தமிழ் வளர்த்த நகரங்கள்/இலக்கிய மதுரை
4. இலக்கிய மதுரை
மாங்குடி மருதனார் காட்டும் மதுரை
தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும்.
கடைச்சங்கத் தொகை நூலாகிய பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார் என்னும் பெரும்புலவரால் பாடப்பெற்றது. அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் தலைமைப் புலவராகத் திகழ்ந்தவர். அவர் பாண்டியனால் பெரிதும் மதிக்கப்பெற்றவர்.
"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக”
என்று ஆப் பாண்டியனே மாங்குடி மருதனாரைப் பாராட்டுகின்றான். அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் நினைவோடு மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். இந்நூற்கண் அவர் காட்டிய புலமைத் திறங்கண்ட பிற புலவர்கள் அவரைக் ‘காஞ்சிப் புலவர்’ என்றே கொண்டாடினர்.
மாங்குடி மருதனார் காட்டும் மதுரைச் சிறப்பை நோக்குவோம். ஐவகை நிலவளங்களும் நிறைந்து விளங்கும் பாண்டிய நாட்டின் நடுவிடத்தே ம்துரைமாநகரம் அமைந்துள்ளது. வையையாற்றின் கரைக்கண் இருப்பது. ஆழமான அகழியையும், உயரமான மதிலையும், இடையறாமல் மக்கள் வந்து போகும் வாயிலையும், வரிசையாக அமைந்த பெரிய மனைகளையும் உடையது. ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற தெருக்களையுடையது. தெருக்களில் பலவகைக் கூட்டத்தாரின் ஒலிகள் எழுந்த வண்ணமாக இருக்கும். முரசறைவோர் விழாக்களைப்பற்றி விளம்பிக்கொண்டே செல்லுவர். கடலொலியைப் போலப் பல்வேறு இசைக்கருவிகள் எங்கும் முழங்கிக்கொண்டிருக்கும். அவ் இசையை விரும்பியவர்களுடைய ஆரவாரமும் நிறைந்திருக்கும்.
மதுரையில் பகற்கடைகளாகிய நாளங்காடியும், இரவுக் கடைகளாகிய அல்லங்காடியும் இருந்தன. கடைகளில் இன்ன பொருள் விற்கப்படுகின்றது என்பதை அறிவிக்கக் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். நாளங்காடியில் பூ விற்பாரும், மாலைகள் விற்பாரும், நறுமணச் சுண்ணம் விற்பாரும், வெற்றிலை பாக்கு விற்பாரும் இருப்பர். அல்லங்காடியில் சிலர் சங்கினை அறுத்து வளையல்களாகக் கடைந்து விற்பர். சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர். சிலர் பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர். சிலர் பொன்வேலை செய்வர். சிலர் ஆடைகள் விற்பர். சிலர் அழகிய ஓவியங்களை வரைந்து விற்பர். பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் ஆகிய கனிவகைகளைச் சிலர் விற்பர். வாழைக்காய், வழுதுணங்காய், பாகற்காய், கீரை, கிழங்கு முதலியவற்றைச் சிலர் விற்பர். இவர்கள் பேசும் ஓசையெல்லாம் கூடிப் பேரொலியாக இருக்கும். இவ் இரவுக் கடைகள் எல்லாம் முதல் யாமத்திலேயே மூடப்பட்டுவிடும்.
