அறிவுக் கதைகள்/பேராசிரியர் தேடிய மனிதன்
மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் போகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
அவர்களில் ஒருவன் வியப்படைந்து, “ஏன் ஐயா பட்டப்பகலிலே மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றிக்கொண்டு ஒவ்வொருவர் முகத்திலும் காட்டி அனுப்புகிறீர்களே, என்ன காரணம்?” என்று கேட்டான்.
அதற்கு அப்பேராசிரியர் அவரைக் கைகூப்பி வணங்கி, “இந்தச் சாலையிலே எவனாவது மனிதன் போகிறானா?” என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், என்றார். “இந்த உலகத்தில் மக்களாய்ப்பிறந்தவர் எல்லோரும் மக்கள் அல்லர் : மக்களைப் போல உண்டு உடுத்துத் திரிபவர் எல்லோரும் மக்கள் அல்லர்; மக்களாகப் பிறந்து மக்களாக வாழ்பவர்களே மக்கள்” என்பதை இது தெரிவிக்கிறது.
“மனிதனாகப் பிறந்தவன் பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். மீனைப் போல நீரிலே நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாகப் பிறந்தும் மனிதனைப் போல வாழக் கற்றுக்கொள்வதில்லையே!” என்று அவர் கருதுகிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?