அறிவுக் கதைகள்/பொன்னும் பொரி விளங்காயும்

விக்கிமூலம் இலிருந்து
வார்ப்புரு:Xx—larger

ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான்.

அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து.

திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டான். படுத்து விட்டான். தொண்டையும் அடைத்துவிட்டது. அவனால் பேச முடியவில்லை.

கடைசிக் காலத்தில் அதைத் தன் பிள்ளைகளுக்குக் கொடுக்க எண்ணி, அனைவரையும் கூப்பிட்டு, அடுக்குப் பானை இருக்கும் இடத்தைக் காட்டி தன் 3 விரல்களையும் அடுப்புக் கட்டிபோல சேர்த்துக் காட்டி ‘அங்கே இருக்கிறது போய் எடுத்துக் கொள்ளுங்கள்’ என சாடை காட்டினான்.

அவன் மக்கள் கூடி, அவனுக்கு சாகப்போகிற நேரத்திலே பொரிவிளங்காய் மேல் ஆசை வந்திருக்கிறது என எண்ணி, அடுக்குப் பானையில் இருக்கும் பொரி விளங்காய் என்ற பலகாரத்தை எடுத்து வந்து தட்டி நசுக்கிக் கிழவன் வாயில் திணித்தார்கள். ஏற்கனவே அடைத்துக் கொண்டிருந்த தொண்டையில் இதுவும் சேர்ந்து அடைத்து, அப்போதே உயிரும் பிரிந்து போய் விட்டது.

பாவம்! அவனைப் பொறுத்தவரையில் பொன்னும் பொரிவிளங்காயாய்ப் போயிற்று.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள்—கூடுவிட்டு
ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்!

என்ற ஒளவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையாயிற்று.