என் பார்வையில் கலைஞர்/ஏகலைவன் - கலைஞர் - அர்ச்சுனன்
கலைஞர்
அர்ச்சுனன்
1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.
வள்ளலார் வளாகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று நான் முன்பு முதல்வர் கலைஞரிடம் கொடுத்த குறிப்பு சரியாக செயல்படுத்த படவில்லை என்று கருதினேன். அரசு இதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வள்ளலார் மக்கள் நேயப் பேரவை என்ற அமைப்பை துவக்கினோம். வள்ளலாரை சைவச் சிறையில் இருந்து மீட்டி, அவரை தமிழ் வழிபாட்டாளராக, சாதிய மறுப்பாளராக, தமிழ்ச்சித்தராக மக்களிடையே, மக்கள் மொழியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் பேரவையின் நோக்கம்.
தோழர் செந்தில்நாதன் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தூண்டியவர். இந்த அமைப்பிற்கு நான் தலைவராகவும், மணிவாசகர் நூலக உரிமையாளர் பேராசிரியர் சா. மெய்யப்பன், முனைவர் இளவரசு துணைத் தலைவர்களாகவும், சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் பொருளாளராகவும் நியமிக்கப் பட்டோம். புலவர் கீதா பச்சையப்பன், முகம். மாமணி ஆகியோர் இதன் செயலாளர்கள். எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், தீக்கதிர் பொறுப்பாசியர் சு. பொ. அகத்தியலிங்கம், இளங்கவிஞர் இரா.தெ.முத்து ஆகியோர் இந்த அமைப்பில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இந்த அமைப்பு உருவாகியிருப்பதும் இதன் நோக்கம் பற்றியும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான போது நாடெங்கிலும் இருந்த பல்வேறு வள்ளலார் அமைப்புகள் எங்களுடன் தொடர்பு கொண்டன. இது நாங்கள் எதிர்பாராதது.
எனவே, கலைஞரை வைத்து இந்த பேரவையைத் துவக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். இதற்கான தேதியை கலைஞரிடம் இருந்து பெற்றுக் கொள்வது என்னுடைய பொறுப்பாயிற்று. மீண்டும் சண்முகநாதன் அவர்களோடு தொடர்பு கொண்டேன். அவரோ ‘தலைவர் ரொம்ப பிசியாயிருக்கார். இப்ப வாரது கஷ்டந்தான். எதற்கும் சொல்லிப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். விரைவில் வரவிற்கும் நாடாளுமன்றத் தேர்தல்களையும், தேர்தல் பிரச்சாரத்தையும் மனதிற்கொண்டு அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். நான், மேற்கொண்டும் சண்முகநாதன் அவர்களை காலை ஆறுமணிக்கே தொல்லைபடுத்த விரும்பவில்லை.
திராவிட இயக்கத்தின் கருவறைப் பத்திரிகையாக, அண்ணாவை ஆசிரியராக கொண்டு இயங்கிய நம் நாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியவரும், கொள்கை பிடிப்பிலிருந்து மாறாதவருமான கவிக்கொண்டல் மா. செங்குவட்டுவன் அவர்களை அணுகினேன். அவர் அறிவாலயத்தில் உள்ள ஆயிரம் விளக்கு உஷேன் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார். கோபலபுரத்தில் பேச முடியாத கலைஞருடன், அறிவாலயத்தில் பேசவேண்டும் என்பதை அவரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிட்டேன். அவரும் காத்திருக்கும்படி சொன்னார்.
கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்து, தனது அறையை நோக்கி நடந்தபோது, அத்தனை பேரும் கட்டுப்பாடாக வரிசையாக நின்றார்கள். ஒருவர் குறுக்கே நின்ற என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னார். நானும் அப்படியே நின்றேன். என்னுடைய நோக்கம், கலைஞருக்கு அங்கேயே என் வருகையை தெரிவித்து விட வேண்டும் என்பது. வரிசைக்குள் சிக்கியதால் இந்த நோக்கம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை. ஆனாலும், கலைஞர் என்னைப் பார்த்து விட்டார். அரை நிமிடம் நின்று ‘அடடே சமுத்திரமா! ஏது இந்தப் பக்கம் என்றார். உடனே, நோக்கத்தைச் சொல்லிவிட்டால் கலைஞர் அங்கேயே அனுப்பி விடுவார் என்று நினைத்து ஒரு விஷயமா உங்களைப் பார்க்கணும்’ என்று பொத்தம் பொதுவாக சொன்னேன்.
