மகாபாரதம்-அறத்தின் குரல்/6. துரோணர் வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

6. துரோணர் வரலாறு

கெளரவர்களும் பாண்டவர்களும் படைக் கலப் பயிற்சி பெறுவதற்குரிய இளமைப் பருவத்தை அடைந்தனர். வீட்டுமன், விதுரன் இருவரும் அரசிளங்குமாரர்களாகிய இருசாரார்க்கும் ஏற்ற ஆசிரியரைக் கொண்டு போர், படைப்பயிற்சி முதலிய வித்தைகளைக் கற்பிக்கக் கருதினர். ‘கிருபாச்சாரியார்’ என்ற சிறந்த ஆசிரியர் குருவாகக் கிடைத்தார். பாண்டவர்களும், துரியோதனாதியர்களும் இவரிடத்தில் வில், வேல், வாள் முதலிய படைக்கலப் பயிற்சிகளைப் பெறுமாறு வீட்டுமனால் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதர்களும் ஏற்பாட்டின்படி கிருபாச்சாரியார் பால் பயிற்சி பெற்றனர். கிருபாச்சாரியார் ஆசிரியராக இருந்தும், வேறொர் சிறந்த ஆசிரியரையும் தேடினர் வீட்டுமன் முதலியோர், துரோணர் இரண்டாவதாக அகப்பட்டார். துரோண மரபில் தோன்றிய துரோணர் பரத்துவாச முனிவரின் புதல்வர், எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவர். வில்வித்தையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திறமை துரோணருக்கு உண்டு.

அத்தினாபுரியிலிருந்து ஆசிரியரைத் தேடிச் சென்ற தூதுவர்கள் துரோணரை அழைத்து வந்ததனால், யாவருக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது அது. திருதராட்டிரனது அவை துரோணருக்கு மரியாதை செய்து, அவரை அன்போடு வரவேற்றது. துரோணர் அந்த மரியாதையையும், அன்பான வரவேற்பையும் ஏற்றுக் கொண்டு அவையோர்க்கு நன்றி கூறினார். நன்றி கூறியவர், அப்படியே தம்முடைய வாழ்வில் தம்மைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி ஒன்றையும் கூறத் தொடங்கினார்.

“இளமையில் குருகுல வாசம் செய்யும் போது நானும் பாஞ்சால நாட்டு இளவரசன் யாகசேனனும் அங்கிலேசர் என்னும் முனிவரிடம் இருந்தோம். எனக்கும் யாகசேனனுக்கும் அப்போது நெருங்கிய நட்பு இருந்தது. உயிர் நட்பு என்றே அதனைச் சிறப்பித்துக் கூறலாம். ஒரு நாள் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசாட்சி எனக்குக் கிட்டும். அப்போது என் அரசில் ஒரு பகுதியை உனக்கு மனமுவந்து அளிப்பேன் நீயும் என்னைப் போல வளமான வாழ்க்கையை அடையலாம்’ என்றான். அப்போது அவன் கூறிய இச்சொற்களை நான் உறுதியாக நம்பினேன். பின்பு சில நாட்களில் பாகசேனனுடைய தந்தை மறைந்து விடவே அவன் நாடு சென்று விட்டான். நானும் குருகுல வாசம் முடிந்தபின் இப்போது இதே அரசகுமாரருக்கு ஆசிரியராக இருக்கும் கிருபாச்சாரியாருடைய தங்கையை மணந்து கொண்டு இல்லறத்தில் பிரவேசித்தேன். நாளடைவில் என் இல்லற வாழ்வின் போக்கில் நான் யாகசேனனையும் அவன் கூறிய உறுதி மொழிகளையும் ஒருவாறு மறந்து போனேன். காலம் வளர்ந்தது. எங்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தான்.

