சேரமன்னர் வரலாறு/19. சேரமான் கணைக்கால் இரும்பொறை

விக்கிமூலம் இலிருந்து

19. சேரமான் கணைக்கால் இரும்பொறை

சங்க காலத்து இரும்பொறை வேந்தருள் சேரமான் கணைக்கால் இரும்பொறையே இறுதியில் இருந்தவன். குட்ட நட்டின் தென்பகுதி, வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டது; வட பகுதியில் தொண்டிகர் சிறப்புற்று விளங்கிற்று. இச் சேரமான் பெரும்படையும் மிக்க போர் வன்மையும் உடையன்.

இவன் காலத்தே கொங்கு நாட்டில் மூவன் என்றொரு குறுநிலத் தலைவன் வாழ்ந்தான்; அவன், முன்பு ஒருகால், பெருந்தலைச் சாத்தனார் என்னும் சான்றோர்க்குப் பரிசில் கொடாது நீட்டித்து வருத்திய மூவன் வழியில் வந்தவனாவன். இந்த மூவன், சேரமான் கணைக்காலிரும் பொறையை ஒருகால் இகழ்ந்து அவனது பகைமையைத் தேடிக் கொண்டான். நா காவாது சேர வேந்தை வைது உரைத்த அவனை, இரும்பொறை, போரில் வென்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கித் தன் தொண்டி நகர்க் கோயில் வாயிற் கதவில் வைத்து இழைத்துக் கொண்டான். மத்தியென்பான் ஒரு காலத்தில் சோழ வேந்தனை வைதுரைத்த எழினி யென்பவனுடைய பல்லைப் பிடுங்கி வெண்மணி [1]’ யென்னும் நகரத்துக் கோயில் வாயிற் கதவில் வைத்து இழைத்துக் கொண்டதுண்டு[2]. ஆகவே, சேரமான் கணைக்காலிரும்பொறை மூவன் பல்லைப் பிடுங்கிக் கொண்டதில் வியப்பு ஒன்றும் கோடற்கில்லை. பண்டையோர் கொண்டிருந்த பகைத்திறச் செயல் வகையில் அதுவும் ஒன்று போலும்.

இந்த இரும்பொறை காலத்தில் சோழ நாட்டில் சோழன் செங்கணான் அரசு புரிந்து வந்தான். அவன் சிவபெருமான் பால் பேரன்புடையன். அவன் செய்த கோயில்கள் பல தமிழகத்தில் உள்ளன. திருஞான சம்பந்தர் முதலியோர் இச்செங்கணான் செய்த திருப்பணியைப் பாரட்டிப் பாடியிருக்கின்றனர். திருமங்கையாழ்வாரும் அவன் சிவபெருமானுக்கு செய்த திருப்பணியை வியந்து “இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோன் ஈசற்கு எழில்மாடம் எழுபது[3]” செய்தான் என்று சிறப்பித்துப் பாடியிருக் கின்றனர்.

இச்சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும் பொறைக்கும் எவ்வகையாலோ பகைமையுண்டாயிற்று. செங்கணான் பெரும்படையொன்று கொண்டு பாண்டி நாடு கடந்து குட்டநாட்டுக் கழுமலம் என்னும் ஊரை வளைத்துக் கொண்டு போர் உடற்றினான். சேரமான் கணைக்காலிரும்பொறையும் கடும்போர் உடற்றினான். போர் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் இரவு, இரும்பொறையின் பாசறையில் களிறொன்று மதங் கொண்டு, ஓய்ந்து உறங்கிக் கொண்டிருந்த சேரருடைய படைமறவர்க்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டது. அவர்களும் திடுக்கிட்டுச் செய்வகை அறியாது திகைப்புற்று அலமரத் தொடங்கினர். இச் செய்தி சேரமானுக்குத் தெரிந்ததும் அவன் சட்டெனப் போந்து மத களிற்றின் மத்தகத்திற் பாய்ந்து குத்தி அதனை அடக்கி வீறு கொண்டான். பின்னர் அனைவரும் “திரைதபு கடலின் இனிது கண்டுப்ப [4]” அமைத்தனர்.