கலைஞர், தனது அறைக்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களில் முதலில் என்னைத்தான் அழைத்தார். நான், பேரவையை கலைஞர் துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த விவரத்தை சண்முகநாதன் தனக்கு தெரிவித்து இருப்பதை குறிப்பால் உணர்த்தியபடியே ‘உங்களுக்கே தெரியும் எனக்கு ஓய்வில்லாத வேலை... என்னால இயலாதே சமுத்திரம்’ என்றார். உடனே, நான் ‘சார் உங்கள் நான் எனக்காக எப்பவும் எதுக்காகவும் வற்புறுத்தல.. என்ற பீடிகையோடு மேற்கொண்டு பேசப்போனேன். உடனே கலைஞர் இடைமறித்து அதனாலதான் நான் சொல்றேன். இப்பவும் வற்புறுத்தாதீங்க..’ என்றார்.
நான் இந்த பேரவையை அவர் நிச்சயம் துவக்கி வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு குழந்தையின் விடாபிடித்தனத்தோடு முரண்டு பிடித்தேன். கலைஞரும் மசிந்து விட்டார். தென் மாவட்டங்களில் தனது சுற்றுப் பயணம் முடிந்த பிறகு சண்முகநாதனை அணுகும்படி என்னிடம் தெரிவித்தார். வெளியே தலைவர்கள் தொண்டர்கள் என்று பலர் காத்திருந்ததால் நான் கலைஞருக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு வெளியேறினேன்.
கலைஞரின் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடிந்ததும் சண்முகநாதன் மூலமாக கலைஞரை சந்திப்பதற்கு நேரம் வாங்கிக் கொண்டேன். கலைஞரை மாடியில் சந்தித்தேன். கலைஞர் வழக்கம் போல் தெம்பாகத் தான் இருந்தார். ஆனாலும், அவர் தோரணை உள்முகமாகவே இருந்தது. என்னை அன்புடன் வரவேற்றார். சன் தொலைக்காட்சியில் வீரபாண்டியன் நடத்திய நேர்காணலில், பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தவன் நான். பாரதீய ஜனதாவுடன் அவர் மேற்கொண்டிருக்கும் புதிய கூட்டணி எனக்கு பிடிக்காது என்று அவர் நினைத்திருக்கலாம். கூடவே, கலைஞர் சேராத இடத்தில் சேர்ந்து விட்டார் என்று தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா, இந்த பிஜேபி அணியோடு சேர்ந்து இருந்தபோது ஒப்புக்குக் கூட விமர்சிக்காமல் வாய் மூடிக் கிடந்த வீரமணி அவர்களுக்கும் இந்த புதிய உறவு அவலாகிவிட்டது. நான் எடுத்த எடுப்பிலேயே இந்த விதமாக பேசினேன் என்று நினைக்கிறேன்.
‘சார்..! நீங்க பிஜேபியோட உறவு வைத்திருப்பது ஒரு அரசியல் நடவடிக்கைதான். சமூக நடவடிக்கை இல்லை என்பது என்னை மாதிரி உள்ளவர்களுக்கு தெரியும். இதன் மூலம், தமிழகத்திலாவது மதவாதம் பரவாமல் நீங்கள் தடுக்க முடியும் . என்று நினைக்கிறோம். தம்பி ஸ்டாலின் சிறையில் கொடுமைப் படுத்தப் பட்ட போது கூட விருப்பு வெறுப்புகளை மீறி கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காவும் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்துக் கொண்டவர் நீங்கள். ஆகையால், இந்த கூட்டணி ஒரு பெரிய விவகாரமாகாது. நீங்களும் ஏதாவது ஒரு தேசிய கட்சியை சார்ந்திருக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களுக்கு புரியும்.’