அவன் பிறந்தபோது எங்கள் வாழ்வில் வறுமை பெரிய அளவில் குறுக்கிட்டிருந்த காலம். உண்பதற்குப் பாலும் அளிக்க முடியாத துயரநிலை, ‘வேதனையை மிகுவிக்கும் இந்த வறுமையை நீக்கிக் கொள்ள என்ன செய்யலாம்’ என்று மனம் மயங்கிச் சிந்தித்தேன் நான். அப்போது எனக்கு யாகசேனனுடைய இளமைப் பருவத்து நட்பும் உறுதி மொழிகளும் நினைவிற்கு வந்தன. தன் அரசாட்சியிலேயே ஒரு பகுதியை அவன் எனக்குத் தருவதாகக் கூறியிருந்த சொற்களை எண்ணினேன். உடனே நம்பிக்கையோடு பாஞ்சால் நாட்டையடைந்து யாகசேனனைச் சந்திக்கச் சென்று அவன் முன் கூறிய சொற்களை நினைவுபடுத்தி என் வறுமை நிலையில் எனக்கு உதவுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவனோ என்னை அதற்கு முன்பு கண்டும் அறியாதவனைப் போல நீ யார்?’ என்று என்னையே கேட்டான். எனது மனம் அப்போது மிகுந்த வேதனையை அடைந்தது. நான் இளமையில் குருகுலவாசத்தின் போது நடந்ததிலிருந்து எங்களுடைய நட்பை நினைவுபடுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்துக் கூறினேன்.

ஆனால் அப்படிக் கூறியும் அவன், ‘நானோ நாடாளும் மன்னன். நீ சடை முடி தரித்த முனிவன். அவ்வாறிருக்க உனக்கும் எனக்கும் நட்பு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும்? வீணாக ஏன் பொய்யைச் சொல்லுகின்றாய்? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்ன?’ என்று என்னைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டே கேட்டான். எனக்கு அந்த நிலையில் அவன் மேல் அளவற்ற சினம் ஏற்பட்டுவிட்டது. ஏமாற்றத்தால் எனது மனம் குமுறிக் கொதித்தது. ‘ஞாபகமறதியால் நீயே அன்று கூறிய உறுதி மொழிகளையும் மறந்து என்னை இகழ்ந்து பேசுகிறாய். உன்னுடைய இந்தத் தகாத செயலுக்காக உன்னைப் போரில் சிறை செய்து உன் நாட்டில் ஒரு பகுதியை நானே எடுத்துக் கொள்வேன்! இது சபதம், அவசியம் நடக்கப் போகிறது பார்!’ என்று அவையறியக் கூறிச் சூளுரைத்தேன். “அதை நிறைவேற்ற வேண்டும்.” - துரோணர் இவ்வாறு தம் வாழ்க்கையையே பாதித்த பழைய நிகழ்ச்சியைக் கூறி முடித்தார். அரசகுமாரர்களாகிய பாண்டவர்களும் கெளரவர்களும் அவைக்கு அழைத்து வரப் பெற்றனர். குருவாக வந்திருக்கும் பெருந்தகையாளராகிய துரோணரைப் பணிந்து வணங்கினர்.

“துரோணரே! உம்மை அவமானப்படுத்திய யாக சேனனை வென்று அவனுக்கு அறிவு புகட்ட இவர்களே ஏற்றவர்கள், தாங்கள் இவர்களுக்குக் கற்பிக்கும் வித்தைகளால் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்!" என்று அரச குமாரர்களைச் சுட்டிக்காட்டி வீட்டுமர் கூறினார். பின்பு துரோணருக்கு அத்தினாபுரியில் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. ஒரு பேரரசனுக்குரிய அந்தஸ்துக்களோடு அவர் மேலான சிறப்புக்கள் செய்யப் பெற்றார். பண்பட்ட ஆசிரியனின் கடமை தனது மனம் பொருந்த, தான் கற்ற கல்வியை மாணவர்க்குச் சிறிதும் ஒளிக்காமல் அளிப்பது ஆகும். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் துரோணர் கற்பித்த கலைப்பயிற்சி அத்தகையதாக இருந்தது. சகோதரர்களில் அவரவர்கள் அறிவிற்கும் ஆற்றலுக்கும் ஏற்ற கலையைத் தேர்ந்து போதித்தார் அவர்.