இத்துணைப் பேராற்றல் படைத்த இரும்பொறை செங்கணானொடு செய்த போரில் வெற்றி பெறானாயினன்.

ஒரு களிறு மதம் பட்டமைக்குக் கையற்றுக் கலங்கிய சேரமான் படைஞர், மதகளிறு பலவற்றை ஒருங்கு அடக்கவல்ல மாண்புடையனான செங் கணானது படைக்கு எதிர் நிற்கமாட்டாரன்றோ ; அதனால் அவர்கள் சோழர் படைக்கு உடைந்து கெட்டனர். களிறும் தேரும் மாவுமாகிய பல்வகைப் படையும் வீழ்தொழிந்தன. சோழர் படையில் இருந்த மாவும் களிறும் உதைத்தலால் சேரர் தலைவர் ஏந்திய குடைகள் “ஆவுதை காளாம்பி போன்றன [5].” கடுங் காற்றால் அலைப்புண்ட போது காக்களில் வாழும் களிமயில்கள் வீற்று வீற்றோடுவது போலப் பல திசையிலும் கேள்வரைப் பிரிந்த மகளிர் புலம்பித் திரிந்தனர் [6]” குருதிப் புனல் பாய்ந்து நன்னீர் யாறுகள் பலவும் செந்நீர் யாறுகளாய் மாறின. முடிவில் செங்கணானும் சேரமானும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தே நேர் நின்று பொருதனர். இரும் பொறையைச் சோழன் கைப்பற்றிக் கால்யாப்பிட்டுக் கொணர்ந்து குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டு அரிய காவலும் அமைத்தான். திருப்போர்புறம் கேரள நாட்டில் இப்போது திருவார்ப்பென வழங்குகிறது.

சேர நாட்டுட் புகுந்து சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்ற வெற்றி காரணமாக அவன் அந் நாட்டில் முதற்கண் கைப்பற்றிய பகுதி செங்கணான் சேரி என்று பெயர் பெற்றது போலும். இப்போது அது செங்கணாசேரி என்ற வட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. பிற்காலத்தே முதல் இராசராசசோழன் சேரநாட்டு வள்ளுவ நாட்டிற்பெற்ற வெற்றி காரணமாக முட்டம் என்னும் ஊரின் பெயரை மாற்றி, மும்முடிச் சோழநல்லூர் எனத் தன் பெயரிட்ட செய்தியை[7]’ நோக்குமிடத்து, தான் வென்ற கழுமலத்துக்குச் செங்கணான் சேரியென்று தன் பெயரையே இட்டிருப்பான் என நினைத்தற்கு இடமுண்டு.

குட்ட நாட்டின் வடபகுதியில் குறும்பொறை நாடு வட்டத்திலுள்ள தொண்டி நகர்க்கண் பொய்கையார் என்றொரு நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். அவர் சேரமான்பால் பேரன்புடையர். இரும்பொறையைக் “கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்[8]” என்று சிறப்பித்தப் பாடியுள்ளார். சேரமான், சோழன் செங்கணானுக்குத் தோற்றுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிலுள்ளான் என்பது பொய்கையார்க்குத் தெரிந்தது. அவர் மனம் எய்திய துன்பத்துக்கு எல்லை கிடையாது. பண்டு கரிகாலனோடு நிகழ்ந்த போரில் புறப்புண்பட்டதற்கு நாணி வடக்கிருந்து உயிர் துறந்த சேரலாதன் வழித்தோன்றலாதலால், சேரமான் கணைக்காலிரும் பொறை என்னாவனோ என அஞ்சி அலமந்தார்; மிக விரைந்து சோழ நாடு அடைந்து செங்கணானைக் கண்டார்.