இரண்டாம் யாமத்தில் சங்குகளின் ஒலி அடங்கி விடும். அப்போது அப்ப வணிகர் அடையினையும் மோதகத்தினையும் தட்டுகளில் வைத்தவாறே உறங்கிக் கொண்டிருப்பர். நகர மக்களும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பர். மூன்றாம் யாமத்தில் ஊர்க்காவலர்கள் துயிலாத கண்களோடும் அயராத உறுதியோடும் நகரில் உலாப்போவர். அவர்கள் கள்ளர்களை ஒற்றியறிந்து உள்ளம் தளராது திரிந்துகொண்டிருப்பர். மழை பொழிந்து தெருவில் நிறைய நீரோடும் வேளையிலும் அவர் தம் கடமையில் தவறாது கையில் வில்லும் அம்பும் தாங்கிக் காவல் புரிந்து திரிவர். கடையாமத்தில் அந்தணர் மறையினை ஒதுவர். பாணர் மருதப் பண்ணை வாசிப்பர். பாகர்கள் யானைகளுக்குக் கவளம் தந்துகொண்டிருப்பர். குதிரைகள் புல்லைத் தின்றுகொண்டிருக்கும். கடைக்காரர்கள் கடைகளின் முற்றங்களைச் சாணத்தால் மெழுகித் தூய்மை செய்வர். கள் விற்போர் கள்ளின் விலைகூறிக் கொடுத்துக்கொண்டிருப்பர். மகளிர் தத்தம் மனைக் கதவங்களைத் திறக்கும் ஒலி கேட்கும். பள்ளியெழுச்சி முரசம் முழங்கும். காளை மாடுகள் ஆரவாரம் செய்யும். சேவல்கள் கூவும். மயில்கள் அகவும். களிறுகள் பிளிறும். மகளிர் மனைமுற்றங்களைப் பெருக்குவர்.
இங்ஙனம் மாங்குடி மருதனார் காட்டும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மதுரைமாநகருக்கும் இன்றைய மதுரைக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை. பண்டுபோல் இன்றும் எல்லா கலங்களும் நிறைந்து விளங்கும் சிறந்த நகரமாகவே மதுரை திகழ்ந்து வருகிறது. மதுரை போன்ற சிறந்த நகர் தமிழ் நாட்டில் ஒன்றுமின்று, சோழன் சேரன் ஆண்ட தலைநகரங்களும் இதற்கு ஒப்பாகா.
பரிபாடல் பாராட்டும் மதுரை
இனி, மற்றாெரு கடைச்சங்க நூலாகிய பரிபாடல் காட்டும் மதுரையைப் பார்ப்போம். எழுபது பாடல்களைக் கொண்ட பரிபாடல் நூலில் நான்கு பாடல்கள் மதுரையைப் பற்றியன என்று பழம்பாடல் ஒன்று பகர்கின்றது.
"திருமாற்(கு) இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக், காடுகாட்(கு) ஒன்று,-மருவினிய
வையையிரு பத்தாறு, மாமதுரை நான்(கு) என்ப
செய்யபரி பாடல் திறம்.”
அந்நான்கு பாடல்களுள் ஒன்றேனும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வையையைப் பற்றிய பாடல்கள் எட்டு நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றில் இடையிடையே மதுரையைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.
மதுரைமாநகரின் நடுவில் திருக்கோவில் அமைந்துள்ளது. அதன் காற்புறமும் தெருக்களின் பின் தெருக்களாக அமைந்துள்ளன. இவ்வமைப்புத் தாமரைப்பூவின் அமைப்பை ஒத்திருந்தது. தாமரை மலரின் நடுவில் உள்ள பொகுட்டினைப் போன்று இறைவன் திருக்கோவில் இலங்கியது. பொகுட்டினைச் சுற்றியிருக்கும் இதழ்களைப் போன்று தெருக்கள் திகழ்ந்தன. இத்தகைய நகரின் அமைப்பு முறையைப் பரிபாடல் நன்கு சித்திரிக்கின்றது."மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்.”
இந் நகரில் எப்பொழுதும் வேதியர் ஓதும் மறையொலி நிறைந்திருக்கும். அந்த மறையொலி கேட்டே மதுரை நகரத்து மக்கள் துயிலெழுவர். சோழன் தலைநகராகிய உறையூரிலும், சேரன் தலைநகராகிய வஞ்சியிலும் வாழும் மக்கள் கோழி கூவும் ஒலி கேட்டுத் துயிலெழுவது போன்று மதுரை மக்கள் துயிலெழுவதில்லை.