விசயன் வில்வித்தையில் தலைசிறந்து விளங்கினான். வில் பயிற்சி என்ற கலை காவிய நாயகர்களில் இராமன் ஒருவனுக்காகவே ஏற்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் விசயனோ, அவனைப் போன்றே தகுதிபெற்று விளங்கினான் இந்தக் கலையில், விசயனின் ஒப்புயர்வற்ற பெருமைக்கு முன் கௌரவர்கள் கதிரவனுக்கு முன் மின்மினி போலாயினர். நல்ல மாணவன் ஆசிரியரின் உள்ளத்தில் தனித்த அன்பையும் நட்பையும் பெறுவது இயற்கையல்லவா? துரோணர் விசயனின் மேல் அளவற்ற பற்றும் அன்புணர்வும் கொண்டு ஆர்வத்தோடு அவனுக்குக் கற்பித்து வந்தார். நல்ல மாணவன் உடலைப் பின்பற்றும் நிழலைப் போல ஆசிரியனை விட்டு விலகாமல் போற்றிப் பாராட்டி வழிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். விசயன் துரோணரை அவ்வாறு மதித்து வழிபட்டுக் கற்றான். இஃது இவ்வாறிருக்கும் போது துரோணரால் வில்வீரனாகிய ‘ஏகலைவன்’ என்பவனின் விந்தை மிக்க வரலாறு ஒன்றை இங்கே காண்போம். அவனுடைய தியாகத்தையும் குருபக்தியையும் அறிந்து கொள்வோம்.

ஏகலைவன் ஓர் வேட்டுவன், இளமையில் துரோணர் விற்கலையில் ஒப்பற்ற பேரறிஞர் என்பதைப் பலமுறை பலரிடம் கேட்டு மகிழ்ந்தவன். ‘கற்றால் அவரிடம் வில் வித்தை கற்க வேண்டும்’ என்று அவரையே தனது இலட்சிய குருவாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மனத்தையுடையவன். துரோணரைக் காணாமலும் கண்டு பழகாமலுமே அவரை மனத்தின் உயர்ந்த இடத்திலே வைத்துத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இயல்பினன். கல்விக்குரிய பருவமும் ஆர்வமும் முறுகி வளர்ந்து பெருகியபோது அவன் துரோணரை நாடிச் சென்றான். அவரிடம் தன் ஆர்வத்தைக் கூறிப் பணிவுடனே தனக்கு வில்வித்தை கற்பிக்குமாறு வேண்டினான். ஆனால் துரோணர் தம்மால் இயலாதென்று மறுத்து விட்டார். ஏகலைவன் பெரிதும் ஏமாற்றமடைந்து மனம் வருந்தினான். இறுதியில் எவ்வாறேனும் துரோணரிடமே கற்க வேண்டும் என்ற முடிவு தான் அவன் மனத்தில் நிலைத்து நின்றது. வனத்தில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு அதில் துரோணரைப் போன்ற உருவச்சிலை ஒன்றைச் செய்து வைத்தான். அந்த சிலையையே தன் குருவாகப் பாவித்து அதற்கு முன்னால் நின்று விற்பயிற்சி பெறும் முயற்சியில் தானாகவே ஈடுபட்டான் அவன். உறுதியான நல்லெண்ணங்களும் முயற்சிகளும் ஒரு போதுமே வீண் போவதில்லை. நல்ல பயனளித்தது. நாட்கள் செல்லச் செல்லத் துரோணரிடம் நேரிற் கற்றால் எவ்வாறு பயன் அடைந்திருப்பானோ அவ்வளவு பயனை ஏகலைவன் அடைந்து விட்டான். வில்வித்தையில் சிறந்த வீரன் என்று பெயரும் புகழும் பரவலாயின.