புலவர் பெருமான் வரவு கண்ட சோழன் மிக்க சிறப்புடன் வரவேற்று அவர் மனம் மகிழத் தகுவனவற்றைச் செய்தான். அவர், செங்ணான் சேர நாட்டுக் கழுமலத்திற் செய்த போரைச் சிறப்பித்துக் களவழி என்னும் நாற்பது பாட்டுக்கொண்ட நூலைச் செய்து சோழன் திருமுன் பாடினார். அமிழ்தம் பொழியும் அவரது தமிழ் நூல் வேந்தர் பெருமானுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அவன் அவர்க்குக் களிறும் மாவும் பொன்னும் பொருளும் பரிசிலாக நல்கினான். ஆனால் பொய்கையார் செங்கணானைத் தொழுது, “வேந்தே, பொன்னும் பொருளுமாகிய பரிசில் வேண்டி வந்தேனில்லை ; யான் வேண்டுவது வேறு பரிசில்; அரசு காவலின்றி அலமரும் சேர நாட்டுக்கு உரிய வேந்தனைப் பெறுதலினும் யாம் விழையும் பேறு வேறு இல்லை . மக்களுயிரின் இன்ப வாழ்வுக்கு நிலைக்களமாகிய நாட்டை மக்கள் தமது உயிரிழந்து வருந்தும் பிணக் களமாக்கும் வல்லரசு ஒழிதல் வேண்டும். அதற்கு ஆவன செய்வதே யாம் பெறும் பரிசில். இதனைக் கருப்பொருளாகக் கொண்டதே என்று இக் களவழி நூல்; அந்த நாட்டிற்கு உரியவனை அரசனாக்குவதே யான் வேண்டும் பரிசில்” என்றார். செங்கணான் பொய்கை யாரது புலமை நலம் கண்டு பேருவகை கொண்டு தன் அரசியற் சுற்றத்தாரை விடுத்துச் சேரமானைச் சிறை வீடு செய்து, மீள அவனைச் சேரமானாக்கி வருமாறு பணித்துப் பொய்கையாருக்கு மேலும் பல பரிசில் நல்கி விடுத்தான்.

செங்கணானது சிறை வீட்டாணை உறையூரி லிருந்து குடவாயிற் கோட்டம் சென்று சேருமுன், அங்கே வேறொரு செய்தி நிகழ்ந்தது. சிறையிலிருந்த சேரமான் சிறைக் காவலரைச் சிறிது நீர் கொணர்ந்து தருமாறு பணித்தான். அவர்கள் அவனது ஆணையை மதியாது சிறிது தாழ்த்துக் கொணர்ந்து தந்தனர். மானமிக்க வேந்தனாகிய சேரமானுக்கு அவரது செயல் பெருவருத்தத்தை யுண்டுபண்ணிற்று. அவன் நெஞ்சு சுழலத் தொடங்கிற்று; பற்பல எண்ணங்கள் தோன்றின. வீரமும் மானமும் வீறுகொண்டெழுந்தன; “குழவி இறப்பினும் ஊன் தடி பிறந்தாலும் இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி மறக்குடிப் பிறந்தார்கக்கு மாண்பு அன்று எனக் கருதி எம்மனோர் அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர். அவர் வயிற்றிற் பிறந்த யான் நாய் போற் பகைவர் சங்கிலியாற் கட்டுண்டு சிறையிற் கிடப்பது தீது; அதன் மேலும் தம்மை மதியாத பகைவர்பால் தமது வயிற்றுத் தீயைத் தணித்தற் பொருட்டு கண்ணீர் இரந்துண்ணுமாறு மக்களைப் பெறுவாரோ எம் பெற்றோர்? ஒருகாலும் பெறார்காண் என அஃதொரு பாட்டாய் வெளிவந்தது. அதனை ஓர் ஓலை நறுக்கில் எழுதிப்படித்தான்[9]; கண்களில் நீர் துளித்தது; உடல் ஒருபால் துடித்தது. உயிரும் உடலின் நீங்கி ஒளித்தது.

