பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்திரிகையில் பல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதினர். இந்தக் கட்டுரைகள் 1933-ல் குடியரசுப் பதிப்பகத்தின் வெளியீடாக, “பொதுவுடைமைத் தத்துவங்கள்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.

என்றாலும், 1934-ல் சுயமரியாதை இயக்கத்தின் தலைவரான ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு, ஜீவாவும், சோஷலிச மனப்பான்மை கொண்ட ஏனைய இளைஞர்களும் அந்த இயக்கத்திலிருந்து விலகினர். ஜீவானந்தம் பின்னர் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூல கர்த்தாக்களில் ஒருவராக மாறிவிட்டார்.

தமிழறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்த ஜீவா 1932ம் ஆண்டுதொட்டே அக்டோபர் புரட்சியைப் பற்றியும் லெனினைப்பற்றியும் சோவியத் நாட்டைப் பற்றியும் பல பாடல்களைப் புனைந்து வெளியிட்டு வந்தார். இந்தப் பாடல்கள் பலவும் பின்னர் தொகுக்கப்பட்டு, “ஜீவாவின் பாடல்கள்” என்ற தலைப்பில் சென்னை என்.சி.பி.எச். வெளியீடாக 1962ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

ஜீவாவின் பாடல்கள் அந்தக் காலத்திலேயே அரசியல் மேடைகளில் பாடப்பட்டன; அவற்றில் சில தொழிலாளி மக்களிடையே மிகவும் பிரபலமும் அடைந்தன. 1932-ம் ஆண்டிலேயே அவர் சோவியத் யூனியனை நோக்குமாறு தொழிலாளிகளை அறைகூவி அழைத்துப் பின்வருமாறு பாடினார்

புது உலகத்தை நோக்குவீர் பூரிப்படைவீர்
இதுவரை ஈடேறா ஏழைத் தொழிலாளிகள்
எழுச்சி பெறுவதற்கே--இசைந்த இன்பப் (புது
லெனின் வழித் தியாகிகள் நேர்மை நிறைந்த தோழர்
அநியாய மென்பதறியார்- ஆட்சி கொள் ரஷ்யப் (புது
ஊணில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற் கல்வியில்லை
உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை யெனும்
ஒப்பாரி அங்கு இல்லை

36