அறிவுக் கதைகள்/படிக்க வைக்கும் முறை

விக்கிமூலம் இலிருந்து

34. படிக்க வைக்கும் முறை

நாற்பது ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஒருவரைத் தேடி, அக்கிராகரம் பக்கமாக நான் போய்க்கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு வீட்டுத் திண்ணையில் நின்ற பாட்டி: “தம்பி, தம்பி, இங்கே வா” என்று என்னைக் கூப்பிட்டாள்.

நான் அருகில் சென்றதும், “தம்பி! உனக்குப் பெரிய புண்ணியமாகப் போகட்டும். என் பேரனுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா. இரவு பகலாக ஓயாமல் படித்துக் கொண்டே இருக்கிறான். இப்படிப் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படித்தால் அவனுக்கு மூளையல்லவா கலங்கி விடும். அப்படி அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், தாயும் இல்லை, தந்தையுமில்லை நான் மட்டும் என்ன செய்வேன்? ஆகவே, நீ அவனைப் படிக்காதே என்று புத்தி சொல்லிவிட்டுப் போ” என்றாள். எனக்கு ஒரே வியப்பு!

நம் வீட்டுப் பிள்ளைகளை நாம் ஓயாமல் படி படி என்று சொல்லிக்கொண்டேயிருந்தாலும் அவர்கள் படிப்பதாக இல்லை. இங்கே இந்தப் பாட்டி தன் பேரனைப்பற்றி இப்படிச் சொல்லுகிறாளே என்று எண்ணிக்கொண்டே, அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவனை அழைத்து, “தம்பி பாட்டி சொல்லைக் கேட்டு நடப்பா. படிக்கிற நேரத்தில் மட்டும் படி; மற்ற நேரத்தில் விளையாடு” என்று சொன்னேன்.

உடனே அந்தப் பாட்டி, தன் தலையில் அடித்துக் கொண்டு, “ஐயோ! இன்னொரு முறை என் பேச்சைக் கேள் என்று சொல்லாதே! ஒருநாள் அவனிடம் உனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நீ நன்றாகப் படித்தால்தான் பட்டம் பெறலாம். பட்டங்கள் வாங்கினால் தான் பெரியபெரிய பதவி கிடைக்கும். அப்போதுதான் பணக்கார இடத்தில் பெண் எடுக்கலாம். கார், பங்களா எல்லாம் வரும். உத்தியோகம் செல்வாக்கு எல்லாம் உண்டாகும்’ என்று சொன்னேன். அதுமட்டுமல்ல, ‘படிக்காவிட்டால் நீ தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு எங்கே கருமாதி என்று அலைந்து தர்ப்பணம் பண்ணித்தான் பிழைக்கணும்’ என்றும் சொன்னேன். என்பேச்சைக் கேட்ட அன்று முதல்தான் இவன் இப்படி ஆகிவிட்டான். நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினாள்.

நானும் அந்தப் பாட்டிக்கு ஆறுதலும், பையனுக்கு புத்திமதியும் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து என் தமக்கையிடம் நடந்ததைச் சொன்னேன். உடனே என் தமக்கை, “அவர்கள் படிக்கவைக்கும் முறையைப் பார்த்தாயா? அந்த பிராமணப் பையனுக்கு உண்டான உணர்ச்சி, தாழ்த்தப்பட்ட—பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு உண்டானால், எதிர்காலம் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று தன் விருப்பதை வெளிப்படுத்தினார்கள்.