கலைஞரின் புதிய கூட்டணியை கண்டு பலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கலைஞர் மீது மெய்யான அன்பு வைத்திருப்பவர்களுக்கும் இது அதிர்ச்சி தான். தத்துவார்த்தக் கட்சிகளும், மேற்கு வங்க ஜோதிபாசு போர் குரல் கொடுக்க வில்லையா என்று மேடைகளில் வினவுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் மித்ர பேதம் கிடையாது. ஜோதிபாசு நீக்கப்பட்டால் அவர் முன்னிலும் வலுவாக வருவார். ஆனால், தமிழகத்தின் நிலைமை வேறு.
திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி மண்வாசனை இல்லாத தலைமையில் சிக்கியிருக்கிறது. இந்த தலைமை எந்த பழிபாவத்திற்கும் அஞ்சாதது. இதனை அதன் போக்கில் விட்டால், தமிழனும் கவலைப்பட மாட்டான். அந்த அளவிற்கு மனோ நோயாளியாகிப் போனவன் தமிழன். ஒருவேளை கலைஞர் மாற்று அணியில் சேர்ந்து, இதனால் சொந்த முறையிலும், அரசு முறையிலும் பாதிக்கப் பட்டால் இதே தமிழன் கலைஞருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்வான். இவனை நம்பி களத்தில் இறங்க முடியாது. ஆகையால், கலைஞர் எடுத்த முடிவு எனக்கு சரியாகவே பட்டது. எந்த அரசியல் தலைவரும், பிறா் பாராட்ட வேண்டும் என்பதற்காக தற்கொலை முடிவு எடுக்க முடியாது.
கலைஞரின் முகத்தில் ஒரு நன்றி மகிழ்ச்சி ஏற்பட்டதுபோல் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன். இப்படி நினைக்கும் உரிமை நான் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் எனக்கு அது உண்டு என்று நம்புகிறேன். கலைஞரும் மனம் திறந்து என்னிடம் பல்வேறு விவகாரங்களை எடுத்துரைத்தார். இவற்றில் ஒரு சில அந்தரங்கமானவை. அவரது சகாக்களோடு கூட பகிர்ந்து கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அவர் முழுமையாக பகிர்ந்து கொண்டது போல் தோன்றியது. என்னை நம்பிக்கைகுரிய, அதே சமயம் சந்தா செலுத்தாத கழகக் கண்மணியாக ஏற்றுக் கொண்டதில் ஆனந்தம் அடைந்தேன். வள்ளலார் பேரவையை துவக்கி வைப்பதற்கு ஜூலை மாதம் ஏழாம் தேதி மாலை நேரத்தை ஒதுக்கித் தந்தார் கலைஞர். பேச்சாளர் பட்டியலைப் பற்றி அப்போதும் அவர் என்னிடம் கேட்கவில்லை.
வள்ளலார் விரித்த கடைக்கு கொள்வாரை அழைக்கிறார் கலைஞர் என்ற முத்திரையோடு அழைப்பிதழும், சுவரொட்டிகளும் தயாரிக்கப்பட்டன. நான் ஜூலை மாத முதல் வாக்கில் கலைஞருக்கு அழைப்பிதழ் எடுத்துச் சென்றேன். ஏற்கெனவே கலைஞரை பார்த்து தேதி வாங்கி விட்ட நான் அவரை அடிக்கடி தனியாகச் சந்தித்து அவரது நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில், வரவேற்பு அறையிலேயே கலைஞருக்காக காத்து நின்றேன். என்னை விட பலமடங்கு சர்வவல்லமை உள்ள பார்வையாளர்கள், முன் அனுமதி பெற்று, கலைஞரை மாடியில் ஏறி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவரையும் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் கலைஞர் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், எனக்கோ குறைந்தது பத்து நிமிடமாவது ஒதுக்கியவர். நேரமாகிவிட்டாலும் அவர் வாயில் இருந்து புறப்படுங்கள் என்ற வார்த்தை வராது.
