அறிவுக் கதைகள்/நாடு எங்கே போகிறது?
சுவாமி சச்சிதானந்தா என்ற தமிழகத்துத் துறவி, அமெரிக்காவில் ‘யோகிராஜ்’ என்ற சிறப்புடன் அமெரிக்க மக்களுக்கு ‘யோகாசனப் பயிற்சி’ அளித்துவருகிறார். இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர் அவருக்குச் சீடராக இருந்து யோகப் பயிற்சி பெறுகின்றனர். அந்த ஆசிரமத்திற்கு அமெரிக்க அரசாங்கமே அருந் துணையாக இருந்து பேருதவி செய்துவருகின்றது.
சென்ற ஆண்டு, தில்லி மாநகரில், காய்கறி உணவு மாநாடு நடந்தது. அதற்குத் தலைமைதாங்க இந்தியப் பேரரசு இப் பெருந் துறவியை அழைத்தது.
அப்போது, தொழிலதிபர், பொள்ளாச்சி திரு. மகாலிங்கம் அவர்கள், அவரைச் சென்னைக்கு வரவழைத்து, அவருக்கும் அவரது சீடர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்த்தினார்.
அவர்கள் சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்குமுன், நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து திருச்சியிலே அவர்களுக்கு ஒரு வரவேற்பு விழாவினை ஏற்பாடு செய்தோம். சுவாமியும் வந்தார்கள்.
அந்த விழாவில் சுவாமி யோகிராஜ், அவரது சீடர்கள் 32 பேர், நாங்கள், எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் 90 பேர்தான் அங்குக் கூடியிருந்தோம்!
அதே மன்றத்தில், அடுத்து நாள், ஒரு புகழ்பெற்ற சினிமா நடிகைக்கு பாராட்டுவிழா நடந்ததில், அவரைப் பார்க்க ஐயாயிரம் பேர் கூடிக் கொட்டகையில் புகுந்து இடித்துக் கதவு சன்னல் எல்லாம் பெயர்ந்துபோய், நாற்காலி எல்லாம் உடைந்து, அவரைப் பார்த்தவர் பார்க்காதவரெல்லாம் சட்டைகள் கிழிந்து, வீடுபோய்ச் சோர்ந்தனர் என்ற செய்தி என்னை மிகவும் வருத்தியது.
இது நம்நாடு அறிவாளிகளின் பின்னே போகவில்லை என்பதையும், யார் பின்னாலேயோ போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டிக் கொண்டிருக்கிறது.