உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/1

விக்கிமூலம் இலிருந்து

1. இந்தியத் தத்துவச் சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையா?



"ந்தியாவின் தத்துவ சிந்தனை ஆன்மீக வாதத்தை, கடவுள் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது" என்ற நம்பிக்கையை கட்டுப்பாடாகப் பல தத்துவவாதிகளும், ஜகத் குருக்களும், புராணப் பிரசங்கிகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உதாரணமாக எஸ். ராதாகிருஷ்ணன் தமது இந்திய தத்துவம் என்னும் நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்: "இந்திய தத்துவம் ஆன்மீகவயமானது. அதன் உள்ளார்ந்த ஆன்மீக வலிமைதான், காலத்தை வென்று, வரலாற்றில் தோன்றிய ஆபத்துக்களை மீறி இந்தியா நிலைத்து நிற்பதற்குக் காரணம். ஆன்மீக நோக்கு தான் இந்திய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்திய மனத்தின் திடகாத்திரமான ஆன்மீக சிந்தனைதான் அதன் பண்பாட்டையும், தத்துவத்தையும் வழிப்படுத்துகிறது. ஜீவான்ம, பரமான்ம ஐக்கியத்திற்கான சிந்தனைகளும், முயற்சிகளுமே ஆன்மீக நோக்குகளின் செயல்பாட்டு வெற்றிக்குக் காரணமாகும்."

"இந்த ஆன்மீகச் சிந்தனையே, மேநாட்டு விமர்சன அறிவியல், பொருள்முதல்வாதச் சிந்தனைகளுக்கு முரண்பட்டு நிற்கிறது. அந்தராத்மாவின் குரலாக இந்தியச் சிந்தனை இருப்பும், வளர்ச்சியும் அடைந்துள்ளது. மேநாட்டுச் சிந்தனை விஞ்ஞானம், தருக்கம், மனிதாபிமானம் ஆகிய கருத்துக்களில் அழுத்தம் கொடுக்கிறது. இவை யாவும் ‘மனத்தின்’ செயல்கள். மனத்தைவிட ஆழ்ந்த ஒருண்மை ‘ஆன்மா’ இதைப் பகுத்தறிவினாலோ, தருக்கங்களாலோ அறிய முடியாது. உள்ளுணர்வினால்தான் உணர முடியும். இந்துக்களுக்கு தத்துவக் கட்டமைப்பு என்பது உள்ளுணர்வு, அந்தராத்மாவின் செயல்களின் விளைவே. பகுத்தறிவினால் ஆன்மாவை அறிய முடியாது. இதனால்தான் இந்து தத்துவங்களைத் 'தரிசனங்கள்' என்று அழைக்கிறோம். கடவுளை அறிவதென்பது அவராகவே ஆகிவிடுவதுதான். புற உலகிற்கு இச்செயலில் தொடர்பு எதுவும் இல்லை. மேநாட்டு அறிஞர்கள் விமர்சன அறிவைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிழக்கத்திய ஞானிகள் “படைப்பாக்கமுள்ள உள்ளுணர்வையே சார்ந்து நிற்கிறார்கள்.”
இவ்வாறு தருக்க முறைகளையும், அறிவியல் ஆராய்ச்சியையும் முக்கியமற்றவை என்று ஒதுக்கிவிட்டு, நிலையான, உண்மையான வாழ்க்கைக்கு கடவுளை நம்பி அவராகவே ஆகும் முயற்சியை மேற்கொள்ளுமாறு இந்திய தத்துவங்கள் போதிக்கின்றன என்று எஸ். ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். “இந்தியத் தத்துவங்கள் அனைத்து வாழ்க்கையின் மகத்தான உண்மையான கடவுளை (“One great fact of life God”) அறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.” “உபநிஷதங்களில் இலைமறை காயாகக் கூறப்பட்ட இந்த மகத்தான உண்மையை, பின்னர் தோன்றிய தத்துவங்களெல்லாம் விளக்கிக் கூறுவனவே. ஆன்மா கடவுள் பற்றிய சிந்தனையின் விளக்கவுரையாகவே பிற்கால இந்த தத்துவங்கள் விளங்குகின்றன”.
