அறிவுக் கதைகள்/நாம் திருந்துவோமா?

விக்கிமூலம் இலிருந்து
54. நாம் திருந்துவோமா?

ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. மறுபடியும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர்.

மனம் வெதும்பிய தந்தை ஒரு நாள், ‘கரும்புக்கட்டு’ ஒன்றை வாங்கிவரச் செய்து, அவர்களை அழைத்து ‘இந்தக கரும்புக் கட்டை அப்படியே உடையுங்கள்’ என்றார். அவர்கள் நால்வரும் எவ்வளவோ முயன்றும் கட்டோடு கரும்பை உடைக்க முடியவில்லை.

பின் தந்தையானவர் கட்டை அவிழ்த்துவிட்டார். கடைசி மகனை அழைத்து, அவற்றை உடைக்கச் சொன்னார். பையன் வேகமாக ஒவ்வொரு கரும்பாய் எடுத்து, அத்தனையையும் அவன் ஒருவனாகவே ஒடித்துத் தீர்த்தான்.

தந்தை தம் மக்களைப் பார்த்துச் சொன்னார் : “கரும்பு கட்டோடு இருக்கும்போது அதை ஒடிக்க முடிய வில்லை. கட்டு அவிழ்ந்து தனித்தனியானதும் உங்களில் சின்னப் பையன்கூட ஒடித்துவிடுகிறான்.

“அப்படியே, நம் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தால் இந்த ஊரில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் நம்மை ஒன்றும் அசைக்க முடியாது. உங்களுக்குள் வேற்றுமை வளர்ந்து, நீங்கள் பிரிந்திருந்தால், சிதறிப் போன கரும்புக்கு ஏற்பட்ட கதிபோல உங்களையும் விரைவில் ஏமாற்றி அழித்துவிடுவார்கள்” என்றார்.

அவன் மக்களும் மனம் திருந்தினர். நாம் திருந்துவோமா?