பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கிய மேற்கோள்

விக்கிமூலம் இலிருந்து

இலக்கிய மேற்கோள்

பாரதியார் வாழ்ந்த காலத்தில் அச்சில் வந்த தமிழ் இலக்கிய நூல்கள் சிலவாகத்தான் இருந்தன. நாட்டுப் பாடல்களின் வகைகளில் சில பிள்ளைத் தமிழ் நூலின் உறுப்புகளாக அமைந்ததை எடுத்துக்காட்டி எழுதுபவர்

“பழைய காலத்து வகைகளை நாம் வித்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய செளகரியங்கள் இலை. ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம்”
-என்றெழுதினார். இங்கு
“செளகரியங்கள்” என்று அவர் குறிப்பிடுவது நூல்கள் கிடைக்காத நிலையையாகும்.

“செந்தமிழ்” இதழில் பெரும்புலவர் மு. இராகவ ஐயங்கார் வெளியிட்ட காட்டுரையில் புறநானூற்றுப் பாடற் கருத்துகளைத் தந்திருந்தார். அவற்றைப் புதுமையாக உணர்ந்த பாரதியார் அவருக்குப் பாராட்டு ஒன்றை அனுப்பினார். திரு மு. இரா. அவர்களது கட்டுரையைத் தமது “இந்தியா” இதழில் வெளியிட்டார். இதுபற்றியதும் ஆர்வமும் உணர்வும் பொதிந்த கருத்தைப் பின்வருமாறு எழுதினார்:

“தமிழ்நாட்டுத் தாய்மாரைப் பற்றிச் “செந்தமிழ்” ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்யாசத்தைப் படித்தபோது நமக்குண்டான பெருமகிழ்ச்சிக்கும் பெருந்துயருக்கும் அளவில்லை. 1800 வருடங்களுக்கு முன்பாகவே இத்தகைய பெருங்குணங்கள் வாய்க்கப்பெற்றிருந்த நாகரீக நாட்டிலே, இவ்வுயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, இவர்கள் நடையிலும் செய்கையிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாசையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கின்றோம் என்பது அறிய மகிழ்ச்சி உண்டாக்குகிறது.” (வீரத்தாய்மார்கள் கட்டுரை)

-இவ்வாறு முடிவில் தமிழ் மொழி பேசும் குடியில் தாம் பிறந்ததற்கு மகிழ்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மற்றொன்றையும் காணவேண்டும். தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்கட்கு “மகாமகோ பாத்யாயா” பட்டம் வழங்கப்பட்டபோது பாரதியார் அவரைப் பாராட்டி எழுதினார். அதில் தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடும் பணி பற்றி குறித்தார்.

“சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களை இன்று நம்மவர் கற்றுக் களிப்பது சாமிநாத ஐயருடைய கருணை மிகுதியால் அல்லவோ”
-இதற்கு

முன்பகுதியாக அவர் எழுதிய பாராட்டுக் குறிக்கத் தக்கது.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்” முதலிய பல அறங்களிலும் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” மேம்பட்ட பேரறம் என்றவர் பாரதியார். அக்கருத்தோட்டத்திலேயே இலக்கிய நூல்களின் வெளியீட்டையும் பாராட்டினார்.

“பலவகைத் தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேசமுடையதென்று மேலோர் சொல்வார்கள். அழிந்து போன ஆலயங்களை மறுபடி புதுக்கிக் கட்டிப் பிரதிட்டை புரிந்தோர், நெடுங்காலமாக நின்றுபோன அன்ன சத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளித்தோர், வறண்டு மண்ணேறிப் போய்கிடக்கும் தடாகங்களை மறுபடி வெட்டி நலம்புரிவோர் என்னும் பலவகையாரினும் மங்கி மறைந்துபோய்க் கிடக்கும் புராதன பெருங்காவியங்களை பெருமுயற்சி செய்து திரும்ப உலகத்துக்கு அளிக்கும் பெரியோர்கள் புண்ணியத்திற் குறைந்தவர்கள் அல்லர். மேலும் புகழ் நிலைக்கும் தன்மையில் மற்றெல்லோரைக் காட்டிலும் இவரே சிறந்தவராவார்” (“சக்கரவர்த்தினி” இதழில் மகாமகோபாத்தியாய வாழ்த்து”க்கு முன்னுரை)

இவைகளைக்கொண்டு பாரதியார் காலத்தில் தமிழின் பேரிலக்கியங்கள் பல வெளிவராமைப் புலப்படும். இந்நிலையிலும் கிடைத்தவற்றை ஆர்வத்தோடு படித்தார்; சுவைத்துப் படித்தார்; துருவித் துருவிப் படித்தார்; உணர்ச்சிவயப்பட்டுப் படித்தார். படித்தவற்றைப் பழம் புலவர் பாங்கில் தமது கட்டுரைகளில் மேற்கோள் காட்டினார். அவ்வாறு மேற்கோள் காட்டப்பட்ட இடங்கள் பல. ஒரு சிலவற்றைக் காண்பது பாரதியாரது இலக்கியப் பார்வையைக் காண்பதாகும்.