சிறிது போதிற்கெல்லாம் அரசியற் சுற்றத்தாரும் பொய்கையாரும் வந்தனர்; உயிர் நீங்கிய சேரமான் உறங்குபவன் போலக் கிடந்தான். வந்தோர் அனைவரும் கண்டு கரை செய்ய அரியதொரு பெருந்துன்பக் கடலில் மூழ்கிக் கையற்றனர். சோழன் செங்கணான் ஆணைப்படி அரசர்க்குரிய சிறப்புடன் அவனது உடல் அடக்கம் செய்யப்பெற்றது.

பின்னர் அனைவரும் சேரநாடு சென்று, அரசியற்குரியாரை ஆராய்ந்து, சேரமான் கோதை மார்பன் உரியனாதல் கண்டு அவனை ஏனைச் சேரர் குடிக்குரியோர் கூடிச் சேரமானாய் முடிசூட்டினர். கோதை மார்பன் கோக்கோதை மார்பனாய் விளக்கமுற்றான். அவனுடைய அரசவையில் பொய்கையார் வீற்றிருந்தார். அவனும் தொண்டி நகர்க்கண்ணே இருந்து வரலானான்.

தொண்டி நகர் கடற்கரைக்கும் மலைப்பகுதிக்கும் இடையிலுள்ள நகரம் மலைப்பகுதியில் தினைப்புனங்கள் பல உண்டு; புனங்காவல் புரியும் குறிச்சியர் தினையுண்ணும் புள்ளினங்களை ஒப்புதற்குத் தட்டை யென்னும் இசைக் கருவியைப் புடைப்பர். கிழக்கிற் புனமும் மேற்கிற் கானற் சோலையும் வடக்கில் முல்லைக்காடும் தெற்கில் மருத வயலும் சூழ்ந்த நானில வளமும் நன்கு பொருந்தியது இத் தொண்டி, கிழக்கிற் குறிஞ்சிக் கொல்லையில் எழும் தட்டை யோசையைக் கேட்டு மேற்கே கர்னற் சோலையில் தங்கும் புள்ளினம் ஆரவாரித்து எழும்.

ஒருகால் பொய்கையார் கோதை மார்பனைப் பாட விரும்பி வந்தபோது, எங்கள் வேந்தனை, குறிஞ்சி முல்லையாகிய நிலங்கயுைடையனாதலால் நாடன் என்பேனோ , நெய்தல் நிலமுடையனாதல் பற்றிச் சேர்ப்பன் என்பேனோ, மருதவயல்களையுடையனாதல் பற்றி ஊரன் என்பேனோ, யாங்கனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை[10]’ என்று பாடினர். வேறொருகால் புலவனொருவனை ஆற்றுப்படுக்கலுற்ற பொய்கையார், “எம் வேந்தனான கோதையிருக்கும் நகரம் தொண்டி; அது கானற் சோலையின் காட்சி மலிந்தது; கழியிடத்து மலர்ந்த பூக்களாலும் கோதை மார்பன் அணிந்த கோதையாலும் அத் தொண்டி தேன் மணம் கமழ்வது; அதுவே எமக்கு ஊர்; அவன் எமக்கு இறைவன்; அவன்பாற் செல்க[11]” என்று பாடியுள்ளார்.

மேலைக் கடற்கரையில் குறும்பர் நாடு வட்டத்தில் சிற்றூராய்ச் சுருங்கியிருக்கும் இவ்வூர், இன்றும் இக் காட்சியை நல்குவது இப் புறப்பாட்டின் பொய்யா வாய்மையைப் புலப்படுத்துகிறது.


  1. A.R. 379 of 1918.
  2. அகம். 211.
  3. பெரிய திருமொழி: 6, 6, 8.
  4. சற்.18
  5. களவழி. 40.
  6. களவழி. 15.
  7. T.A.S. Vol. p. 292
  8. நற். 18.
  9. புறம். 74.
  10. புறம். 48.
  11. புறம். 49.