ராதாகிருஷ்ணன் எழுத்துக்களில் இருந்து இவ்வளவு விரிவாக மேற்கோள் கொடுக்க வேண்டியதன் அவசியம், அவர் எல்லா ஆன்மீக வாதிகளின் பிரதிநிதியாக மிக அழுத்தமாக அவருடைய கருத்தைச் சொல்லுகிறார் என்பதனால்தான்.
இக்கருத்து மிகவும் தைரியமாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆன்மீக வாதத்தின் மீது ராதாகிருஷ்ணன் கொண்டுள்ள வலுவான பிடிப்பு அவரைத் தம் கருத்துக் களைப் பயமில்லாமல் சொல்ல வைக்கிறது. ஏனெனில் தைத்திரிய உபநிஷதம் பின்வருமாறு கூறுகிறது:
“பிரம்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எக்காலத்தும் பயப்பட மாட்டான்.” இதை நம்புகிறவர் அல்லவா ராதாகிருஷ்ணன்?
இக்கூற்றுக்கு இந்திய தத்துவங்களில் ஆதாரம் ஏதாவது ராதாகிருஷ்ணன் தருகிறாரா? இல்லையே!
ராதாகிருஷ்ணன் சிலாகித்துப் பேசும் “உள்ளுணர்வு” பற்றி குமரில்லபட்டர் எள்ளி நகையாடுகிறார். இவர் ஆதிசங்கரரின் குருவென்று கருதப்படுகிறார். இவரது காலம் 6-ம் நூற்றாண்டு. ராதாகிருஷ்ணனது ‘ஆன்மீகம்’, ‘கடவுள்’, ‘உள்ளுணர்வு’ என்ற கருத்துக்கள் இந்தியத் தத்துவங்களில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே. சிந்தனை உலகிலேயே மிகவும் சிறப்பான தருக்க வாதத்தில் ‘கடவுள் இன்மை’க் கொள்கையை இந்திய தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன.
இவ்வாறு நான் சொல்வது திகைப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. “கடவுள் இன்மை”க் கொள்கையைத் தான் தற்காலத்தில் 'நாத்திகம்' என்றழைக்கிறோம். இக்கொள்கை இந்தியத் தத்துவ வரலாற்றில் மிகவும் பழமையானது. நடுக்காலத்தில்கூட இக்கொள்கைக்காகப் போராடிய போராளிகள் இருந்தார்கள்.
வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன. இவர்களை நாத்திகர் என வேதங்களை நம்பியவர்கள் அழைத்தார்கள். இவர்களை வேதப்பாடல்களை இயற்றிய கவிகள் ‘விதண்டாவாதிகள்” என அழைத்தார்கள். ராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்கள் இவர்களைப் பற்றியப் பேசுகின்றன. அவை சாருவாகர், லோகாயதர், பூதவாதிகள் என்று இவர்களைக் குறிப்பிடும். இவர்கள் முரணற்ற நாத்திகவாதக் கொள்கையைக் கடைப்பிடித்த வர்கள். சாங்கியவர்கள் ‘பிரக்ருதி பிரதானம்’ என்ற கொள்கையுடையவர்கள். பிரக்ருதி என்ற பொருளில் இருந்துதான் அதன் இயக்க வளர்ச்சியால் புத்தி, சித்தம் முதலிய மனம் தொடர்பான இயல்புகள் தோன்றின என்று சாங்கியவாதிகள் நம்பினார்கள். அவர்களுடைய பண்டைத் தத்துவத்தில் படைப்பாளி என்ற கடவுளுக்கு இடம் கிடையாது. பொருளின் இயற்கையால்தான் உலகம் இயங்கி பரிணாம மாற்றம் அடைகிறது என்ற கருத்துத்தான் இருந்தது. இக்கொள்கைக்கு கடவுள் இல்லாத சாங்கியம் என்று பிற்கால ‘கடவுள் உண்டு’ என்று கூறிய தத்துவவாதிகள் பெயரிட்டழைத்தனர். அவர்கள் சாங்கியத்தில் கடவுளைப் புகுத்தி யேஸ்வரசாங்கியம் (கடவுளோடு கூடிய சாங்கியம்) என்றவோர் தத்துவத்தைப் படைத்தார்கள். பழமையான (பூர்வ) சாங்கியத்தில் கடவுள் கருத்து இல்லை. ஒரு தற்காலத் தத்துவாசிரியர் கூறுகிறார்: “புற உலகும், அக உலகும், பிரக்ருதி (பொருள்) என்ற வஸ்துவின் பரிணாம வளர்ச்சியின் விளைவுகளாகும். இச்செயல் தொடருக்கு பிரக்ருதிக்கு வெளியேயுள்ள எந்த சக்தியும் தேவை இல்லை.” எனவே சாங்கியம் பொருள் முதல்வாத அடிப்படையில் நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

