நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வெற்றியா? தோல்வியா?
உஹத் சண்டை முடிவான போது, முஸ்லிம் படையில் காயம் அடைந்தவர்கள் அதிகமாக இருந்தனர்.
இரண்டு கட்சிப் படையினரும் போர் முனையை விட்டுப் பிரிந்து விட்டனர்.
அபூஸூப்யானும் கலக்கத்தோடு, தம்முடைய படையோடு மக்காவை நோக்கிப் பயணமானார். வெகு தூரம் சென்றவுடன் மீண்டும் போர் முனைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.
“சண்டையில் நாம் வெற்றி பெற்றதாக எண்ணினோம். ஆனால், நாம் வெற்றி பெற்றதற்கான அடையாளம் எதுவுமே இல்லை. எதிரிகளின் பக்கமிருந்து, ஒருவரையாவது சிறைப் படுத்தவில்லை. போர்க் களத்தையும் எதிரிகள் வசம் விட்டு விட்டோம். தவிர, மதீனாவையும் ஒன்றும் செய்யாமல் வந்து விட்டோம். ஆகையால், திரும்பிச் செல்வோம்” என்ற எண்ண அலைகளுடன், மதீனாவை நோக்கித் திரும்பலானார்.
பெருமானார் அவர்கள் மதீனா போய்ச் சேர்ந்ததும், முஸ்லிம்கள் சேதம் அடைந்து விட்டார்கள் என்று அபூஸூப்யான் நினைத்து, மதீனாவைத் தாக்காமல் இருப்பதற்காக, அவரைப் பின் தொடர்ந்து துரத்திச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதற்காக எழுபது பேர் கொண்ட ஒரு கூட்டம் சேர்ந்தது. அதில் அபூபக்கர் அவர்களும், ஸூபைர் அவர்களும் சேர்ந்திருந்தனர். முஸ்லிம்களுக்கு எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டிருந்த அந்த நிலையிலும் கூடப் பெருமானார் அவர்களின் கட்டளையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.
பெருமானாரும் மீதியிருந்த படையுடன் அபூஸூப்யானைப் பின் தொடர்ந்து சென்றார்கள்,
அபூஸூப்யான் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வழியில், இஸ்லாத்தின் மீது அபிமானம் கொண்ட ஒரு கூட்டத்தின் தலைவரைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இரண்டாவது தடவையாக முஸ்லிம்களைத் தாக்கப் போவதாகச் சொன்னார்.
அதற்கு அவர், “அவ்வாறு தாக்குவதில் பயன் இல்லை. முஸ்லிம்கள் முழுமையான ஆயத்தத்தோடு வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
அதைக் கேட்டதும், அபூஸூப்யான் மனம் தளர்ந்து, தம் படையுடன் மக்காவுக்குத் திரும்பி விட்டார்.
பெருமானார் அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்து சேர்ந்ததும், எங்கு பார்த்தாலும் அழுகைக் குரலாகவே இருந்தது.
உஹத் சண்டையின் முடிவைக் கவனிக்கும் போது வெற்றி பெற்றது யார்? தோல்வியுற்றது யார்? என்று கூற இயலாது.
முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் விளைந்திருந்தது. ஆனால், குறைஷிகளின் நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை.
***
ஹிஜ்ரி மூன்றாவது வருடம், பாத்திமா நாச்சியாருக்கு இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்தனர்.
உமர் அவர்களின் மகளார், பத்ருப் போரில் விதவையாகி விட்ட ஹப்ஸா நாச்சியாரை இதே வருடத்தில் பெருமானார் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவ்வருடத்தில் பெருமானார் அவர்களின் மகளார் உம்மு குல்தூம் அம்மையாரை உதுமான் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.