வையையாற்றில் நீராடிய மக்கள் ஒப்பனை செய்து கொள்ளுவதற்கென்று சில தனிமாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மாடங்களுள் சில புலிமுக வடிவில் விளங்கின. அப்புலி வடிவத்தைக் கண்டு, உண்மைப் புலியென்று கொண்டு, களிற்றைப் பாயுமென வெருண்டு, பிடிகள் சிதைந்து ஓடுவதுண்டு.
இந்நகரில் பூக்களை ஆராய்ந்து கொய்பவர் பலர் இருந்தனர். அவர்கள் மலர் கொய்தற்கெனத் தனிக் கோல் ஒன்று வைத்திருந்தனர். அவர்கள் கொய்த மலர்களை மாலையாகக் கட்டுதற் பொருட்டு ஓரிடத்தில் குவிப்பர். அவற்றைக் குவிப்பதற்காகத் தனியே பூமண்டபங்கள் இருந்தன.
மதுரைமாநகரின் மதிலையொட்டி வையை சென்றது. அதில் பெருகிவரும் வெள்ளத்தின் அலைகள், விண்ணுற நிவந்த மதிலின்மீது மோதும். அவ் அலையோசை கேட்டு நகரமக்கள் துயிலெழுவர். மதிலில் நீண்டதொரு சுரங்கவழி நிலவியது. அதன் உள்ளே சென்ற ஆற்றுநீரை, மதில் புறத்தே சொரியும் காட்சி, களிறு துதிக்கையைத் தூக்கி நீரைப் பொழிவது போன்றிருக்கும். மதிலின் புறத்தே வையைக் கரையிலுள்ள மலர்ச்சோலைகளின் நடுவே பாணரும் கூத்தரும் வாழ்தற்கென்று பாக்கங்களும் சேரிகளும் விளங்கின.
திருமகளுக்கு அணிந்த திலகம் போல உலகில் புகழ் பூத்துக் கமழ்வது மதுரைமாநகரம். பரங்குன்றும் வையையும் பாரில் உள்ளளவும் மதுரை சீர்குன்றாது பேர்பெற்று விளங்கும். ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்துவக்கும் மக்கள் மதுரையில் மிக்குள்ளனர். அவர்களே வாழ்வார் என்று சொல்லத்தக்கார். அவர்கள் புத்தேள் உலகும் போதற்கு உரியராவர்.
இத்தகைய மதுரைமாநகரைப் புலவர்கள் தங்கள் புலமைத் துலாக்கோலால் தூக்கிப் பெருமையை நோக்கினர். உலகினை ஒரு தட்டினும் மதுரையை மற்றாெரு தட்டினும் வைத்து எடைபார்த்தனர். உலகனைத்தும் வாட, மதுரையிருந்த தட்டு வாடவில்லை. எனவே, உலக முழுதும் சேர்ந்தாலும் மதுரைக்கு ஒப்பாகாது என்று மதிப்பிட்டார் பரிபாடற் புலவர்.
"உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூடல் நகர் ’’
என்பது பரிபாடல்.
மதுரைமக்கள் நீராடும் வையைத்துறை
மதுரைமாநகரிலுள்ள மக்கள் வையையில் நீராடுதற்குரிய நெடுந்துறையாகவும் முன்துறையாகவும் விளங்கியது திருமருதமுன்றுறையாகும். அஃது அடர்ந்த மருதமரங்கள் நிறைந்த கரையைச் சார்ந்த துறையாகும். நீராட வருவார் தங்குதற்குரிய தண் பொழில் அமைந்த அழகிய துறையாகும். கூடலா ரெல்லாம் வந்து கூடினலும், கூடற்கோமான் படை யுடன் வந்து நாடிலுைம் தங்குதற்கு வாய்ப்புடைய வளமான பொழில் சூழ்ந்த எழில்துறையாகும். நீர் வற்றிய வேனில் காலத்திலும் கரையைச் சார்ந்து நீர் சென்றுகொண்டிருக்கும் முன்னடித் துறையாகும். ஆதலால் அது திருமருதமுன்றுறை யென்று புலவர் பாடும் புகழ்பெற்றது.
புதுப்புனல் விழா நடைபெறும் கன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலேயொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்.