திருக்குறள், கம்பராமாயணம், ஆத்தி சூடி முதலிய ஒளவையார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், ஆண்டாள் பாடல்கள், திருநாவுக்கரையர் தேவாரம், பட்டினத்தார் பாடல்கள் பிற அறநூல்கள் முதலியவற்றினின்றும் பாடல்களை மேற்கோள் காட்டுவது அவரது இயல்பாயிற்று.  பாரதியார் திருக்குறள்களையே மிகுதியான இடங்களில் மேற்கோளாக அமைத்துள்ளார். அவற்றையும் தமது கட்டுரைகளிலே மிகுதியாகக் காணலாம்; கவிதைகளில் குறட்பாவையும் குறட் கருத்தையும் பின்னியுள்ளார்.

தனது வரலாற்றைக் கூறும் “சுய சரிதை” (43)யில்

“பொருளி லார்க்கிலை யிவ்வுல” கென்ற நம் புலவர் தமிழ்மொழி பொய் மொழி யன்றுகாண்.

-எனத் திருக்குறள் (247) தொடரை அமைத்தார்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்” (580) என்னும் குறளின்

கருத்தை, ‘அச்சமில்லை’ தலைப்பில் அமைந்த ‘பண்டாரப் பாட்டில்’,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப சூட்டுபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”

என அமைத்தார்.

கட்டுரைகளில் திருக்குறள் மேற்கோள் பல்லிடங்களில் பாரதியால் அமைக்கட்பட்டுள்ளது. சான்றிற்கு ஒன்று:

“......... புத்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே இலட்சம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்குத் திருட்டாந்தம் காட்டப் புகுமிடத்தே... ......”

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல் வேறு பட்டார் தொடர்பு -என்று” திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

திருவள்ளுவரை அடுத்துத் தாயுமானவர் பாடலைக் கையாண்டுள்ளார். அவரது “ஆசைக்கோர் அளவில்லை” என்னும் பாடலைக்கொண்டு, தமது“சுய சரிதை”(42) யில்,

ஆசைக் கேரள வில்லை விடயத்துள்
ஆய்ந்த பின்னங் கமைதி யுண்டாமென
மோசம் போகலிர் என்றடித் தோதிய ,
மோனி தாளினை முப்பொழு தேத்துவாம்”
-என

அமைத்தார்.

“யான்” என்னும் கவிதையைத் தொடங்குபவர், அதன் முகப்பாக,

அருளால் எவையும் பாறென்றான்-அதை
அறியாதே கட்டியென் அறிவாலே பார்த்தேன்”
-என்னும்

தாயுமானவர் பாடலை வைத்தார்.

இது போன்று பட்டினத்தார் பாடலாகிய,

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.”
—பட்டினத்துப் பிள்ளையார்

-எனத் தமது “சுயசரிதை”யைத் துவங்குமுன் முகப்பாக அமைத்தார்.

தாயுமானவர் பாடல்களைத் தமது கட்டுரைகளில் பல இடங்களில் அமைத்துள்ளார்.

திருவள்ளுவர், தாயுமானவர் ஆகிய இருவரது பாடல்களை அதிகம் கையாண்டாலும் பாரதியார்க்கு ஔவையார்பால் அளவற்ற மதிப்பு உண்டு. இது முன்னரும் காட்டப்பட்டது. “யாமறிந்த புலவரிலே” உள்ள மூவரில் ஔவையார் இல்லையென்றாலும், தமது கவிதையிலும் கட்டுரைகளிலும் ஔவையாரைப் போற்றியிருக்கும் உணர்வு குறிக்கத்தக்கது.

“இன்னும் ஔவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூற வேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும்” -என எழுதியிருக்கும் பகுதி ஔவை பற்றிய அவரது ஆர்வத்தை அளவிட்டுக் காட்டுகின்றது. இப் பகுதியில் இதனைத் தொடர்ந்து எழுதுகின்றவர், -

“இந்தக் கவியரசியைக் குறித்து” -எனக் கவியரசிப் பட்டஞ் சூட்டியுள்ளார்.