பண்டைய மீமாம்சகர்கள் இந்திய ஆன்மீகவாதத்தின் பரம விரோதிகள். பூர்வ மீமாம்சகர்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களை ஆதரிப்பவர்கள். இவை இனக்குழு சமுதாயத்தில் தோன்றிய மந்திர, மதச்சடங்குகள், மதச்சடங்குகளில் பல்வேறு தேவர்களை அவர்கள் வழிபட்டார்கள். ஒவ்வொரு யக்ஞத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவர்கள் அக்னி, வருணன், இந்திரன், வசுக்கள், வாயு முதலிய இயற்கைச் சக்திகள். இச்சக்திகளை மனித உருவம் கொடுத்து, படிமங்கள் இன்றியே அவர்கள் வழிபட்டார்கள். ‘ஒருவனே தேவன்’ என்ற கடவுள் கொள்கை அவர்களுடைய சிந்தனையில் இல்லை. பிற்காலத்தில் இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு, அரசுகள் தோற்றம் கொள்கிற காலத்தில் அரசர்களுக்காக யாகங்கள் செய்து, அரசர்களது புகழை வளர்க்க இவர்கள் புரோகிதர்களாக மாறினார்கள். அப்பொழுதும் பல தெய்வ வணக்கத்தை மேற்கொண்டு கடவுளை எதிர்த்தார்கள். இவர்களே பூர்வ மீமாம்சகர்கள். இவர்களுடைய கருத்துக்கள் வளர்ச்சியடைந்த நாத்திக சிந்தனையாகும்.
நியாய வைசேசிகர்களுடைய நிலை சந்தேகத்துக்கு இடம் தருவது.
பௌத்தம் கடவுளையும் ஆன்மாவையும் மறுக்கிறது. ஜைனர்களுடைய கொள்கை சந்தேகமானது. எனினும் அவர்கள் தங்கள் சமயத்தைப் போதித்த 23 தீர்த்தங்கரர்களின் அறிவையே தெய்வமாகக் கருதினர்கள்.
எனவே இந்திய நாத்திகம் பல்வேறு கொள்கைகளையுடைய பலவிதமான சமயக் கொள்கைகளை உடையவர்களோடு நேச உறவு கொண்டிருந்தது. இதிலிருந்துதான் அதன் பலவீனம் தோன்றுகிறது.
ஆனால் இந்திய நாத்திகர்களது பொதுவான தருக்கம் இதுதான். தவறான தருக்க முறைகளால்தான் ‘கடவுள்’ என்ற கருத்தையடைய முடியும். கடவுள் என்ற கொள்கை பொய்யான ஒரு நம்பிக்கையை நிஜம் என்று கருதுவதுதான். இந்தப் பொய்யை, பொய் என்று நிரூபிப்பதே இந்திய நாத்திகத்தின் கடமையாக இருந்தது.

கடவுள் இல்லையென்றால், கடவுள் என்ற பேரின் மீது தோன்றி வளர்ந்துள்ள, அடிமரம், கிளைகள் போன்ற வேறு நம்பிக்கைகளையும் உதறித்தள்ளியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடவுள் என்ற ஒரே ஒரு நம்பிக்கையைப் பொய் என்று நிரூபிப்பதிலேயே அவர்களது சிந்தனை முயற்சியெல்லாம் குவிக்கப்பட்டிருந்தது. வேறு நம்பிக்கைகளான, நரகம், சுவர்க்கம், விதி என்பனவற்றை அவர்கள் மறுக்கவில்லை. இதற்கு ஒரு உதாரணம், கடவுளே மறுத்த மஹாயான பௌத்த விகாரைகளின் (பௌத்த மடங்களில்) சுவர்களில் பற்பல பேய்கள், பிசாசுகள், ஆவிகள், சிறு தெய்வங்கள், புத்தர்கள் ஆகியவற்றின் சிலைகளைக் காணலாம். இந்த மடங்களில் வாழ்ந்த பௌத்த பிட்சுக்கள் தாம், கடவுளை மறுக்கிற மிகவும் சிக்கலான தருக்க வாதங்களை உருவாக்கினார்கள்.