இத்துறைக்கண் பாணர்கள் சென்று யாழிசைத்து மருதப்பண்ணை அருமையாகப் பாடுவர். அவர்கள் பாடப்பாட மைந்தரும் மகளிரும் நீரில் பாய்ந்து ஆடுவர் ; அவர் தம்முள் ஊடுவர்; ஊடலுணர்ந்து கூடுவர்; கூடி மகிழ்வர் ஒடிப் பிரிவர்: தேடித் திரிவர்; மலரைச் சூடித் தொழுவர். இங்ஙனம் இருபாலாரும் துறைக்கண் ஆடியமையால் வையைகீர் எச்சிலாயிற்று என்று கூறினர் இன்னொரு புலவர்.
இளங்கோவடிகள் காட்டும் மதுரை
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத் திருமா மணியாய்த் தோன்றிய கண்ணகியின் கற்பு மாண்பைக் கவினுற விளக்கும் காவியம் சிலப்பதிகாரம். சேர நாட்டு வீரவேங்தர் வழித்தோன்றலாகிய இளங்கோ வடிகள் அவ் இனிய காவியத்தை ஆக்கியருளின்ர். அவர் தமது காவியத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று பெரும் பிரிவுகளை வகுத்துள்ளார். அவற்றுள் நடுவண் அமைந்த மதுரைக் காண்டம் கண்ணகி வாழ்வில் மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை விளக்குகிறது. அப்பகுதியில் மதுரையைப் பற்றிய செய்திகள் பல கூறப்படுகின்றன.
‘சூழ்வினைச் சிலம்பு காரணமாக, காட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யு’ளென உறுதிபூண்ட இளங்கோவடிகள் மதுரைமாககரை ஒருமுறையேனும் நேரில் கண்டறிந்தவராதல் வேண்டும். மதுரையிலேயே பல்லாண்டுவாழ்ந்து கூலவாணிகம் நடாத்திய சீத்தலைச் சாத்தனர் அவருக்குத் தண்டமிழாசானதலின் அவர் வாயிலாக மதுரைச் செய்திகளைத் தெளிவாகக் கேட் டறிந்தவராதல் வேண்டும். இக் காரணங்களால் இளங்கோவடிகள் வளங்கெழு மதுரைமாநகரைச் சிறந்த சொல்லோவியமாக வரைந்து காட்டுகிறார்.
இரண்டாம் நூற்றாண்டில் மதுரைமாநகரைச் சூழ்ந்து மாபெரும் மதில் அமைந்திருந்தது. மதிலைச் சுற்றிலும் ஆழமான அகழியும், அதனைச் சூழ்ந்து அகன்ற காவற்காடும் அமைந்திருந்தன. இங்ஙனம் பல்வேறு வல்லரண்களால் குழப்பெற்ற மதுரையில் வாழ்ந்த மக்கள் என்றும் பகைவர் படையெடுப்பிற்கு அஞ்சியதுமில்லை; அந் நகரைவிட்டு அகன்றதுமில்லை. இதனால் இளங்கோவடிகள் அங்ககரைப், “பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்” என்று குறிப்பிட்டார். இளங்கோவடிகள் காலத்தில் மதுரைமாநகர் பகைவர் படையெடுப்பைக் கண்டதே யில்லை.
மதுரையைச் சூழ்ந்த மதிலில் பகைவரை அழிக்கும் பல்வேறு பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கருவிரல் குரங்குப்பொறி, கல்லுமிழ் கவண், வெங்கெய்க் குழிசி, செம்பினை உருக்கும் குழிசி, இருப்பு உலகள், கல்லிடு கூடைகள், தூண்டிற் பொறி, பகைவரைக் கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலிகள், ஆண்டலைப் புள்ளின் வடிவாக அமைத்த அடுப்புகள், மதிலைப் பற்றியேறுவாரைப் புறத்தே தள்ளும் இருப்புக் கப்புகள், கழுக்கோல், அம்புக்கட்டுகள், ஏவறைகள், தன்னே நெருங்கியவர் தலையை நெருக்கித் திருகும் மரங்கள், ஊசிப்பொறிகள், சிச்சிலிப் பொறிகள், பன்றிப்பொறிகள், மூங்கில் வடிவில் அமைந்த பொறிகள், எழு, சிப்பு, கணையம், எறிகோல், குந்தம், வேல், குருவித்தலைப் பொறிகள் இன்னும் இவைபோன்ற வலிமிக்க பொறிகள் அமீைந்து, பகைவர் அணுகாது அச்சுறுத்தின. இத்தகைய மதிலின்மீது பாண்டியன் நாள்தோறும் பகை வரை வென்றுவென்று உயர்த்திய வெற்றிக் கொடிகள் வீறுடன் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன.