கலைஞரும் காலை பத்து மணியளவில் படியிறங்கினார். நான் அங்கே நிற்பேன் என்று அவர் எதிர்பார்க்க வில்லை. அழைப்பிதழோடு வந்திருப்பேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்காது. ‘வாங்க அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா.’ என்றார். நான் ஒன்றும் புரியாமல் விழித்தபோது ‘நீங்க தினமணி கதிரில் தலைப்பிரசவத்தில் எழுதிய கட்டுரையைத் தான் சொல்கிறேன். நல்லா இருந்தது’ என்று தாளலயமாய் தலையாட்டி பாராட்டினார்.
நான் புல்லரித்துப் போனேன். சக படைப்பாளிகள் பிறபடைப்புகளை படிப்பதில்லை. ஒரு பிரபல எழுத்தாளர், தான் எவரது படைப்பையும் படிப்பதில்லை என்று மார்தட்டிக் கொள்வார். இந்தப் பின்னணியில் முதல்வர், கட்சித் தலைவர், குடும்பத் தலைவர், இலக்கியவாதி என்று பல்வேறு சுமைகளை சுவையாக தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒரு சாதாரண சமுத்திரத்தின் கட்டுரை முழுவதையும் படித்து விட்டு அதை அந்த சமுத்திரத்திடமே சொல்வது என்பது உலக அதிசயங்களில் எட்டாவது. இவ்வளவுக்கும், அங்கே ‘கல்யாணம் இங்கே கலாட்டா’ என்ற எனது முதல் சிறுகதையின் தலைப்பை அந்தக் கட்டுரையில் தேடிப் பிடித்துத்தான் பார்க்க வேண்டும். கலைஞர் தேடிப் பிடித்து பார்த்திருக்கிறார்.
கலைஞரிடம் அழைப்பிதழை கொடுத்து விட்டு, அந்தச் சந்திப்பு போதையில் இருந்து மீளமுடியாமல் வீட்டிற்கு திரும்பினேன். உடனடியாக தினமணிக்கதிர் பொறுப்பாசிரியர் இளையபெருமாளிடம், கலைஞர் எனது கட்டுரையை பாராட்டியதை எடுத்துரைத்தேன். பிறகு ‘கலைஞர் இலக்கியவாதி என்ற முறையில் ஒரு குழந்தை. அவரது தலைப்பிரசவத்தையும் கேட்டு வாங்கி தினமணிக் கதிரில் பிரசுரிக்க வேண்டும்’ என்றேன். முற்போக்கு இளைஞரான இளையபெருமாளும் இந்த தலைப்பிரசவத்தில் எழுத்தாளர் சீனியாரிட்டி இல்லாமல் கலவையாக வருவதால், கலைஞரின் கட்டுரையையும் வாங்கிப் போட்டுகதிரைப் பெருமைப் படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆனாலும், கலைஞரின் கட்டுரை இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை கலைஞரிடம் வாங்கி அந்தத் தொடரை அவரது கட்டுரையை வைத்து முத்தாய்ப்பாக முடிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. இதைக் கலைஞரிடம் கேட்பது அற்பம். தினமணிக் கதிருக்கு மீண்டும் நினைவுப் படுத்துவது அசிங்கம்.
