற்குக் காட்சிகள் தயாராயின. சின்னண்ணா லீலாவதியாகவும், எம். கே. ராதா சுந்தர முதலியாராகவும் தோன்றி நடிக்கும் காட்சிகள் மிக நன்முக இருக்கும். இந்நாடகத்தில் முக்கியபாத்திரமான விசாலாட்சியாக எம். ஆர். சந்திரன் என்ற இளைனார் நடித்தார். இவர் மிக அழகிய தோற்றம் உடையவர். ஒப்பனை ஒன்றும் இல்லாமல் சாதாரண நிலையிலேயே பாவாடை, தாவணி கட்டிவிட்டால் பகலில் கூட. இவரைப் பெண்ணென்றே எல்லோரும் நினைப்பார்கள். தலைமுடி யும் நன்றாக வளர்ந்திருந்ததால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இவரிடம் ஒரு சிறிய குறைபாடு இருந்தது. எப்போதும் தொண்டை ‘கரகர’ என்று இரு குரல்களிலேயே பேசும். ஒப்பனை முடிந்த பின் இவரைத் தொடர்ந்து ஐம்பது தோப்புக் கரணங்கள் போடச் சொல்வோம். கொஞ்சம் மூச்சு வாங்கினால் தொண்டையிலுள்ள அந்தக் கரகரப்பு போய்விடும். பிறகு சாரீரம் இனிமையாக இருக்கும். இவர் மிக நன்றாக நடிக்கக் கூடியவர். மோகனசுந்தரத்திற்கு சுமாராக வசூலாயிற்று.