தமது பாப்பாப் பாட்டில்,

“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லி சொல் அமிழ்தம் என்போம்”
-என்று குறித்திருப்பதை அறிவோம்.
இதில் ஔவையைத் “தமிழ்மகள்” என்றும் அவர் சொல் “அமிழ்தம்” என்றும் குறித்தமை கருதத்தக்கது.

ஔவையாரது ஆத்திசூடி பாரதியாரை மிகக் கவர்ந்தது அதனை ஒரு நல்லிலக்கியமாகக் கருதினார். தனது இலக்கியப் படைப்பிற்கு ஒரு வழிகாட்டியாகக் கொண்டார். ஆத்திசூடி அவரைக் கவர்ந்ததற்குச் காரணம் அதன் சொற் சுருக்கமே. இச்சொற்சுருக்கம் கருதி ஔவையாரை மிகப் பாராட்டியுள்ளார்.

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் “ஔவை ஒப்பற்றவள்” (தமிழ்நாட்டுநாகரீகம் கட்டுரை) -என ஒப்பற்ற நிலையைக் காட்டினார். இத்துறையில் “ஔவையைப் போன்று ஓர் ஆண்மகன் இதுவரை தோன்றவில்லையே” என்றும் எழுதினார்.

இவ்வாறெல்லாம் தமது உள்ளங்கவர்ந்த தமிழ் மகளாகப் போற்றினும், ஔவையாரது ஆத்திசூடியைப் போன்று இவர் ஒன்று எழுதியது “ஔவையைப் போன்று ஓர் ஆண்மகன் தோன்றவில்லையேஎன்று அங்காந்த அங்காப்பைப் போக்கிக் கொள்ளும் முயற்சியாகவும் இருக்கலாம். மேலும் தாம் போற்றுகின்ற ஒன்றுகொண்டு போற்றப் படுபவரது கருத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ளுவது தேர்ந்த இலக்கியப் படைப்பாளனது தன்மையாகாது என்பதை உணர்ந்தவர் பாரதியார், இவ்வடிப்படை கொண்டுதான். தமது புதிய ஆத்திசூடியில் இக்காலத்துக்கு ஏலாது என்று அவர் கருதிய ஔவை ஆத்திசூடிக் கருத்திற்கு மாறாகச் சிலவற்றை அமைத்தார்.

“மீதுண் விரும்பேல்” — ஔவையார் ஆத்திசூடி (90)
“ஊன் மிக விரும்பு” — பாரதியார் புதிய ஆத்திசூடி (6)
“முனைமுகத்து நில்லேல்” — ஔவை (91)
“முனைமுகத்து நில்” — பாரதி (43)

இவை மாறுபட்ட கருத்துகள்.

ஆனால் கால மாற்றத்தில் மாற்றிக் காட்டவேண்டியவை எனப் பாரதியார் கருதியவை. மாறுபட்டு மொழிந்தது போன்று ஔவை கருத்தில் திருத்தம் செய்தும் எழுதினார்.

“நூல் பல கல்” என்றார் ஔவையார். அதற்கு விளக்கமும் திருத்தமுமாகப் பாரதியார், “நூலினைப் பகுத்துணர்” என்றார்.

ஔவையார் கருத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பாரதி காட்டிய தொடர்கள் உண்டு. “இளமையில் கல்” ஔவை. “கற்றது ஒழுகு”-பாரதி. இவற்றிற்கு மேலும் பாரதியார் பகுத்தறிவுப் பாதையில் நின்று,

“சோதிடந்தனை இகழ்”
“தொன்மைக்கு அஞ்சேல்”
“புதியன விரும்பு”
-என்றெல்லாம் முழக்கினார்.

எவ்வாறாயினும் ஔவையார்பால் பாரதிக்கிருந்த பெருமதிப்பு அவரால் மிக நன்றாக முத்திரையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கோள்களாகக் கம்பரது “சாணிலும் உளன்” என்னும் செய்யுளையும், நாலடியாரது “அகடுற யார்மாட்டும்” என்னும் அடிகளையும் திருநாவுக்கரையரது “கற்றுனைப் பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும்”“அங்கமெலாம் குறைந்தழுகுதொழு நோயராய்” என்னும் அடிகளையும், பிற சிறுநூல்களின்-தொடர்களையும் மேற்கோள்களாககாட்டியுள்ளமை அவரது இலக்கியப் புலமையுடன் ஆர்வத்தையும் காட்டுவதாகும்.