எந்தவித மின்னணு ஊடகங்களும் இல்லாமலே லட்சோபலட்சம் மக்களை அண்ணல் காந்தி கவர்ந்தது போல், லட்சோப லட்ச இலக்கிய ஆர்வலர்களை சாகித்திய அக்காதெமியின் ஆதரவு இல்லாமலே பெற்றிருப்பவர் கலைஞர். அப்படிப்பட்ட இலக்கிய மேதை என் கட்டுரையை படித்ததும் என்னை மேலும் வலுவாக எழுத ஊக்குவிக்கிறது. கூடவே, சகப் படைப்பாளிகளின் படைப்புகளை புறந்தள்ளாமல் படிக்க வேண்டும் என்ற உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
வள்ளலார் மக்கள் நேயப் பேரவையை கலைஞர் 11.7.99 அன்று மாலையில் கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார். நான் விழாவிற்கு தலைமை வகித்தேன். வள்ளலார் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருட்தந்தை டாக்டர். தி.தயானந்தன் பிரான்ஸிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வள்ளலாரியத்தில் ஒன்றிப் போன பழ.சண்முகனார், ஊரன் அடிகள், பேராசிரியர் மெய்யப்பன், தமிழ் வேள்வி சத்தியவேல் முருகன் போன்ற ஆன்மிக வித்தகர்களும், முனைவர் இரா. இளவரசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன், ச. செந்தில்நாதன், முகம். மாமணி, கி.த. பச்சையப்பன் போன்ற நாத்திகர்களும், நயம்பட கலந்து கொண்டார்கள். சென்னை தொலைகாட்சியின் முன்னாள் இயக்குநர் ஏநடராசன் அவர்களும், கவிஞர் சிற்பி அவர்களும் பங்கேற்றார்கள். குங்கிலி யம் பழசண்முகனார் வள்ளலார்மயமாக ஆனவர். அந்தப் பெரியவர் சாதிய மறுப்பாக அமைக்கப்பட்டு வரும் சமத்துவபுரத்தை சுட்டிக்காட்டி, கலைஞருக்கு சமத்துவபுர தோன்றல் என்று, பலத்த ஆரவாரத்திற்கிடையே பட்டமளித்தார்.
நான், எனது தலைமை உரையில் வானளாவிய அதிகாரம் - கொண்ட முன்னாள் பேரவைத் தலைவர் ஒருவர் போல நடந்து கொண்டதற்காக இப்போது வருந்துகிறேன். பேசுகிற ஒவ்வொருவரையும், காலங்கருதி முடிக்கும்படி தெரிவித்தேன். இப்போதைய தொலைக்காட்சிப் பாணியில் குறைந்த நேரத்தில் பேசி முடிக்கிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டேன். கலைஞர் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவரது நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் அப்படிக் குறிப்பிட்டேன். ஆனாலும் கலைஞர் என்னைப் பார்த்து ‘ஏன் அவசரப்படுத்துறிங்க’ என்று மென்மையாக கடிந்து கொண்டார்.
அனைத்து பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு, நான் எனது முடிவுரையில் வள்ளலாரை தமிழர் நலன் கருதி மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கினேன். ஏதலைவன் தன்னை விட வீரனாகிவிடுவான் என்று பொறாமைப்பட்ட அர்ச்சுனனின் தூண்டுதலால் அந்த மலைச்சிறுவனின் கட்டை விரலை வெட்டி கொடுமையை எடுத்துரைத்தேன். இந்த நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு அர்ச்சுனா விருதுகளும், நல்லாசிரியர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகளும் கொடுக்கப்படுவது அசல் மோசடி என்றேன். ஏகலைவனான வள்ளலாரை, கட்டை விரலை வெட்டக் குடுக்காத இன்னொரு ஏகலைவனான கலைஞர்தான் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
கலைஞர் பேச எழுந்தார். ‘சமுத்திரத்தைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்’ என்று எடுத்த எடுப்பிலேயே பீடிகை போட்டார். செல்லக் குட்டு வைக்கப் போகிறார் என்பது கூட்டத்திற்கும் எனக்கும் புரிந்தது. அவர் என்னைப் பற்றி எப்படி அவதான்ித்து இருக்கிறார் என்பதை அறிவதில் எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு. கூடவே, குட்டு பலமாக இருந்துவிடக் கூடாதே என்கிற பயம், இருக்காது என்கிற நம்பிக்கை. ஆனாலும் கலைஞர் அப்படி பேசப் போவதை தொடரவில்லை.