நாத்திகத்தை ஒப்புக்கொள்கிற தத்துவவாதிகளின் நோக்கங்கள் வெவ்வேறாயிருக்கலாம். ஆனால் ‘கடவுள் இல்லை’ என்பதற்கு அவர்கள் காட்டும் தருக்கவாதங்களில் ஒற்றுமை இருந்தது. பல கோணங்களில் தத்துவ சிந்தனையில் வேற்றுமை வெளிப்பட்ட போதிலும் நாத்திகம் மிகவும் திருப்தியளிக்கும் கருத்தாக இந்திய தத்துவவாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. மூன்று கேள்விகளுக்கு நாத்திகமே சரியான விளக்கம் தருவதாக இந்தியத் தத்துவவாதிகள் கருதினர்.

  1. ஒப்புக்கொள்ளப்பட்ட தருக்க முறைகள் பெற்றாலாவது கடவுள் உண்டு என்று நிரூபிக்க முடியுமா?
  2. புற உலகின் தோற்றத்தை விளக்க கடவுள் உண்டு என்ற கொள்கை அவசியந்தானா?
  3. மனித கதியை விளக்கவும், மனிதச் செயல்களை அறியவும், உலகை நெறிப்படுத்தும் ஓர் சக்தியை அவதானிப்பது அவசியமா?

இக்கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற தத்துவவாதிகள் கடவுள் என்னும் கருத்தை நிராகரிக்கும்படியான நிலைமைக்குச் சென்றார்கள். இந்தியத் தத்துவங்களில் பல இக்கேள்விகளைவேறு பிரச்சினைகளோடு குழப்பாமல், தெளிவாகத் தருக்க முறைகளாலேயே விடைகாண முயன்றன. தங்கள் வேறு கொள்கைகளோடு தொடர்புபடுத்தாமல் இக்கேள்விகளுக்கு தருக்க ரீதியாக விடைகாண முயன்றார்கள். கடவுள் நம்பிக்கையை அதன் சுயமான மதிப்பில் அவர்கள் ஆராய்ந்தார்கள். இக்கேள்விகளுக்கு பதில்களைத் தருக்க இயலிலேயே கண்டார்கள்.
பலவகை முரண்பாடுகள் வாய்ந்த இந்திய தத்துவங்களில், மேலே சொன்ன கவனத்தில்தான் ஒரு ஒருங்கமைப் பும், ஒரே விதமான சிந்தனைப் போக்கும் தோன்றியது. உலக கண்ணோட்டத்தில் வேறுபட்ட பல தத்துவங்கள், கடவுள் என்ற கருத்தை மட்டும் தருக்க ரீதியாக ஆராய்ந்ததால்தான், கடவுள் என்ற கருத்துக்கு எதிரான வாதங்கள் கூட ஒரே விதமாக உள்ளன.
இந்தியத் தத்துவ வாதிகளில் மிகப் பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்திய தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது. இன்று கூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள் வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம்.
அப்படியானால் மிகச் சிறந்த தத்துவ வாதிகளும், தருக்க நிபுணர்களும் நாத்திகவாதிகளாயிருந்தும், இந்தியாவில் நாத்திகம் பரவவில்லையே, ஏன்? வேதகால முதல் பெரியார் காலம் வரை தொடர்ச்சியான நாத்திகவாதம் இந்தியாவில் வழங்கி வந்திருந்தும் இங்கு மக்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பது ஏன்?
இதன் காரணத்தை தத்துவ வேலிக்கு அப்பால் சென்று காணவேண்டும். கடவுள் நம்பிக்கைக்கு உணவு அளிக்கும் அடிப்படை எது? இக்கேள்விக்குப் பதிலளிக்க மார்க்சின் சிந்தனை உதவுகிறது.
இந்திய நாத்திகர்கள் கடவுள் ஒரு பொய்த் தோற்றம் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப் பாடுபட்டார்கள். அவர்களுடைய தர்க்க முயற்சிகள் வெற்றி பெற்றன. ஏனெனில் அவர்களுடைய வாதங்களுக்கு பதிலளித்த ஆன்மீகவாதிகள் தர்க்க ரீதியாக விடைகூற முடியவில்லை. ஆயினும் இந்திய நாத்திகவாதிகள் மார்க்சுக்கு முந்திய மேநாட்டு நாத்திகவாதிகளைப் போலவே கடவுளை சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்து தனியாக ஆராய்ந்தார்கள்.