கொடிமதில் வாயிலைக் கடந்து நகருக்குள் புகுந் தால் நவமணிக் கடைகள் அமைந்த வீதியும், அறுவைக் கடை வீதியும், கூலங் குவித்த கூல வீதியும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களாகிய நால்வகை மக்களும் வாழும் நல்வீதிகளும், ஆவண வீதியும், பரத்தையர் வீதியும் அணியணியாக அமைந்திருக்தன. வீதிகளில் வேனிற்கால வெப்பினை யகற்றுவதற்காக வானளாவிய பந்தர்கள் போடப்பட்டிருந்தன. சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் ஆங்காங்கே காணப் பெற்றன.
நகருள்ளே சிவபிரான் திருக்கோவிலும், திருமால் கோவிலும், பலராமன் கோவிலும், முருகன் கோவிலும், இந்திரன் கோவிலும் இருந்தன. இன்றுள்ள அங்கயற் கண்ணி திருக்கோவிலும் கூடலழகர் திருக்கோவிலும் அன்று விளங்கினவல்ல. அவை பிற்காலம் தோன்றி யவை. இங்கே காமனுக்குத் திருவிழா நடந்தது.
பரஞ்சோதியார் காட்டும் மதுரை
தமிழகத்தின் பழமையான சமயமாகிய சைவத் தின் தெய்வ மாண்பைத் தெரிக்கும் புராணங்கள் பல். அவற்றுள் தலையாய புராணங்கள் மூன்று. அவை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்பன. திருவிளையாடற் புராணத்தைச் சிவபெருமானின் இடக்கண் என்று சைவர் போற் றுவர். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் அங்ககரில் அறுபத்து நான்கு அருள் விளையாட்டுக்கள் செய்தருளினான். அச் செய்திகளைக் கற்பனை கலங்கள் கனியுமாறும், பத்திச்சுவை பெருகுமாறும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் என்னும் அருள் நூலாக ஆக்கித் தந்தார். அந் நூலிற் போற்றப்படும் நாடும் நகரமும் முறையே பாண்டிய நாடும் பழந்தமிழ் மதுரையுமே யாகும். அவர் காட்டும் மதுரையை நோக்குவோம்.
ஒரு காலத்தில் மதுரையும் அதனைச் சூழ்ந்த பகுதியும் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தன. அக் காட்டின் கீழைப்பகுதியில் மணவூர் என்னும் ஊர் அமைந்திருந்தது. அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகரன் என்னும் மன்னன் பாண்டிய காட்டை ஆண்டுவந்தான். அவன் காலத்தில் மணவூரில் தனஞ்சயன் என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்தான், அவன் ஒருநாள் வாணிகத்தின் பொருட்டு வேற்றுார்ச் சென்று, கடப்பங்காட்டு வழியே திரும்பிக் கொண்டிருந்தான். நடுவழியில் இருள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் அக் காட்டின் நடுவே ஓரிடத்தில் தங்கினன். அவன் தங்கிய இடத்தில் பொங்கொளி வீசிப் பொற்புடன் விளங்கிய விமானம் ஒன்றைக் கண்டான். அவ் விமானம் எட்டு யானைகளால் தாங்கப்பெற்று ஞாயிறு போன்று பேரொளி வீசியது. அதில் சிவலிங்கம் இருந்தது. அங்கு நள்ளிருளில் தேவர்கள் பலர் வந்து சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டனர். அதைக் கண்ட தனஞ்சயன் தானும் விமானத்தை நெருங்கிச் சிவலிங்கப் பெருமான வழிபட்டு மகிழ்ந்தான். பொழுது புலர்ந்ததும் அங்கு வழி பட்ட வானவரைக் காணுது வியந்தான். மீண்டும் இந்திர விமானத்தில் எழுந்தருளிய பெருமானைப் பணிந்து ஊரை அடைந்தான்.
