நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வரவிடாமல் தடுத்தார்கள்
பெருமானார் அவர்கள், தாயிப் வாசிகளின் துன்புறுத்தலைச் சகித்துக் கொண்டு, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு, வழியில் இரண்டு சிற்றுார்களில் சில நாட்கள் தங்கினார்கள்,
தாயிப் வாசிகள் பெருமானார் அவர்களைத் துன்புறுத்தி அனுப்பியதை அறிந்த மக்கா குறைஷிகள் குதூகலித்தனர்.
பெருமானார் அவர்கள் மக்காவுக்குத் திரும்பி வந்தாலும், அவ்வாறே நிர்ப்பந்தித்து அவர்களைத் திருப்பி அனுப்பி விடத் தயாரானார்கள் குறைஷிகள்.
மக்காவுக்கு வருமுன் பெருமானார் அவர்கள், குறைஷிகளின் நோக்கத்தைத் தெரிந்து கொண்டார்கள். ஆகையால், இந்த நிலைமையில் மக்காவுக்குள் போகக் கூடாது எனக் கருதி, ஊருக்கு வெளியே இருந்து கொண்டு மக்கா வாசிகளுக்குத் தூது அனுப்பினார்கள்.
அதாவது: இஸ்லாத்தில் சேருமாறு குறைஷிகளைக் கட்டாயப்படுத்துவது இல்லை என்றும், வேத வாக்கியங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு இடம் தர வேண்டும் என்றும் தூதில் சொல்லி அனுப்பினார்கள்.
ஆனால் குறைஷிகளோ எக்காரணத்தினாலும் ஆதரவு அளிக்க இயலாது என மறுத்து விட்டனர். அப்பொழுது, முத்யிம் இப்னு அதி என்பவர் சமூக உணர்ச்சியினாலும், தம் நாட்டினர் என்ற அனுதாபத்தினாலும் பெருமானார் அவர்களுக்கு உதவி புரிய முன் வந்தார். அவர் குறைஷிகளை நோக்கி,
“எம் நாட்டவர்களே! நம்முடைய தேசமானது நாட்டுப் பற்றுக்கும், அன்னியர்களுக்கு அளிக்கும் உபசாரத்துக்கும் பல பகுதிகளிலும் பிரசித்தி பெற்றிருக்கிறது. அப்படியிருக்கும் போது, உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய சகோதரர் ஒருவரை, இவ்வாறு இரக்கம் இல்லாமல் நீங்கள் நடத்துவதும், தம் சொந்த வீட்டுக்கு வர விடாமல் அவரைத் தடுப்பதும் பெருந்தன்மை ஆகுமா?” என்று கூறினார்.
உடனே முத்யிம் ஓர் ஒட்டகத்தில் ஏறிக் கொண்டு, தம்மைச் சேர்ந்தவர்களை ஆயுதபாணிகளாகக் கூட்டிக் கொண்டு, பெருமானார் அவர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களை அழைத்து வந்தார்.
பெருமானார் அவர்கள் வெளியே போகும் இடங்களுக்கெல்லாம், முத்யிமும் கூடவே சென்று வருவார்.
ஒருநாள் பெருமானார் அவர்கள், மக்களுக்குப் போதனை செய்து விட்டு முத்யிமுடன் திரும்பி வரும் போது குறைஷிகள், பெருமானார் அவர்களை நிந்தனை செய்ததோடு, முத்யிமையும் அவதூறாகப் பேசினார்கள்.
தமக்கு உதவி புரிபவர் இவ்வாறு நிந்தனைக்கு ஆளாவதைக் காணப் பெருமானார் அவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. தங்களோடு வருவதனாலேயே அவருக்கும் அவமரியாதை ஏற்படுகிறது என்று எண்ணி, மறுநாளிலிருந்து தாங்கள் மட்டுமே வெளியே புறப்பட்டார்கள்.
அறிவுரை கூறத் தொடங்கிய போது மக்கள் வந்து கூடினார்கள். அவர்களைப் பார்த்து முதலாவதாக, “சகோதரர்களே! நான் இப்பொழுது முத்யிம் அவர்களின் ஆதரவில் இல்லை. என்னுடைய நாயகனே எனக்குப் புகலிடம். அவனுடைய உதவியும், மேற்பார்வையும் எனக்குப் போதுமானவை. ஆகையால் இனி முத்யிமை நிந்திக்க வேண்டாம்” என்று கூறினார்கள். அன்றிலிருந்து பெருமானார் அவர்கள் இன்னல்களைப் பொருட்படுத்தாமல், இரவும், பகலும் தனியாகவே இஸ்லாத்தைப் பரப்புவதிலே கவனம் செலுத்தலானார்கள்.
அவர்கள் போதனை செய்யும் போது, அந்தச் சொற்கள் மக்களுக்குக் கேட்காதவாறு, குறைஷிகள் சுற்றி நின்று கொண்டு கூச்சல் போடுவார்கள்.
சுற்றுப்புறங்களிலிருந்து புதிதாக யாரேனும் மக்காவுக்கு வந்தால், பெருமானார் அவர்களின் போதனையைக் கேட்க வேண்டாம் என்று குறைஷிகள் முன்னரே சொல்லித் தடுத்து விடுவார்கள்.