மார்க்ஸ்தான் சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது என்ற மகத்தான உண்மையை விளக் கினார். ஒவ்வொரு சமூகமும் அது நிலைத்திருப்பதற்கான பொருளுற்பத்தியில் ஈடுபடுகிறது. அச்சமூகத்தில் வாழ்கிற மனிதர்கள், இப்பொருளுற்பத்தியில் வகிக்கும் ஸ்தானத்தின் நிலையால் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளுகிறார்கள். ஆகவே உற்பத்திச் சாதனங்களுக்குச் சொந்தக்காரர்களும், உற்பத்திக்கு உழைப்பை அளிப்பவர்களுமாக சமூகம் பிரிகிறது. இந்த அடிப்படையில்தான் அக உலகம் மனத்தால் படைக்கப்படுகிறது. சிந்தனைகள் மேற்கோப்பாக, சமூக அடிப்படையின் மீது எழுகின்றன. சமூக விருட்சத்தின் ஆணிவேர் பொருளாதார அடிப்படையும், உறவுகளுமே. தரைக்கு மேல் தெரிகிற மரம், கிளை, இலை போன்றுதான் மனதின் சிந்தனைகள். புற உலக வாழ்க்கைதான் சிந்தனைக்குக் காரணம். கடவுள் கூட ஒரு குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சி கட்டத்தில் மனிதனால் படைக்கப்பட்ட ஒரு கருத்துத்தான். சிந்தனைகள்கூட சமூக அடிப்படையின் இயக்கத்தை வேகமாக்கவோ, மந்தப்படுத்தவோ செய்யலாம். ஆனால் முற்றிலும் மாற்றிவிட முடியாது. அடிப்படை மாற்றப்பட்டால், சிந்தனைகள் மாறும். இது உடனடியாக நிகழாது. பழைய சமுதாய அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் பல காலம் மக்கள் மனத்தில் நீடிக்கும். இதனால்தான் சிந்தனைகளை எதிர்த்து நடத்துகிற தர்க்கப் போராட்டம் மட்டும் வெற்றியடைவதில்லை. சிந்தனையின் சமூக அடிப்படையை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனை மாறும். ‘கடவுளை பற்றி நினைத்து மனிதன் ஏங்குவதைத் தடுக்க, சமூகப் புரட்சி ஒன்றால்தான் முடியும்.’ இது மார்க்ஸின் சிந்தனை.
இந்திய நாத்திக வாதிகள் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன் இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையில்தான் அப்போது இருந்தன. எனவே அறிவியல் இயக்க விதிகளை அவர்கள் பயன்படுத்தித் தங்கள் நாத்திக வாதங்களை உருவாக்க இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திக வாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது. அவர்களுடைய வாதங்கள் சொல் அமைப்பு, டார்வினது பரிணாமம், புதிய அணுக்கொள்கை, ரசாயன மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக் கொண்டிருந்தது. ஆயினும் விஞ்ஞான சோஷலிஸக் கொள்கையின் முதல்வர்களுக்கு, பிற்கால நாத்திகவாதிகளின் கொள்கைகள்கூட திருப்தியளிக்கவில்லை. அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல் வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சித்தனையை உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம் கொடுத்த பின்னர்தான், நாத்திகம் சித்தனைப் போக்கில் அதன் ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது.
இக்குறைபாடு இந்திய நாத்திகத்தில் இருந்தபோதிலும் கூட, தத்துவ வரலாற்றின் சிந்தனைப்போக்கில் மிக முக்கியமான தர்க்க வாதங்களை அவர்கள் படைத்துள்ளார்கள். ‘கடவுளே’, ‘இந்திய தத்துவ சிந்தனையில் இருந்து அகற்றுவதற்கு அவர்களுடைய சிந்தனை முயற்சிகள், அவர்களுடைய தர்க்க வாதங்கள், பல நூற்றாண்டுகளாகத் தோற்கடிக்க முடியாமலே இருந்தது.