ஏகலைவன் விற்கலையில் இவ்வாறு அடைந்த புகழ் துரோணர் செவிகளுக்கும் எட்டியது. துரோணர் ஏகலைவனைக் கண்டு செல்ல வேண்டும் என்று வனத்திற்கு வந்தார். கோவிலில் விளங்கும் வழிபாட்டுக்குரிய தெய்வச்சிலையைப் போலத் தம்முடைய உருவச்சிலை அங்கே ஏகலைவனின் ஆசிரமத்தில் இடம் பெற்றிருப்பதை அவர் கண்டார். மனம் பூரித்தார். துரோணரே தம் ஆசிரமத்தை நாடி வந்திருப்பதை உணர்ந்த ஏகலைவன் மனமகிழ்ந்து பயபக்தியோடு அவரை வரவேற்று உபசரித்தான். “எல்லாம் தேவரீர் அருளால் வந்த திறமை ! தாங்களே என்னுடைய ஆசிரியர். மானசீகமாக நுட்பமான விற்கலையைத் தங்களிடமிருந்தே நான் கற்றேன்.” என்றான் ஏகலைவன்.

“அப்படியானால் நீ எனக்கு ஆசிரியர் காணிக்கையாக ஏதாவது அளிக்க வேண்டும் அல்லவா?” - என்றார் துரோணர். ‘தாங்கள் எதனைக் கேட்டாலும் சரி! அதை அளிக்க எளியேன் தயங்க மாட்டேன்’ - என்று ஏகலைவன் பணிவான குரலில் உள்ளன்போடு மறுமொழி கூறினான். “நல்லது! உன் வலது கைக்கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்கிறேன். அதை எனக்கு அறுத்துக் கொடு” - என்று துரோணர் கேட்டார். வலதுகைக் கட்டைவிரல் - விற்கலைக்கே இன்றியமையாத உறுப்பு. அந்த விரலை இழந்தபின் ஏகலைவன் கற்ற அத்தனை கலைகளும் பயனற்றுப் போகும். “சுவாமி! வேறு ஏதாவது கேளுங்களேன், தருகிறேன்” என்று ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாகத் தருவதற்கு மறுத்திருக்கலாம். ஆனால் ஏகலைவன் ஆசிரியரின் உன்னத நிலையை உணர்ந்து வழிபடும் உயரிய பண்பும் தியாகமும் கொண்ட ஆண்மகன். துரோணருக்குக் கட்டைவிரலைத் தர இயலாது என்று அவன் மறுக்கவில்லை! அவர் கேட்ட மறுவிநாடியே கட்டைவிரலை அறுத்துக் குருதியொழுகும் கரத்தினால் அவர் திருவடிகளில் வைத்து வணங்கினான். துரோணர் திகைத்தார். ஏகலைவனது பண்பு அவரைவியக்கச் செய்தது. அவனுடைய உயர்ந்த பண்பு நிறைந்த உள்ளம் அவருக்கு அப்போதுதான் புலனாயிற்று. அவர் அவனைப் பாராட்டி வாழ்த்தினார்.

