நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிக்கு ஏற்பட்ட பயம்
அப்பாஸ் அவர்கள் இருளில் கூப்பிட்டதும், அபூ ஸுப்யான், அவர்களிடம் வந்தார்.
அவரிடம், “அடுப்பிலிருந்து வெளி வரும் நெருப்பின் ஒளியே உம்மைக் கலக்கம் அடையச் செய்திருக்கும். இதிலிருந்து முஸ்லிம் சேனையின் பலத்தையும், எண்ணிக்கையையும் நீர் அறிந்து கொண்டிருப்பீர். இவ்வளவு பெரிய சேனையைக் குறைஷிகள் எதிர்ப்பதில் பலன் உண்டா? ஆகையால், என்னோடு என் சகோதரர் குமாரரிடம் நீர் வந்தால், உம்மை மன்னித்து விடுமாறு நான் கூறுவேன்” என்றார்கள் அப்பாஸ் அவர்கள்.
அபூ ஸுப்யான் சிந்திக்கத் தொடங்கினார்.
முஸ்லிம்களிடம் கொண்ட பகைமையும், அவர்களை நசுக்கி விடப் பலமுறை படையெடுத்துச் சென்றதையும், அவர்களுக்கு எதிராகப் பலரைத் தூண்டி விட்டதையும் தாம் செய்த சூழ்ச்சிகளையும், அபூ ஸுப்யான் எண்ணிப் பார்த்தார். ஒவ்வொரு செயலும் அவர் கண் முன்னே தோன்றின. முஸ்லிம்கள் தம்மைக் கொன்று, பழி தீர்க்கப் போதுமான ஆதாரங்கள் அவர்களிடம் இருந்தன. அவை வேறு, அவரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
பெருமானார் அவர்களின் கருணை உள்ளம் அபூ ஸுப்யானுக்குத் தெரியும். அதலால், இந்த அரிய சந்தர்ப்பத்தைக் கை நழுவ விடக் கூடாது என்று தீர்மானித்து, அப்பாஸ் அவர்களுடன் பெருமானார் அவர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்குச் சென்றார்.