இக்கட்டுரையில் ‘நாத்திகம்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மேநாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகள் என்று ஏசப்பட்டார்கள். ‘சூரியனை ஒரு தெய்வம்’ என்று கருதி வந்த காலத்தில் அனெக்ஸ கோராஸ் என்னும் தத்துவஞானி, ‘அது பொருளால் ஆக்கப்பட்ட ஒரு வஸ்து’ என்று கூறினார். அவரை நாத்திகர் என்று குற்றம் சாட்டி, கிரேக்கர்கள் நாடு கடத்தினார்கள். ஸாக்ரடீஸ் தமது புதிய தத்துவத்தை, விளக்கியபோது அவர் நாத்திகர் என்ற பட்டம் சூட்டப்பட்டார். ‘மறு உலகம் இல்லை’ என்று வாதித்த எபிக்யூரஸ், நாத்திகர் என்று அழைக்கப்பட்டார்.
மேற்குறிப்பிட்ட தத்துவ ஆசிரியர்களெல்லாம் கடவுள் இல்லை என்று வாதித்தார்கள்? அவர்களுடைய ‘கடவுள்’ ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிற கடவுளாக இல்லை. எனவே அரசை ஆதரிக்கிற, பாதுகாக்கக்கூடிய சிந்தனைகளை உருவாக்கிப் பரப்பிய சிசரோ, புளூடார்க் ஆகிய தத்துவ ஞானிகள், தங்களுக்கு உதவாத அனெக்ஸகோராஸ் முதலிய தத்துவ ஞானிகளின் தத்துவங்களை நாத்திகம் என்று அழைத்தார்கள்.
தற்காலத் தத்துவாசிரியர்களில் சிலர் ஆளும் வர்க்கத்தின் அரசுக்குப் பயன்படாத தத்துவங்களைப் போதித்ததால், நாத்திவாதிகள் என்று அரசுக்கு ஆதரவான தத்துவவாதிகளால் பழிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். ‘கடவுள் வெறி’ பிடித்த ஸ்பைனோஸா, நாத்திகர் என்ற பட்டத்தோடு சமய விலக்கு செய்யப்பட்டார். பைபிளில் காணப்படும் அர்ச். ஜானின் ‘காட்சி’ (Revelation) என்ற வருங்காலம் பற்றிய வாக்குகளை ஆதரித்து எழுதிய ஃபிட்ஷே (Fitche) என்ற தத்துவவாதி, அரசை ஆதரிக்காததால், தம்முடைய பேராசிரியர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
இதிலிருந்து ஆதிக்கத்திலுள்ள தத்துவக் கொள்கைகளுக்கு முரணான எந்தக் கொள்கையும் நாத்திகம் எனக் கருதப்பட்டது என்று பொருள்படுகிறது.
இத்தகைய கொள்கைக் குழப்பம் இந்தியாவில் இருந்ததில்லை. இவ்வாறு கூறுவதனால் சமய விரோதங்களும், போராட்டங்களும் இருந்ததில்லை என்று நான் சொல்லுவதாக எண்ண வேண்டாம். பல சமய முரண்பாடுக்ளும், சமய விரோதங்களும் பண்டைக்கால முதல் இந்தியாவில் இருந்து வந்துள்ளன. ஆனால் அவை நாத்திகம், ஆதிக்கம் என்ற கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எண்ணப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ‘ஆத்திகம்’, ‘நாத்திகம்’ என்ற சொற்கள் பொருள் தெளிவோடு பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணமாக வேத யக்ஞங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் ‘ஆத்திகர்’ என்றும், அவற்றை எதிர்ப்பவர்கள் ‘நாத்திகர்’ என்றும் பண்டைக் காலத்தில் கருதப்பட்டனர். ‘கடவுள்’ நம்பிக்கை என்பது வேறோர் பிரச்சினையாக இருந்தது. உதாரணமாக வேத யக்ஞங்களை நம்பிய மீமாம்சகர்கள் ஆஸ்திகர்கள்தான். ஆனால் இவர்கள் தான் கடவுள் மறுப்பில் மிக முனைப்பாக இருந்தவர்கள். சைவர்களும், பாசுபதர்களும் சிவன் ஒருவனே சகல சக்திகளும் வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையுடையவர்கள். இவர்கள் வேதங்களைப் பிரமாணம் என்றே, முக்கியத்துவம் கொண்டவையென்றே கருதவில்லை. அதனால் கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் நாத்திகர்கள் என்று வேதவாதிகளால் கருதப்பட்டார்கள். சமூக ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி, அரசின் பாதுகாப்புக்கு ஏற்ற நீதி-ஒழுக்க முறைகளை வகுத்த, மனு முதலிய நீதி நூலார், சைவர், பாசுபதர் முதலியோரைத் தீண்டத்தகாதவர் என வருணித்தார்கள். அவர்களைத் தீண்டிவிட்டால் உடனே குளிக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள். சமயவெறியும், பகைமையும் இந்தியாவிலும் இருந்துள்ளது என்பதற்கு நீதி நூல்களே. சான்று கூறுகின்றன.