ஏகலைவனுக்குப்பின் அர்ச்சுனன் ஒருவனிடமே அவர் மெய்யான வில்வித்தையின் திறமையைக் காணமுடிந்தது. அர்ச்சுனன் மேல் ஒரு தந்தைக்கு மகன் மேல் ஏற்படும் பாசமும் அன்பும் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் துரியோதனாதியர் அர்ச்சுனன் மேல் அளவற்ற பொறாமை கொண்டிருந்தனர். துரோணரே இதை அறிந்து கொண்டார். மெய்யான திறமை அவனுக்கு இருக்கும் போது காரணமின்றி இவர்கள் பொறாமைப்படுவது விருப்பு வெறுப்பற்ற ஆசிரியராகிய அவர் மனத்தையே மிகவும் வாட்டியது. அர்ச்சுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியான சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி பார்த்தாவது அவன் மேல் அவர்கள் பொறாமைப்படுவது குறையலாம் என்று எண்ணி அதற்கு ஏற்பாடுகளைச் செய்தார் துரோணர். அவர் ஒருநாள் காலை தம்முடைய மாணவர்கள் யாவரையும் அழைத்துக் கொண்டு கிணற்றுக்கு நீராடச் சென்றார். வேண்டுமென்றே மடுப்போல நீர் ஆழமாக நிறைந்திருந்த அந்தக் கிணற்றில் தம் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தைத் தவறி விழுந்து விட்டது போலப் போட்டு விட்டார். பின்பு மாணவர்களை அழைத்துக் கிணற்றில் இறங்காமலே அம்பு செலுத்தி மோதிரத்தை எடுத்து வருமாறு செய்ய எவராலாவது இயலுமா? என்று கேட்டார். எல்லோருமே, ‘என்னால் முடியும்’ - ‘என்னால் முடியும்’ என்று கூறி முன் வந்து அம்புகளைச் செலுத்திப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் செலுத்திய அம்புகள் தண்ணீருக்குள் சென்று முழ்கினவே ஒழிய மோதிரத்தை மீட்டுக் கொண்டு வரவில்லை.

இன்னும் ஒரே ஒருவன் மட்டும் அம்பு எய்யவில்லை. அந்த ஒருவன்தான் அர்ச்சுனன் துரோணர் ஏதோ கட்டளையிடுவது போல அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் வில்லை எடுத்துச் சாமர்த்தியமாக வளைத்து அம்பைக் கிணற்றுக்குள்ளே செலுத்தினான். என்ன விந்தை? அம்பு மோதிரத்தோடு கிணற்றுக்குள்ளிருந்து மீண்டும் திரும்பவும் மேலே பாய்ந்து வந்தது. கூடியிருந்த மாணவர்கள் யாவரும் அர்ச்சுனனை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்தோடு பார்த்தனர். துரோணர் புன்னகை புரிந்தார். ‘அர்ச்சுனனின் வில் திறமை உங்கள் யாவரினும் சிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவது போலிருந்தது அந்தப் புன்னகை. மற்றோர் நாள்! துரோணர் தம் மாணவர்களுடனே கங்கையாற்றுக்குச் சென்றிருந்தார். கங்கைக் கரையில் அவர் மாணவர்களோடு நீராடிய படித்துறைக்கு அருகில் ஒரு பெரிய அரசமரம் படர்ந்து வளர்ந்திருந்தது. சட்டென்று துரோணர் தம் மாணவர்களின் பக்கமாகத் திரும்பி, “இந்த மரத்திலுள்ள அத்தனை இலைகளையும் துளைக்கும்படியாக ஒரே அம்பைச் செலுத்தக் கூடிய திறமை உங்களில் எவருக்காவது உண்டா ?” - என்று கேட்டார். துரியோதனாதியர் அதைக் கேட்டதுமே மலைத்தனர். வேறு எவருக்கும் வில்லைக் கையிலெடுத்து முயன்று பார்க்கக் கூடத் துணிவில்லை. அர்ச்சுனன் தயங்காமல் வில்லை எடுத்தான். அவன் வில்லிலிருந்து விர்ரென்று அம்பு பறந்ததைத்தான் மற்றவர்கள் காண முடிந்தது. பின் அந்த அம்பு எல்லா இலைகளையும் துளைத்துவிட்டுக் கீழே விழுந்தபோது தான் கண்டவர்களுடைய கண்கள் இமைத்தன!