மணவூரை அடைந்த வணிகனாகிய தனஞ்சயன் தான்கண்ட அதிசயத்தைப் பாண்டிய மன்னனிடம் சென்று தெரிவித்தான். அவன் கடம்பவனத்தில் கண்ட காட்சிகளையெல்லாம் தெளிவுற விளக்கினான். அவற்றைக் கேட்ட குலசேகரன் வியப்புடன் இறைவன் அருள் உள்ளத்தை எண்ணி மகிழ்ந்தான். அக்காட்சி களைப் பற்றிய உண்மையை, உணரமுடியாது வருக்தினான். அன்றிரவே இறைவன், பாண்டியன் கனவில் தோன்றிக் கடம்பவனத்தை அழித்துக் கடிநகர் அமைக்குமாறு பணித்தருளினான்.
மறுநாட் காலையில் மன்னன் அமைச்சர்களையும் சான்றோர்களையும் அழைத்துக் கனவில் கண்ட செய்தியையும் வணிகன் உரைத்த செய்தியையும் தெரிவித்தான். எல்லோரும் கடம்பவனத்தை அடைந்தனர். அரசன் ஆங்கிருந்த பொற்றாமரைத் திருக்குளத்தில் நீராடினன். இந்திர விமானத்தில் வீற்றிருந்த சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து இறைஞ்சினான் ; ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். அந்த இடத்தில் திருக்கோவிலே அமைக்குமாறும், சுற்றியுள்ள காட்டை யழித்து நகரைக் காணுமாறும் அமைச்சர்க்கு ஆணையிட்டான். அமைச்சர் கோவிலும் நகரும் அமைக்கத் தொழில் வல்லாரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தனர். காடுகள் அழிக்கப்பட்டதும் இறைவனே சித்தர் வடிவில் தோன்றிக் கோவிலும் நகரும் அமைக்கும் வகையினே ஆகம முறைப்படி வகுத்துக் காட்டி மறைந்தான்.
சித்தர் வகுத்தருளிய முறைப்படியே சிற்பநூல் வல்லார்கள் கோவிலும் நகரும் அமைத்தனர். திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடனும் கோபுரங்களுடனும் அமைத்தனர். நகரத்தை அணிசெய்ய விரும்பிய பாண்டியன் கடைத்தெருக்கள், அம்பலங்கள், காற்சந்திகள், மன்றங்கள், செய்குன்றுகள், மடங்கள், நாடக அரங்குகள், அந்தணர் தெருக்கள், அரசர் தெருக்கள், வணிகர் தெருக்கள், வேளாளர் தெருக்கள், யானைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், குதிரை இலாயங்கள், கல்விக்கூடங்கள், குளங்கள், கிணறுகள், கந்தவனங்கள், பூங்காக்கள், உய்யான வனங்கள் முதலியவற்றை அழகுற அமைத்தான்.
இவ்விதம் அமைத்த புதிய நகரின் வடகீழ்த் திசையில் மன்னன் மாளிகை விளங்கியது. மன்னன் புதிய நகருக்குச் சாந்தி செய்ய எண்ணினன். அப்போது இறைவன் தன் சடையிலிருந்த பிறைமதியின் புத்தமுதை நகர் முழுதும் சிந்துமாறு அருள்புரிந்தான். அது நகரை அமுத மயமாக்கியது. மதுரமான அமுதத்தால் தூய்மை செய்யப்பெற்ற நகரம் மதுரையெனப் பெயர்பெற்றது. இவ்வாறு பரஞ்சோதி முனிவர் மதுரைமாககர் தோன்றிய வரலாற்றைத் தம் புராண நூலில் புகன்றுள்ளார்.