ஆனால் ‘கடவுள்’ என்ற சொல்லுக்குத் தெளிவான பொருளை இந்தியத் தத்துவம் வழங்கியுள்ளது. கடவுள் என்பவர் “அனைத்தையும் படைத்து அளித்துக் துடைப்பவர், உலக ஒழுங்கு, நியதிகளுக்கெல்லாம் காரணம் ஆனவர் (moral governor). அவனன்றி ஓரணுவும் அசையாது.” இத்தகைய தன்மைகள் கொண்டவர் கடவுள், இக்கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் ஆத்திகர்கள். இதனை மறுப்பவர்கள் நாத்திகர்கள்.
இத்தெளிவான பொருளில் மிகப் பெரும்பாலான இந்தியத் தத்துவவாதிகள் நாத்திகர்களே. “கடவுள்” என்ற மாயக்கருத்து ஒரு மூட நம்பிக்கை; பொய்யான ஒன்றை உண்மை என்று நம்புவது தவறாக மதிப்புச் செலுத்தப்படும் ஓர் கற்பனை என்றே நாத்திகவாதிகள் கருதினர்.
மிகப் பல நாத்திகவாதிகள் ‘கடவுளை’ஆழ்ந்த அங்கத உணர்ச்சியோடு கேலிசெய்தார்கள் ஒரே ஒரு உதாரணம் தருவோம். ஆத்திகர்கள் கடவுளுக்குப் பல இயல்புகளைக் கற்பனையில் படைத்தார்கள். சர்வ வல்லமை, சர்வ ஞானம், எவ்விடத்தும் இருத்தல் ஆகிய இயல்புகளை அவருக்கு அளித் தார்கள். கடவுளை பரிபூரணானந்தம் என்று கருதி உள்ளமுருகிப் பாடினார்கள்.

இவை குறித்து குணரத்னா என்னும் ஜைனத் துறவி கீழ் வருமாறு எழுதினார்:

“இக்குணங்களையெல்லாம் இல்லாத ஒன்றிற்குப் படைப்பது வீணானது. ஒரு அழகிய இளம்பெண்ணை, வீரியமற்றவனுக்கு அளிப்பது போன்றது இது. பாலுணர்ச்சி இல்லாதவனுக்கு, அழகிய இளம்பெண் எப்படிப் பயனற்றவளோ, அதுபோலவே இல்லாத கடவுளுக்கு இந்த இயல்புகளும் பயன்படாது.”

இது, கடவுள் மூடநம்பிக்கையின் சிகரம் என்று காட்ட ஜைனர்களின் உவமை. இவ்வாறு உவமைகளால் மட்டும் இந்திய நாத்திகர்கள் மக்களை வசப்படுத்த முயலவில்லை. கடவுள் என்ற கருத்துப்பற்றி தத்துவ ரீதியான வாதங்களை அவர்கள் முன் வைத்தார்கள். கடவுள் என்ற நம்பிக்கையின் முரண்பாடுகளைத் தர்க்க ரீதியாகச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நாத்திகர்கள் வேறு நம்பிக்கைகளுக்கும், தங்கள் கடவுள் இன்மைக் கொள்கைக்கும் முரண்பாடுகள் இருப்பினும், கடவுளை மறுக்கும் வாதங்களில் முரண்பாடு எதுவும் இல்லாமலேயே தர்க்க ரீதியாக வாதித்தார்கள். நாத்திகர்களது பிற நம்பிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை ஆத்திகர்கள் தர்க்க ரீதியாகத் தாக்க முடியவில்லை. ஏனெனில் அவை போன்ற பல நம்பிக்கைகளையே அவர்கள் கொண்டிருந்தார்கள். உதாரணமாக விதி, கர்மம், நரகம், சுவர்க்கம் போன்ற ஆத்திகர்களின் நம்பிக்கைகள், நாத்திகர்கள் நம்பிக்கைகளோடு ஒன்றுபட்டது.