வேறோர் சமயம் துரோணர் நீராடிக் கொண்டிருக்கும் போது கொடிய முதலையொன்று அவர் காலை இறுகப் பற்றிக் கவ்விக் கொண்டது. உடனே அவர் அலறிக் கொண்டே தம் மாணவர்களைக் கூவி அழைத்தார். எல்லோருமே ஓடி வந்தனர். அவர் காலை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றார்கள். யாராலுமே அக்காரியத்தைச் செய்ய முடியவில்லை. ஓடி வந்த மாணவர்கள் அத்தனை பேரும் கையில் ஆயுதங்கள் எதுவுமே இல்லாமல் வந்திருந்தார்கள். அர்ச்சுனன் மட்டும் எங்கோ வெளியிற் சென்றிருந்தான். அவனுக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது வில்லும் அம்புமாக ஓடி வந்து துரோணரை முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான். தாங்கள் வெறுங்கையர்களாக அவசரத்தில் ஓடி வந்து ஒன்றும் உதவமுடியாமற் போனதற்காக வெட்கித் தலைகுனிந்தனர் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக வில்லும் அம்பும் கொண்டு வந்து ஆசிரியரைத் துன்பத்திலிருந்து விடுவித்த அர்ச்சுனன் திறமையைப் போற்றினர். துரோணரே மனம் நெகிழ்ந்து அன்பு சுரக்கும் சொற்களால் அவனுக்கு நன்றி கூறினார். தமது நன்றிக்கு அறிகுறியாக ஆற்றலும் வேலைப்பாடும் செறிந்த அம்பு ஒன்றை அவனுக்கு அவர் அளித்தார்: துரோணரிடம் பெருமதிப்புக் கொண்டுள்ள அன்பர்களும், நகரத்துப் பெரியோர்களும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் அர்ச்சுனன் அவரைக் காப்பாற்றியதைக் கேள்விப்பட்டு அவனைப் புகழ்ந்தனர்.

ஓர் நல்ல மங்கல நாளில் கௌரவர்களும் பாண்டவர் களும் பிறரும் கற்ற கலைகளை அரங்கேற்றம் செய்ய முடிவு கொண்டார் துரோணர். விழாப்போல நிகழ வேண்டிய இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி நகரத்தார் எல்லோருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அரசவையைச் சேர்ந்தவர்களும், நகரமாந்தரும் கூடியிருந்த ஓர் அரங்கில் விழாத் தொடங்கியது. வழிபடு தெய்வத்தை வணங்கியபின் மாணவர்கள் தாம் கற்ற கலைகளைக் காட்டுமாறு பணித்தார் துரோணர், மாணவர்களும் அவையிலிருந்த சான்றோர்களை வணங்கி அரங்கேற்றத்தில் ஈடுபட்டனர். துரியோதனனும் வீமனும் அரங்கேறிய போது இருவருக்கும் இடையே உள்ள மனப்பகை புலப்படுமாறு போர் செய்து கொண்டனர். நடுவே இவர்கள் போரிடுவது சுவைக்குறைவான நிகழ்ச்சியாகத் தென்பட்டதனால் துரோணரின் புதல்வனான அசுவத்தாமன் புகுந்து அமைதியை உண்டாக்க வேண்டியதாயிற்று. கடைசியாகத் துரோணரை வணங்கி விசயன் தான் கற்ற கலைகளைச் செய்து காட்டி அவையில் கூடியிருந்தவர்களை மகிழ்விக்கத் தொடங்கினான். அவனுடைய அபாரமான திறமைகளையும் நுணுக்கங்களையும் கண்டு போற்றினர் அவையோர். துரோணர் அவனுக்குக் கற்பித்த போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போது பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். ஆனால் ஒரே ஓர் உள்ளம் மட்டும் இவ்வளவையும் கண்டு குமுறிக் குமைந்து வெதும்பிப் பொறாமையால் தவித்துக் கொண்டிருந்தது. அதுவே கர்ணனுடைய உள்ளம். விசயன் மேல் அசூயை அவனுக்கு.