அறிவுக் கதைகள்/திதி கொடுத்தல்

விக்கிமூலம் இலிருந்து


42. திதி கொடுத்தல்

குப்புசாமி என்ற சிற்றூர்வாசி தன் தந்தைக்கு திதி கொடுக்க நினைத்தார். ஒரு ஐயரை அணுகினார். அவர் கொடுத்த பாட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந்தார்.

ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார்.

குப்புசாமி, “இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?"—என்று ஐயரைக் கேட்டார்.

அவர், “மேல் உலகத்தில் உள்ள உன் தந்தைக்கு மந்திரங்களை ஜெபித்து—ஜெபித்து அவருக்கு இவையெல்லாம் அனுப்பி வைக்கப்பெறும்” என்றார்.

குப்புசாமிக்குப் பெரிய மகிழ்ச்சி! தந்தை இறந்த பிறகும், அவர் உண்ண உணவு கொடுக்கின்றோமே என்ற மகிழ்ச்சி!

சடங்குகள் தொடங்கின.

ஐயர் சாமான்களைப் பார்வையிட்ட போது அங்கிருந்தது ‘புழுங்கல் அரிசி,’ ‘இது வேண்டாம் பச்சரிசி கொண்டு வா’—என்று சொன்னார்.

உடனே குப்புசாமி—

“சாமி! எங்கப்பாவுக்கு பச்சரிசி ஆகாது. அதைச் சாப்பிட்டதனால்தான் வயிற்றுவலி வந்து இறந்தார்.

“மேலுலகத்துக்கும் இதை அனுப்பி அவரைத் துன்புறுத்த வேண்டமே” என்று வினயத்துடன் வேண்டிக் கொண்டான்.

ஐயருக்கு, அப்ப—என்ன சொல்வது, என்ன செய்வது என்று விளங்கவே இல்லை.

உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?