எடுத்த எடுப்பிலேயே சூடான அரசியலில் இருந்து தன்னை இங்கு கொண்டுவந்து அறிஞர்களின் பேச்சு மழையில் நனையை வைத்த எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சட்டம் தமிழ் சிந்தனையாளர்களாலும், வெளியூரில் இருந்து திரண்ட வள்ளலார் நேயர்களாலும் நிரம்பி இருப்பதை புரிந்துக் கொண்டார். பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் அமைதியாக இருக்கும் போது, காலில் பிறந்தவனும், பாதத்தில் பிறந்தவனும் மோதிக் கொள்கிறார்களே என்று வருத்தம் தெரிவித்தார். இந்த பின்னணியில் வள்ளலாரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே வள்ளலாரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
கலைஞர் மேலும் பேசுகையில், அர்ச்சுனன் மரத்தில் இருந்த கிளியை மட்டுமே பார்த்தது போல, நாமும் நமது குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். சில வள்ளலார் பிரியர்களுக்கு, இது வருத்தத்தை அளித்தது. நான் ஏகலைவனைப் பற்றிச் சொல்லும் போது அவரோ அவனைப் பழிவாங்கிய அர்ச்சுனனைப் பற்றி குறிப்பிடுகிறார் என்று பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால், நோக்கம் இதுவல்ல. ஏகலைவனும், அன்று அர்ச்சுனனைப் போல் வில்வித்தையில் மட்டுமே குறியாக இருந்திருந்தால் அவன் கட்டை விரலை எந்த ஆச்சாரியாரும் எடுத்திருக்க முடியாது என்ற பொருளிலேதான் கலைஞர் கோடி காட்டினார். வீண் ஆராவாரங்களிலும், சாதிய சண்டைகளிலும் மூழ்கிப் போகாமல் பிரம்மனின் காலில் பிறந்தவர்களும், பாதத்தில் பிறந்தவர்களும் முகத்தில் பிறந்தவர்களுக்கு இணையாக குறிக்கோளில் குறி தவறாது நிற்க வேண்டும் என்பதையே கலைஞர் எடுத்துரைத்தார். கூட்டமும் அறிஞர் பெருமக்களால் நிரம்பப் பட்டதால் இதை விளக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. விலாவாரியாக விளக்குவதற்கு அவர் சாதாரணமானவரும் அல்ல. தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் பொதுமைப்படுத்தி நடக்க வேண்டியவர்.
என்றாலும், கூட்டம் முடிந்ததும் எனக்கு செம டோஸ். குறிப்பாக தோழர் செந்தில்நாதன், என்னை கடுமையாக விமர்சித்தார். எனது தலைமையுரையில் வள்ளலார் வளாகத்தில் இன்னென்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லத் தவறிவிட்டேன். அதனால் தான் கலைஞரும் பேரவையின் கோரிக்கைகைகளைப் பற்றி குறிப்பிடவில்லை என்றார். உடனே நான் எழுத்து மூலமாக கலைஞரிடம் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தை நினைவுபடுத்தி மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பவில்லை என்றேன். அதற்கு தோழர் செந்தில்நாதன் இதர உறுப்பினர்களின் மவுன சம்மதத்தோடு ‘நீங்கள் இந்த கோரிக்கையை கூட்டத்தின் முன் வைத்திருக்க வேண்டும். அவர்களும் ஆரவாரம் செய்திருப்பார்கள். கலைஞரும் மக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர். நமது கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றிருப்பார். நீங்கள் ரகசியமாக கொடுத்தது ரகசியமாகவே போய்விட்டது’ என்று விளக்கினார்.
எனக்கும் என்னவோ போல் இருந்தது. கலைஞர் முன்னிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் இன்னும் என்னுள் உள்ளது. அதே சமயத்தில் கலைஞர் சுயமாக சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கலாமே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. வள்ளலார் அன்பர்கள் சிலர் கலைஞரை சொல்லிக் குற்றமில்லை திருவருள் இன்னும் கைகூட வில்லை மேலும் மேலும் வள்ளலாரை முன்னிலப்படுத்திய பிறகே, அந்த வளாகம் மேன்பட வேண்டும் என்று இருக்கிறதோ என்னவோ என்றார்கள்.